திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர்.
அவரின் பெயராலே சென்னையில் தியாகராயர் நகர் தொகுதி உள்ளது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது. காந்தியார் சென்னை வந்த பொழுது அவரை கோலாகலமாக வரவேற்றார்.
1920 இல் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் படி நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் என்கிற பெருமையை தியாகராயர் பெற்றார் .அப்பொழுது சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின் முதல் மதிய உணவு திட்டம். அடுத்த ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வென்றது.முதலமைச்சர் பதவி இவரைத்தேடி வந்தபொழுது அதைக் கடலூர் சுப்பராயலு ரெட்டியாருக்கு விட்டுக் கொடுத்தார்.
மிகப்பெரிய செல்வந்தர் இவர். தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர்.
இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார். என்றாலும், எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியல் களம் புகுந்தார்.
சென்னை பின்னி மில்லில் தொழிலாளர் போராட்டம் நடை பெற்றது. .அதை முன்னெடுத்து நடத்தியவர் தமிழ் தென்றல்
திரு.வி.க. ஆட்சியில் நீதிக்கட்சி இருந்தாலும் காவல் துறை ஆங்கி லேயே அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது .அவரை கைது செய்ய உத்தரவு வந்தது. அப்பொழுது மாற்றுக் கட்சியில் இருந்தாலும் தியாகராயர் கொதித்து எழுந்து ,”திரு.வி.க.வை கைது செய்தால் இந்த ஆட்சி எங்களுக்கு தேவையில்லை .”என எச்சரித்தார். கைது நடவடிக்கை நின்றது .அத்தகு சிறப்பு மிகுந்த வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இன்று..
வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படுதவதற்கு காரணம் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சர்.பிட்டி.தியாகராயர். இருந்த போது வேல்ஸ் இளவரசர் சென்னை வருவதாக இருந்தது. உடனே அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன் பிரபு தியாகராயரிடம்,””சென்னையின் முதல் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் இளவரசரை வரவேற்க வேண்டும். அதற்கான சிறப்பு ஆடை களைத்தான் உடுத்தி வர வேண்டும்” என்று கூறினார்.
ஆனால் இதனை ஏற்காத தியாகராயர், வெலிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில்,”எனது வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைக் கோட்டு, வெள்ளை வேட்டி, இதனோடு இளவரசர் என்னைப் பார்க்க விரும் பினால், நான் அவரை வரவேற்கிறேன். இல்லையென்றால் வேறு யாரேனும் அவரை வரவேற்கட்டும். இளவரசரானாலும் அவ ருக்காக என் வழக்கமான இயல்பையோ, உடை களையோ மாற்றிக் கொள்வதற்கில்லை” என்று திட்ட வட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்ற ஆங்கில அரசு வழக்கமான உடையிலேயே அவர் விழாவில் கலந்து கொள்ளவும் இளவரசரை வரவேற்கவும் சம்மதித்தது.
திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கம் நீதிக்கட்சி – டாக்டர் சி.நடேசனார், பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் என்ற மும்மணிகளும் சேர்ந்து தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்பதைத் தோற்றுவித்தனர். இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு என்பது நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியே!
வாழ்க வெள்ளுடை வேந்தர்.