இயக்க மகளிர் சந்திப்பு (15) பகுத்தறிவு சிந்தனை ஏற்பட ஜோசியரே காரணம்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர் இந்திராகாந்தி அம்மா

வி.சி.வில்வம்

சில பெயர்கள், கேட்டவுடன் நினைவில் நிற்கும்! இன்னும் சொன்னால் பெயரிலே ஒரு கம்பீரம் இருக்கும்! காரணம் வரலாற்றுப் பெயர்களை, தலைவர்களின் பெயர்களை அவர்கள் வைத்திருப்பார்கள்!
விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியில் “பெயர்கள்” குறித்தே ஒரு விவாதம் நடந்தது! அதில் தமிழ்நாடு, முதலமைச்சர் போன்ற வியக்கத்தக்க பெயர்கள் எல்லாம் தெரிய வந்தன!
நமது இயக்கத்தில் கூட பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிடன், இராவணன் போன்ற பெயர்கள் உண்டு! மாஸ்கோ, ரஷ்யா, கியூபா என்கிற காரணப் பெயர்களும் இருக்கின்றன!
அப்படித்தான் இன்றைக்கு நாம் சந்திக்க இருக்கும் இயக்க மகளிர் பெயர் இந்திராகாந்தி! வயது 53 ஆகிறது! அரியலூர் மாவட்டத்தில் உள்ள மத்துமடக்கி பகுதியில் வசிக்கிறார்.

இணையர் பெயர் இராமச்சந்திரன். மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். 1988 ஆம் ஆண்டு இவர்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றுள்ளது!
திருமணத்திற்கு முன்பு வரை இந்திராகாந்தி அவர்கள் ஆன்மீக நாட்டத்திலே இருந்துள்ளார்! திருமணம் முடிந்த பிறகும் கோயில், பூஜை எனத் தொடர்ந்திருக்கிறது. இணையர் அவ்வப்போது பெரியாரின் கருத்துகளைக் கூறி வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பி தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார் என ஜோசியர் கூறினாராம். ஆனால் அவர் தோல்வி அடைந்துவிட்டாராம். “தான் யோசிக்கத் தொடங்கிய இடம் இதுதான்”, என்கிறார் இந்திராகாந்தி அவர்கள்!
ஒவ்வொருவருக்கும் சிந்திக்க ஒரு கணமும், பகுத்தறிவு வாழ்வைத் தொடங்க ஒரு தருணத்தையும் தமிழ்நாடு வழங்கிக் கொண்டே இருக்கிறது! ஆரிய நச்சுகளால் பாழ்பட்டுக் கிடந்த இந்த மண்ணை, பகுத்தறிவுக் கலப்பையால் உழுது, சுயமரியாதையை விளைவித்த பெரியாரின் பூமி அல்லவா இது!

அதனால் தான் கிராமத்தில் பிறந்து, கிராமத்திலே வாழ்ந்தாலும் அறிவியல் சிந்தனையுடன் வாழ முடிகிறது! அதுவும் கருப்புடை அணிந்து, குடும்பத்தோடு வலம் வர முடிகிறது! இவரின் இணையர் தம் மிதிவண்டியில், “ஒரு பெண் படிப்பது, நான்கு ஆண்கள் படிப்பதற்குச் சமம்”, என எழுதி வைத்திருப்பாராம்!
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
ஒருவர் மருத்துவர், மற்றொருவர் பொறியாளர். சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் விரும்பிய படிப்பை, சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெற்றோர்! மருத்துவம் படிக்கும் தமிழ்மணி, அறுவைச் சிகிச்சைக்கான உயர்கல்வியைப் பயின்று வருகிறார். தமிழ்மணி – கரிகாலன் இணையேற்பை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நடத்தி வைத்துள்ளார்.

பொறியாளர் இலக்கியா, பொன்பரப்பி எனும் ஊரில் “அன்பு பைனான்ஸ்” எனும் நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். வேலை கேட்கும் இடத்தில் அல்ல; வேலை கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்கிற பெரியாரின் விருப்பமே, இவரின் சுயதொழிலுக்கான காரணமாம்! இலக்கியா – அன்பரசன் இணையேற்பை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்துள்ளார்!
“நான் 3 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். ஆனால் திராவிடர் கழகத்திற்கு வந்த பிறகு, பகுத்தறிவுச் சிந்தனை கிடைத்த பிறகு, என் வாழ்க்கைக் குறித்த பார்வையே மாறிவிட்டது! ஒரு பிள்ளையை மருத்துவராகவும், மற்றொரு பிள்ளையைப் பொறியாளராகவும் ஆக்கித் தந்திருக்கிறது இந்தச் சுயமரியாதை இயக்கம்”, என்கிறார் இந்திராகாந்தி.
அதுமட்டுமல்ல நாத்திக வாழ்வில் பக்தி இல்லை; கோயில் இல்லை என்பதோடு செலவுகளும் இல்லை என்பது ஒரு நிம்மதி. அவை நம்மிடம் சேமிப்பாக மாறுகின்றன. அந்தச் சேமிப்புக் கல்விக்குப் பயன்பட்டது!

மூன்றாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்பதை வெளிப் படையாகச் சொல்கிறார். ஒளிவு மறைவு என்பது இயக்கத்திற்கே கிடையாது எனும் போது, தோழர்களுக்கும் அதுதானே நடைமுறை! அதேநேரம் பிள்ளைகள் அற்புதமாக வளர்த்து, முன்னுதாரணமாக இருக்கிறார்! அதுமட்டுமின்றி கிராமத்திற்கே பெருமையும் சேர்த்துக் கொடுத்துள்ளார்! அணுகுமுறைகள் சிறப்பாக இருந்தால், அனைத்து மனிதர்களிடமும் அன்பு பாராட்டலாம் எனும் வெற்றியின் சூத்திரத்தையும் அழகாக எடுத்துரைக்கிறார்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு பொன்மொழியை இயக்கத்திற்குக் கொடுத்தார்கள். “நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” இந்த வாசகத்தைத் தோழர்கள் பலரும் தம் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதைத் தொழிலுக்கே பயன்படுத்தி வருபவர்கள் இந்திராகாந்தி – இராமச்சந்திரன் இணையர்கள்.
ஆம்! “நம்மால் முடியும்” என்கிற பெயரில் ஏலச்சீட்டு நடத்துகிறார்கள். 6 ஆண்டுகளாக நடைபெறும் இதை, வாட்சப் மூலமே நிர்வகித்து வருகிறார்களாம்!

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதை அனுபவித்து மகிழ்கிறேன்”, என்கிறார் இந்திராகாந்தி. இயக்கக் குடும்பங்களைச் சந்திப்பதும், பேசுவதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதேபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உறவினர்களிடம் கொள்கை குறித்தும் பேசுவேன் என்கிறார். தற்சமயம் அரியலூர் மாவட்ட மகளிரணி தலைவராக இருக்கிறார்!
இவர்கள் கிராமத்தில் பார்ப்பனர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது மிக, மிகக் குறைவாம்! அதுமட்டுமின்றி யாராவது இறந்தால் படத்திறப்பு நிகழ்ச்சி நடக்குமாம்.

அதாவது கருமாதி போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும்; படத்திறப்பும் நடக்குமாம்.‌ இறந்த மனிதரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மரியாதை செய்ய, நம் இயக்கத் தோழர்களை அழைப்பார்களாம்! பொன்மல்லனார், பாவலராயர் ஆகியோர் இந்தக் கிராமத்தில் பெரியளவிற்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்துள்ளார்களாம்!
திமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி அவர்களின் அப்பா ஹரி கோவிந்தன் அவர்கள் தான் இந்திரா காந்தி அவர்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியராம்!

ஆசிரியர் அவர்கள் எப்போது சந்தித்தாலும்,
“என்னம்மா இந்திராகாந்தி, எப்படி இருக்கீங்க”, என்று கேட்பார். அந்த ஒற்றை வார்த்தை பெரும் மனநிறைவைத் தரும். அதேபோல பிள்ளைகளையும் விசாரிப்பார்கள். தலைவரைச் சந்திக்கும் போது, எப்போதும் நான் முந்திரிப் பருப்பு கொடுப்பேன். ஆசிரியரின் அன்பும், நினைவாற்றலும் எப்போதும் நினைவில் நிற்பவை எனத் தம் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார் இந்திராகாந்தி அவர்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *