சென்னை, மே 8- ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு மற்றும் உணவகத்தில் சிபிசிஅய்டி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் கடந்த 6-ஆம் தேதி நெல்லை விரைவுரயிலில் ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணத்தை கொண்டு சென்றதாக பாஜக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயி னார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், சிறீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த பணத்தை நயி னார் நாகேந்திரனுக்கு கொண்டுசெல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதை நயினார் நாகேந்திரன் மறுத்தார்.
இதற்கிடையே தாம்பரம் ஆணையர் அமல்ராஜின் பரிந்துரையை ஏற்று இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஅய்டி-க்கு மாற்றி காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தொடர் புடைய ஆவணங்கள் சிபிசிஅய்டி பிரிவு காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன்பேரில் அப் பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் விசாரணையை தொடங்கினார்.
இதனிடையே தாம்பரம் காவல்துறையினர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக 4 பிரிவுகளில் சிபிசிஅய்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர். மேலும் ரயிலில்பணத்துடன் பிடிபட்ட மூவரும் வரவழைக்கப்பட்டு சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரித்தனர். அவைஅத்தனையும் காட்சிப் பதிவு மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் எனக் கூறப்படும் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப் பட்டது. அடுத்த கட்டமாக சென்னை நீலாங்கரையில் வசித்துவரும் பாஜக பிரமுகர் கோவர்த்தனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டதால், வீட்டில் இருந்த அவரது மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விட்டு காவல்துறையினர் திரும்பினர். கோவர்த்தனன் சென்னை திரும்பிய பிறகு, மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்துவோம் என சிபிசிஅய்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கோவர்த்தனின் வீடு மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது உணவகத்தில் சிபிசிஅய்டி காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.