சென்னை, மே 3- பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்திய, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா 29.4.2024இல் சென்னையில் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது.
“தமிழனுக்கு வீழ்ச்சியில்லை” என்ற தலைப்பில் கவியரங்கத்தில் புலவர் வெற்றியழகன், கவிஞர் குடி யாத்தம் குமணன், கவிஞர் கோ. பிச்சை வள்ளிநாயகம், பாவலர் மீனாட்சி சுந்தரம், கவிஞர் பெரு.இளங்கோ ஆகியோர் தலைப்பை ஒட்டி சிறப்பாக கவிதை வாசித் தார்கள்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செய லாளர் ஆ.வெங்கடேசன் வர வேற்புரையாற்ற, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தொடக்கவுரைவுடன் கருத்தரங்கம் துவங்கியது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் கொண்டாடும் நிலை எப்படி ஏற்பட்டது என்றும் துவக்கத்தில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா இப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும், இனிவரும் காலங்களில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி, தந்தை பெரியாரின் கருத்துகளை மக்கள் மனதில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தன் உரையை முடித்தார்.
கழகப் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி புரட்சிக் கவிஞரின் கவிதைகளைச் சொல்லி, அக்கவிதையில் மிளிர்ந்துள்ள பெரியாரின் கருத்துகளை மிகவும் சிறப்பாக விளக்கிக் கூறி சிறப்புரை வழங்கினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் பாவலர் மீனாட்சி சுந்தரம் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிந்தது.
பெரும் திரளாக தோழர்கள் வருகைபுரிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.