கொள்ளுப்பாட்டி
“இதுவன்றோ பெரியார் மண்’ என்பதற்கான உயிர்ப்பான சாட்சியம்”
மூன்று படங்களில் இடதுபுறம் தலைமுடி மழுங்கச் சிரைக்கப்பட்டு, முக்காடு போட்டிருப்பவர் எங்கள் அம்மாவைப்பெற்ற அம்மாவின் தாயார்.
அதாவது எங்கள் கொள்ளுப் பாட்டி. இளம் வயதிலேயே விதவையான அவருக்கு அவர் பிறந்த சமூகம் விதித்த கோலம் இது.
இன்றைக்கு 60 – 70 ஆண்டு களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் நிலை அதுதான்.
நடுவிலிருக்கும் படத்திலிருப்பது எங்கள் அம்மாவைப் பெற்ற தாயார்.
பாட்டி
அவரும் இளம் வயதிலேயே விதவை ஆனவர்தான். ஆனால், அவரது கோலம் அத்தனை அலங்கோலமாகவில்லை.
தலைமுடி தப்பித்திருக்கிறது.
வண்ணப்புடவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது.இருந்தாலும் விதவைமை என்ற வழக்கப்படியே உள்ளொடுங்கி வாழ்ந்துவிட்டுப் போனார்.
வலதுபுறம் மூன்றாவதாக இருப்பது எங்கள் தாயார்.
அவரும் இடையில் கணவரை இழந்தவர்தான். ஆனால், அவரது நெற்றியிலே எப்போதும் ஒரு சிவப்புநிற ஸ்டிக்கர் பொட்டு தவறாமலிருக்கும்.
நல்ல நல்ல வண்ணப்புடவைகளை மிக விரும்பி உடுத்துவார்.
மற்ற இருவரும் அவ்வளவாகக் கல்வி வாசம் அறியாதவர்களென்ற நிலையிலிருந்தும் எங்கள் அம்மா இடைநிலைக் கல்வியைத் தொட்டவ ராகவும் இறுதிவரையில் ஒரு ஆர்வம்மிக்க வாசகராகவும் இருந்தார்.
அம்மா
விதவை என்ற தன்னுணர்விலிருந்து முற்றிலும் விடுபட்டவராக வலம்வந்தார்.
அதைவிட வியப்பு இறுதிவரையில் ஒரு மெல்லிய இறை அச்சத்தைக்கூட அவரிடத்தில் நான் பார்த்ததே இல்லை.
வேற்றுமை துளியும் பாராட்டாது அனை வரிடத்திலும் பேரன்பு காட்டினார்.
தான் இறந்தபின் எந்தவொரு சடங்காச்சாரமும் செய்யக்கூடாது என்றும், வெறுமெனே தன் சடலத்தை எரியூட்டிவிட வேண்டும் என்றும் இறப்பிற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே சொல்லிவைத்துவிட்ட துணிச்சல் மிக்க பெண் மணியாய் என் தாயார் எங்களுக்கெல்லாம் வியப்பூட்டினார்.
இவற்றுக்கெல்லாம் சிகரமென தனது வாழ்க்கை இணையைக் காதலில் கண்டடைந்த வளாக இன்றைக்கு அதற்கடுத்த தலைமுறையான என் மகள் ஜாதி மறுப்பு மணம் புரிந்து சாதித்திருக்கிறாள்.
பழைமைச் ஸநாதனம் வலியுறுத்திய பெண்ணுக்கான கட்டுப்பாடுகளில் இப்படி உடைப்புகள் ஏற்பட்டு, அதில் மாற்றங்களை, நல்ல முன்னேற் றங்களை ஒரே மண்ணின் – ஒரே ஊரின் – ஒரே குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் அடைந்திருக்கிறார்கள் என்பது தற்செயல் நிகழ்வுகளல்ல…
மாறாக, பெரியார் என்ற ஒரு மகத்தான மாமனிதனின் மனிதநேயமும், மேதமையும் மிக்க சிந்தனையாலும் இடைவிடாது இந்த மண்ணில் அவர் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரத்தாலும் விளைந்தவையே இவை என்பது மறுக்கவே முடியாத வரலாற்று உண்மை யாகும்!
இதற்காகவேனும் தந்தை பெரியாரை எனது அடுத்தடுத்த தலைமுறைகளும் நன்றிப் பெருக்கோடு எண்ணிக் கொள்ளட்டும்!
பழைமையை உதறிவிட்ட, புதுமை வாழ்வு பெற்ற தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களும் – குறிப்பாக உயர்ஜாதிக் குடும்பங்கள் முதலில் நன்றிக்கடன் பட்டிருப்பது பெரியாருக்கே என்றால் அது மிகையே இல்லை!
எழுத்தாளர் சோழ.நாகராஜன்
மேனாள் துணை ஆசிரியர், தீக்கதிர்
(இணைய தளத்திலிருந்து)
[“இதுவன்றோ பெரியார் மண்’ என்பதற்கான உயிர்ப்பான சாட்சியம்”]