சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஒரு வாய்ப்பு!
தமிழர் தலைவர் ஆசிரியர் தொடக்கவுரை
சென்னை, மே 2 சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஓர் உபாயம்; மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. ஆகவேதான், இதை நாடு தழுவிய அளவில், உலகளாவிய நிலையில் செய்யவேண்டும். இதில் கட்சியில்லை; ஜாதியில்லை; மதமில்லை; எல்லையில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வு!
கடந்த 25.4.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள்
எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரை வருமாறு:
நோக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு இருந் தாலும், மிகச் சிறப்போடு இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ‘‘சுயமரியாதை இயக்க ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க நிகழ்ச்சியாக இந்தக் கூட்டம் இன்றைக்குத் தொடங்குகின்ற நிலையில், வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,
எனக்கு முன் இங்கே இக்கூட்டத்தின் நோக்கவுரை என்ன என்பதைப்பற்றி மிக அழகாகவும், தெளிவாகவும், ஆவணத்தோடும் அருமையாக எடுத்து வைத்த நம் முடைய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
நிறைவாக நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழக செயலவைத் தலைவர் மானமிகு தோழர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களே,
சிறப்பாக இங்கே குழுமியுள்ள அனைத்துப் பெரு மக்களே, பல்வேறு அமைப்புகள் – பகுத்தறிவாளர் கழகம், மூதறிஞர் குழு, திராவிட இயக்க வரலாற்றுப் பேரவையின் பொறுப்பாளர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள், கழகங்களுக்கு அப்பாற்பட்ட ஆய் வாளர்கள், எல்லாவற்றையும் தாண்டி, ஊடகவியலாளர் களாகிய அனைத்துப் பெருமக்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தேர்வு பெற்ற வாய்ப்புள்ள ஒரு கூட்டம். நான் அப்படித்தான் கருதுகிறேன்.
என் துணைவியாரின் கேள்வி!
தேர்தல் களைப்பு பலருக்கு இன்னும் நீங்கிவிட வில்லை. என்னையே கேட்டார்கள், ‘‘உங்களுக்கு இன்னும் தொண்டைகூட சரியாக ஆகவில்லையே; நீங்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்; உடனே இப்பொழுது அடுத்த கூட்டத்தில் நீங்கள் உரையாற்றுவது மட்டுமல்லாமல், 100 கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் இளைஞர்களால் என்று, இடைவெளியே இல்லாமல் அறிவித்திருக் கிறீர்களே, உங்களுக்கு இரக்கமே கிடையாதா?” என்று என்னுடைய துணைவியாரே கேட்டார்.
அவர் என்னிடத்தில் அடிக்கடி குறைகாணுவார், அந்த வகையில், ‘‘உங்களுக்கு வேறு வேலையில்லை; இதுதான் முதல் வேலை. ஆனால், கழகத் தோழர்களுக்கு இடைவெளி விடவேண்டாமா? மற்றவர்களுக்கு வேறு வேலையில்லையா?” என்று கேட்டார்.
அதேபோன்று, சிலர் மரியாதையைக் கருதி வெளிப் படையாகக் கேட்காவிட்டாலும், மனதில் நினைப்பார்கள்.
‘‘ஓய்வு என்பது – அது தற்கொலைக்குச் சமம்!’’ – தந்தை பெரியார்
ஆனால், எல்லாத் தோழர்களுக்கும், 94 வயதிலும் கூட, மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் சென்ற என்னுடைய அறிவாசான் அவர்கள், ‘‘ஓய்வு என்பது – அது தற்கொலைக்குச் சமம்” என்று சொன்னார்கள். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை.
இயற்கை நம்மை அழைக்கின்ற நேரத்தில், இயற்கை நமக்கு முடிவு எய்தக் கூடிய சூழல் வரையில், நம்முடைய பணி, ஓய்வற்ற பணியாகத்தான் இருக்கும். காரணம், நோய் கடுமையான நோய்; அதனால், மருத்துவர்கள் ஓய்வெடுக்கக் கூடாது. தீயணைப்புத் துறையினருக்கு ஓய்வெடுக்கின்ற உரிமை கிடையாது; இராணுவ வீரர் களுக்கு ஓய்வெடுக்கக் கூடிய பொறுப்பும், கடமையும் கிடையாது. அதேபோல, காவல்துறையினருக்கும் ஓய்வு கிடையாது. வேண்டுமானால், கடமையாற்றுவதில் மாறுதல்கள் வரலாமே தவிர, ஓய்வு என்பது கிடையாது.
கருப்புச் சட்டைக்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும்
ஓய்வெடுக்க முடியாது!
கருப்புச் சட்டைக்காரர்களும், சுயமரியாதைக் காரர்களும் அதேபோலத்தான் ஓய்வெடுக்க முடியாது. உழைப்பில் ஓய்வு காணுகிறோம். மன நிறைவு, மகிழ்ச்சி மிகுந்த அளவில், இரு நாள் அறி விப்பிலேயே இவ்வளவு தோழர்கள், தரமானவர் கள், மிக முக்கியமானவர்கள், எல்லா தரப்பினரும் இங்கே கூடியிருக்கின்றீர்கள் என்று சொன்னால், சில நாள்கள் அறிவிப்பிலேயே நாடு முழுக்க இவ்வளவு பெரிய தேர்தல் திருவிழா என்று சொன்னார்கள் – திருவிழாவா? பெருவிழாவா? ஆற்றில் இறங்கக்கூடியதா? ஆற்றிலிருந்து வெளியே வரக் கூடியதா? என்று மிகப்பெரிய அளவில் தடுமாற்றத்தில் இருப்பார்கள்.
ஆனால், நம்மைப் பொறுத்தவரையில், இதை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். பெரிய பேறு என்று நான் தொடக்கத்தில் சொன்னேன்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கும்பொழுது நான் பிறக்கவில்லை; நம்மில் பலரும் பிறக்கவில்லை!
ஆம்! நம்முடைய வாழ்க்கையில், இங்கே கூடி யிருக்கின்ற நம்முடைய தோழர்களானாலும் அல்லது உலகம் முழுவதும் இணைய ஒளி- ஒலிப்பரப்பின் மூலமாகக் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய பெரியார் வலைக்காட்சி அன்பர்களுக்கும் சொல்லுகிறேன் – நம்முடைய வாழ்நாளில், இது ஒரு பெரிய பேறாகும். சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவில் நாம் கலந்துகொண்டு பேசுவது, பங்கேற்பது – வைக்கம் நூற்றாண்டு விழா என்று இப்படி பல நூற்றாண்டுகள் இந்த ஆண்டு வந்திருக்கின்றன.
இந்த வாய்ப்பு என்பது சாதாரணமான வாய்ப்பல்ல; மிகவும் அருமையான வாய்ப்பாகும்.
எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி, உந்துதல் என்னவென்று சொன்னால், சுயமரியாதை இயக்கம் தொடங்கும்பொழுது நான் பிறக்கவில்லை; பலரும் பிறக்கவில்லை; நான் என்று சொன்னால், நாம் என்று கொள்ளவேண்டும்.
சுயமரியாதை இயக்கம் பிறக்கும்பொழுது நாம் பிறக்கவில்லை; ஆனால், சுயமரியாதையோடு பிறந்தவர் களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்; தந்தை பெரியார் அவர்களை நாம் பின்பற்றிய காரணத் தினால், பின்பற்றுகின்ற காரணத்தினால்.
சுயமரியாதை இயக்கத்தின்
வெள்ளி விழாவையும் பார்த்தவர்கள் நாம்!
அப்படி நாம் பார்க்கும்பொழுது, சுயமரியாதை இயக்கத்தின் வெள்ளி விழாவையும் நாம் பார்த்தவர்கள். என்னைப் பொறுத்தவரையில், அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.
தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது என்னிடம் செய்தி யாளர்கள் கேட்டார்கள்; ‘‘இப்பொழுது நடைபெறுவது 18 ஆவது தேர்தல்; கடந்த 17 தேர்தல்களையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று.
கடந்த 17 தேர்தல்களையும், இப்பொழுது நடைபெறு கின்ற 18 ஆவது தேர்தலையும் பார்க்கக் கூடிய வாய்ப்பும், போனசாக அதற்கு முன் நடைபெற்ற ஒரு தேர்தலின்போது மாணவனாக இருந்து, அதனைக் கண்காணிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்று சொன்னேன்.
எதிர்பாராத ஒத்துப் போகின்ற ஒரு செய்தி!
அதுபோன்று சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில், நான் பிறக்கவில்லை. ஆனால், எதிர்பாராத ஒத்துப் போகின்ற ஒரு செய்தி என்னவென்றால், ‘குடிஅரசு’ ஏடு தொடங்கியபொழுது, அதனைத் தொடங்கி வைத்தவர் கடலூர் ஞானியார் அடிகளாவார்.
இன்றைக்கு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினைத் தொடங்கி வைப்பவன் கடலூர்காரனாகிய நான்தான்.
ஆகவே, ஊர்ப்பற்று எங்களுக்கு. ஞானியாரை நான் பார்த்ததில்லை; ஆனால், ஞானியாருக்கே, ஞானத்தை உருவாக்கக் கூடிய அளவிற்கு, உணர்வைத் தந்த பெரியாருடைய வாழ்நாள் மாணவன் நான் என்ற பெருமை நமக்கு உண்டு.
சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா – பவள விழாவை பார்த்த நாம் –
நூற்றாண்டு விழாவையும் காணுகிறோம்!
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், சுயமரி யாதை இயக்கத்தின் பொன்விழாவினை, அன்னை மணியம்மையார் அவர்களோடு தஞ்சாவூரில் கொண்டாடியிருக்கின்றோம். அதற்குப் பிறகு பவள விழாவைக் கண்டிருக்கின்றோம். அதற்குப் பிறகு நூற்றாண்டு விழாவினையும் நாம் காண விருக்கிறோம் என்பது இருக்கிறதே, நம் வாழ்வில் மிக முக்கியமானதாகும் அது.
ஏனென்றால், சுயமரியாதை வாழ்வுதான், தந்தை பெரியாரின் மொழியிலே சுகவாழ்வாகும்!
அந்த சுக வாழ்வு என்பது மான வாழ்வு!
சுக வாழ்வு என்பது அறிவு வாழ்வு!
சுக வாழ்வு என்பது சுதந்திரமான, சிந்தனைக்கு அடையாள வாழ்வு.
தன்மானத்தை உருவாக்கக் கூடிய
ஓர் இயக்கம்!
நமக்காக மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமல்ல; நமக்கு மாறுபட்டு இருக்கின்றவர்களுக்கும் சேர்த்து உழைக்கக்கூடிய, அவர்களுக்கும் தன் மானத்தை உருவாக்கக் கூடிய ஓர் இயக்கம், இந்த இயக்கம்.
‘‘சூத்திரர்கள் படிக்கக்கூடாது; அவர்களைத் தொடக் கூடாது; இன்னார் தீண்டப்படாதவர், பார்க்கக் கூடாதவர், நெருங்கப்படாதவர்” என்று ஒரு காட்டுமிராண்டித் தனமான ஓர் அமைப்பு வருணாசிரம தர்மத்தில் உண்டு.
உலகத்தில், நம்முடைய நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது தீண்டப்படுகிறவர்கள், தீண்டப்படாத வர்கள் என்று இருக்கிறதா?
நீக்ரோ – வெள்ளைக்காரர் என்ற நிறப் பிரச்சினை இருக்கிறது; அங்கேகூட, வெள்ளை இனத்தவர் கருப் பினத்தவரைத் தொட்டால், குளிப்பதில்லை.
அதைவிடக் கொடுமை, பார்த்தாலே தீட்டு என்று சொன்னார்கள். Unseeable என்ற வார்த்தையெல்லாம் இப்பொழுது மறைந்து போய்விட்டது. Untouchable மட்டும்தான் இப்பொழுது இருக்கிறது. ஆனால், வேறு ஓர் உருவத்தில் வந்து கொண்டிருப்பதைக் காப்பாற்றக் கூடியவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஒரு வாய்ப்பு!
ஆகவே, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற் றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஓர் உபாயம்; மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.
ஆகவேதான், இதை நாடு தழுவிய அளவில் செய்யவேண்டும். இதில் கட்சியில்லை; ஜாதியில்லை; மதமில்லை; எல்லையில்லை – உலகளாவிய நிலையில்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய தன்மை என்ன வென்று சொன்னால், விலங்கினத்தைத் தவிர, ஆறறிவு படைத்தி மனித இனம் என்று சொன்னால், அந்த மனித இனத்திற்கு அடையாளமே சுயமரியாதைதான்.
சுயமரியாதை இல்லாத மனிதன் என்று சொன்னால், அவன் விலங்கிற்குச் சமம்.
சுயமரியாதைக்கு விளக்கம் சொன்னவர், நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!
‘‘எனக்கு சுயமரியாதை இல்லையா?” என்று ஆதங்கத்தோடு கேட்பார்கள். மிக அழகாக சுயமரி யாதைக்கு விளக்கம் சொன்னவர், நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்தான்.சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அதிகமாகப் படித்து அவர் தெரிந்துகொள்ளவில்லை. மிகக் குறுகிய காலத்தில் நம்மோடு பழகி, தந்தை பெரியாரைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்த ஒருவர்; உத்தரப்பிரதேசத்துக் காரர்; உயர்ஜாதித் தன்மையில், ராஜாவாக இருக்கக்கூடிய உயர்ந்த மேட்டுக்குடியைச் சார்ந்தவர். அப்படிப்பட்டவர், திராவிடர் கழகப் பொன்விழாவிற்கு வந்தார். தியாகராயர் நகரில்தான், பனகல் பூங்காவிற்குப் பக்கத்தில்தான் திராவிடர் கழகப் பொன்விழா மேடை அமைந்திருந்தது. உங்களில் சிலரோ, பலரோ கலந்துகொண்டிருப்பீர்கள்.
அப்பொழுது அவர் சொன்ன உதாரணம் இருக் கிறதே, அது மறக்க முடியாத உதாரணமாகும்.
சுயமரியாதை, சுயமரியாதை என்று சொல்லுகிறார் களே, அதற்கு நம்முடைய தமிழ்நாட்டைத் தாண்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் – அதிலும் அதிகமாக இந்த இயக்கத்தைப்பற்றிப் புரிந்து கொண் டவர் அல்ல. சமூகநீதி, நம்முடைய இயக்கத் தத்துவத்தை வைத்து நம்முடைய இயக்கத்தை, பெரியாரைப் புரிந்து கொண்டவரான வி.பி.சிங் அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் மலரில்….
இன்றைக்கு அறிவு எல்லோருக்கும் நிறைய இருக்க லாம்; வளர்ந்திருக்கலாம். அறிவை விரிவு செய்திருப்பது தான் கணினியாகும். அந்தக் கணினி, சூப்பர் கம்ப் யூட்டராகும்.
அய்யா டாக்டர் குழந்தைசாமி அவர்கள், தொழில் நுட்பத் துறையில் இயக்குநராக இருந்த காலத்தில், அய்யா அவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் உரையாற்றுவதற்கு, அவருடைய அழைப்பின் பேரில் சென்றார்; ஒரு பெரிய கருவி – அதைக் காட்டி, ‘‘இதுதான் அய்யா, சூப்பர் கம்ப்யூட்டர்” என்று குழந்தைவேலு சொன்னார்.
‘‘இதனுடைய முக்கியத்துவம் என்னவென்று?” கேட்டார் அய்யா தந்தை பெரியார் அவர்கள்.
‘‘இந்த உலகத்தில் உள்ள தகவல்களைப்பற்றி கேட் டால், அய்ந்து நிமிடத்தில் இது சொல்லிவிடும்” என்றார் டாக்டர் குழந்தைசாமி அவர்கள்.
‘‘அவ்வளவு தகவல்களும் இதற்குத் தெரியுமா?” என்று கேட்டார் அய்யா.
‘‘ஆமாம்!” என்றார் குழந்தைசாமி அவர்கள்.
அதைப்பற்றி விவரித்ததைக் கேட்ட தந்தை பெரியார் அவர்கள், ‘‘எனக்கே தலைசுற்றுவது போன்று இருக்கிறது; இவ்வளவு அறிவு மனிதனுக்கு இருக்கிறது; சூப்பர் கம்ப்யூட்டரை மனிதன்தானே உருவாக்கினான்; பகுத் தறிவை தாராளமாக விட்டால், அதற்கு எல்லையே கிடையாது; அதற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது” என்று பாராட்டினார்.
இந்தத் தகவலை தந்தை பெரியார் பிறந்த நாள் மலரில் நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம்.
அதை உதாரணமாகச் சொன்னார், வி.பி.சிங் அவர்கள்.
‘‘அப்படிப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்மீது நான் எச்சில் துப்பினால் என்ன செய்யும்?” என்று பொதுமக்களைப் பார்த்துக் கேட்டார்.
‘‘ஒன்றும் செய்யாது” என்று எல்லோரும் சொன் னார்கள்.
‘‘சரி. இங்கே அமர்ந்திருக்கும் ஒருவர்மீது நான் எச்சில் துப்பினால், என்ன செய்வீர்கள்?” என்று பொதுமக்களைப் பார்த்துக் கேட்டார்.
(தொடரும்)