உத்தரப்பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புகடித்ததற்கு சிகிச்சை அளிக்காத காரணத்தால் ஓடும் கங்கை நதியில் மிதக்கவிட்டால் விஷம் நீங்கிவிடும் என்று கூறி கங்கையில் மிதக்க விடப்பட்ட இளைஞர் மரண மடைந்தார். உத்தரப்பிரதேசம் புலந்தசாகர் என்ற மாவட்டத்தில் உள்ளது ஜயராம்பூர். இங்கு ஒன்றிய அரசின் வரித்துறையில் அதிகாரியாக பணிபுரியும் விஜய்சிங் என்பவரின் மகன் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறார். 3.5.2024 அன்று கரும்புவயலில் நடந்து சென்ற அவரை பாம்பு கடித்தது. இதனை அடுத்து அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறிவிட்டதால் அவரை நகரத்திற்கு மேற்சிகிச்சைக்கு கொண்டு போக முயன்றனர்.
ஆனால், ஊர் பெரியவர்கள் ஓடும் கங்கை நதியில் இவரை படுக்கவைத்தால் விஷத்தை கங்கை நீர் எடுத்துக்கொள்ளும் என்று கூறியதால் அவரை மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்லாமல் அங்குள்ள கங்கை நதியில் நீண்ட கயிற்றில் கட்டி மிதக்கவிட்டனர். ஏற்கெனவே பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் தண்ணீரில் மிதக்கவிட்டதால் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்தது தெரியாமல் அவரை இரண்டு நாட்களாக நீரில் மிதக்கவிட்டனர்.
இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் தெரியாததால் கயிற்றை இழுத்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது, பின்னர் ஊரார் ஒன்று சேர்ந்து உடலை எரித்துவிட்டனர். பாம்பு கடித்தது தொடர்பான சிகிச்சை அளிக்காமல் மூடநம்பிக்கை காரணமாக அவரை நீரில் மூழ்கவைத்து அவரது இறப்பிற்குக் காரணமான நபர்கள் மீது யாரும் புகார் அளிக்கவில்லை – இதனால் காவல் துறையும் வழக்கு பதிவு செய்யவில்லை.
எப்படி இருக்கிறது இந்தச் செய்தி? வட மாநிலங்களில் மூடநம்பிக்கை என்னும் பாம்பு எப்படி எல்லாம் படம் எடுத்து ஆடுகிறது பார்த்தீர்களா!
அரசுத் துறையில் அதிகாரியாக இருந்தும், தன் மகனை மேல் மருத்துவ உதவிக்குக் கொண்டு செல்லாமல், மூடப் பக்தி கொண்டவர்களின் சொல் கேட்டு, கங்கை நதியில் மிதக்க விட்டார் என்றால் நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்?
படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான வெறும் லைசென்சாக இருக்கிறது என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது!
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் வடக்கே இல்லாததன் அருமை இதன் மூலம் புலப்படவில்லையா?
நியாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் தடுத்து, கங்கைக்கு அனுப்பியவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டாமா?
என்ன கொடுமை! செய்தியைப் படிக்கும் போதே குருதி கொதிக்கிறதே! அறிவியல் மருத்துவம் வளர்ந்த இந்தக் காலத்தில் இளைஞன் ஒருவனை பலி கொடுத்ததை மன்னிக்க முடியுமா?
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் பரப்பிட வேண்டும். இது அனைத்து குடிமக்களின் கடமை என்று அரசமைப்புச் சட்டம் (51-Ah) கூறி என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமாகத்தானே இருக்கிறது! வெட்கக் கேடு!