அக்னி நட்சத்திரம் என்று தொடர்ந்து மே மாதம் நாளிதழ்களிலும் – செய்தித் தொலைக்காட்சிகளிலும் இந்தச்செய்தி வரும் – ஆனால் இந்திய வானிலை ஆய்வு மய்யம் இது தொடர்பாக எந்த ஒரு அறிக் கையுமே வெளியிடாது; காரணம் இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை அச்சுறுத்தும் பார்ப்பனீய ஏமாற்று வேலைதான் இந்த அக்னி நட்சத்திரம்
அது பார்ப்பனியம் வகுத்த தோஷங்களில் ஒன்று. கத்திரி தோஷம் என்பார்கள்.
அவாள் கணக்குப்படி ஒரு லக்னம் ஆட்சியில் இருக்குமாம்.அப்போது லக்னத்திற்கு இரண்டாவது மற்றும் 12ஆவது இடத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இருந்தால் அதற்கு கத்திரி தோஷம் என்று பெயராம்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் நாள் தொடங்கி 28ஆம் தேதி வரை இருக்குமாம், வானில் எத்தனையோ விண்மீன்கள் இருக்க, இவர்கள் மட்டும் அக்னி நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தது போல் பேசு வார்கள். உண்மையில் நாம் பார்க்கும் விண்மீன்கள் அனைத்துமே நெருப்புக் குழம்புகள் தான்.
‘ஆல்பா கைனீஸ்’ என்ற விண்மீன் தான் இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்மீன்களிலேயே மிகவும் பெரியதாக உள்ளது. அது சுமார் 7 லட்சம் சூரியன்களை ஒன்றாக குவித்தது போன்ற மிகப்பிரம்மாண்டமான விண்மீன்! அதுகூட அக்டோபர் மாதம் முழுவதும் நடுவானில் நமக்கு தலைக்கு நேர் எதிரில் காட்சி தரும்.
அக்னி பகவான் காண்டவவனத்தை 21 நாட்கள் எரித்ததனால் பூமியே வெப்பத்தில் தகித்ததாம். ஆகை யால் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை அக்னி நட்சத்திர நாள் என்கிறார்களாம். இது ஜோதிடத்தில் அக்னி நட்சத்திர தோஷம் என்று குறிப்பிட்டுள்ளதால் பஞ்சாங்கத்தில் அக்னிநட்சத்திர காலம் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த அக்னிதோஷ காலத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாதாம்..
அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இறைவனை குளிர்விக்கும் வகையில் அனைத்து சிவால யங்களிலும் தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை அருணாச்ச லேஸ்வருக்கு ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவற்றைச் சேர்த்த நீரால், காலை முதல் மாலை வரை லிங்கத்தின் மீது துளித்துளியாக விழுந்து அபிஷேகம் செய்யும் வகையில், சிவலிங்கத்தின் மேலே சொம்பு போன்ற ஒன்றை ஓட்டை போட்டு தொங்கவிட்டு அந்த ஓட்டையைப் புல்லால் அடைத்து தண்ணீர் சொட்டு சொட்டாக சிவலிங்கத்தின் மீது விழச்செய்கிறார்கள்.
இது எதற்கு என்றால் சிவலிங்கத்திற்கு வெயில் ஆகாதாம்! ஆகையால் அதை வெப்பத்திலிருந்து காப்பாற்ற இந்த ‘அக்னி நட்சத்திர’ நாட்களில் இதைச் செய்கிறார்கள்.
எப்படி இருக்கிறது கதை! உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அதற்கு உருவம் கொடுத்து, பிரம்மா, சிவன், விஷ்ணு என்று பெயர்களையும் கொடுத்து, அவைகளுக்கு மனைவி, பிள்ளைகள் வைப்பாட்டிகள் என்று புராணங்களை எழுதிக் குவித்துள்ளதும் – அவைகளுக்குக் கோயில்கள் கட்டுவதும், அந்தச் சுரண்டல் தொழிலுக்குப் பார்ப் பனர்களை மட்டும் அர்ச்சகர்களாக இருக்க வைப்பதும், வைத்ததும் ஆண்டுதோறும் திரு விழாக்கள் என்று சொல்லி, மக்களின் நேரத்தையும், உழைப்பையும் பொருளையும் பாழ்படுத்துவதும் ஸ்தல புராணங் களென ஒவ்வொரு கோவிலுக்கும் அற்புதங்களைக் கதையாகக் கட்டுவதும், எத்தகைய மோசடி!
மக்களின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இவற்றை எல்லாம் தடை செய்யப்பட வேண்டாமா? கடவுளுக்கே அக்னி நட்சத்திர வெப்பம் தாங்க முடியவில்லை – அதற்காக தயிர் அபிஷேகம் என்றால், அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவராவார் என்று சிந்திக்க வேண்டாமா? பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுகிறதே – எப்படி சிந்திப்பார்கள்?
அக்கினி நட்சத்திரமெனும் அண்டப் புளுகு கதை அறிவியலுக்கு ஒவ்வாத ஒன்று எனும் உண்மையை எடுத்துரைத்தது சிறப்பு.