கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி – அம்பிகாபதி இணையரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே ஜாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத் தினர் மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்ன துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது, பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை ஜாதி ரீதியாக தாக்கு வதாகக் கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் “ஏன் எங்களைப் பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய்?” என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதைத் தடுக்க முயன்ற சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த கொடூரத்தைக் கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு பல்வேறு கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னதுரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்ப் பாடத்தில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும், பொருளாதாரத்தில் 42 மதிப்பெண்களும், வணிகவியலில் 84 மதிப்பெண்களும், அக்கவுண்டன்சியில் 85 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 94 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார் சின்னதுரை.
“காயம் காரணமாக படிக்க முடியாமல் போன தால் அவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது; இல்லையேல் இன்னும் அதிக மதிப்பெண்களை சின்னதுரை பெற்றி ருப்பார்” என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதனி டையே சின்னதுரையின் மேற்படிப்பைத் தொடர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த மாணவரோடு தொடர்பு கொண்டு, மேலே படிக்க எல்லா வகை உதவிகளையும் அளிப்பதாகக் கூறி, மாணவர் பெற்ற அதிக மதிப் பெண்களுக்காக தம் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
சமூகநீதித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பாராட்டுவோம்! கைதட்டி இன்னொரு முறை உற்சாகப்படுத்துவோம்!
“ஜாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி!” என்றார் தந்தை பெரியார் கொள்கை வழிவந்த புரட்சிக் கவிஞர்.
தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக உடன் படிக்கும் மாணவர்கள் அரிவாளால் வெட்டும் அளவுக்கு வெறி பிடித்திருப்பதை எப்படி அனுமதிப்பது? இத்தகு வன் மங்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண வண்ணக் கயிறுகளை மாணவர்களாகவா முடிவு செய்து கட்டுகின்றனர்? அதன் பின்புலத்தின் ஆணிவேரை அகற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல; தலைவர் களுக்கும், அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் உண்டு. ஜாதி வெறியர்களுக்குச் சரியான சவுக்கடி தான் மாணவன் சின்னதுரை சாதித்துக் காட்டிய அதிக மதிப்பெண்; சபாஷ் சின்னதுரை – பாராட்டுகள். மேலும் மேலும் படித்து சிகரத்தை அடைய வாழ்த்துகள்!
ஜாதி வெறியர்களும் பாடம் படிக்கட்டும்.