கேள்வி 1: கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டீர்களே, மக்களின் மனநிலை எப்படி உள்ளது?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1 : மக்களின் மனநிலை – பி.ஜே.பி. – மோடி அரசுக்கு எதிரான அலையாக அடிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது; முன்பு எப்போதும் காணாத தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்களின் வரவேற்பு மிகவும் தனித்தன்மையுடன் இருந்தது; பேச்சைக் கேட்கும்போது அவர்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளும் அறிமுகம் முகத்தில் தெரிந்தது! ஒரு நல்ல முடிவைத் தரும்.
—
கேள்வி 2: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினரின் ‘‘ரோடு ஷோ” பலமுறை ரத்து ஆனது ஏன்?
– ப.சுந்தரம், நெல்லை
பதில் 2 : செயற்கை “ஷோ”க்களுக்கு என்ன மரியாதை? ஒரு மரியாதையும் இல்லை. சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் “ரோடு ஷோ”வே எடுபடவில்லையே! ரத்து ஆனாலும், நடந்திருந்தாலும் பலாபலன் பூஜ்யம்தான்! வெறும் எண்ணெய் செலவுதான்; பிள்ளை பிழைக்காது!
—
கேள்வி 3: சென்னையில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய், பா.ஜ.க.வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்கவில்லையே, ஏன்?
– மா.மணி, திருக்கழுக்குன்றம்
பதில் 3 : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளாரே! (18.4.2024). தமிழ்நாட்டு தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு திருப்பம். கிழக்கு வெளுக்கத் துவங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
—
கேள்வி 4: தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில், பா.ஜ.க.வின் சார்பில் ஒரு பார்ப்பனர்கூட நிறுத்தப்படவில்லையே?
– கி.சந்தோஷ்குமார், பெங்களூரு
பதில் 4 : தமிழ்நாட்டில் அக்கட்சியிலேயே வெளிப்படையாக அது காட்டப்படாதது ஒருபுறம். ‘பெரியார் மண்’ என்ற பயம் – இருந்தாலும் பார்ப்பனர்கள் பா.ஜ.க.வை ஆதரிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜ.க.வே தமது கட்சி என்பதைத்தானே!
தமது கட்சியின் வெளித் தோற்றம் எப்படி இருந்தாலும், தந்திரம் அவாளுக்குப் புரிந்ததுதான். ஆர்.எஸ்.எஸ். மூல அமைப்பே அவாளுடையதுதானே!
——
கேள்வி 5: எதையாவது செய்து மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரத் துடிக்கிறாரே, மோடி?
– மு.செல்வம், திருவண்ணாமலை
பதில் 5 : ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லும் ஆபத்தை உணருபவர்கள், வெறும் தடுப்பு, கட்டை வந்தாலும் அதுவே பெரும் துடுப்பு என்று பிடிக்கத் துணிவது போன்ற பரிதாப நிலையே அது!
—
கேள்வி 6: மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும்கூட, ‘‘உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம்” என்று அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் சொல்லியிருக்கிறாரே?
– ப.இளங்கோ, மதுரை
பதில் 6 : இவர் என்ன அதிகார மய்யத்தின் உச்சியா? அடக்கோமாளி அரைவேக்காடே! முன்பு விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்கள் பற்றி “ஒரு எழுத்தைக் கூட மாற்றாது மோடி அரசு” என்று வாய்வீரம் பேசி வாலறுந்தவர் தானே இந்த அரசியல் நுணல்!
இந்தப் பேச்சை பா.ம.க. – மற்ற திடீர்க் கூட்டு கட்சிகளுக்கு அர்ப்பணியுங்கள்!
—
கேள்வி 7: ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து என்பது திட்டமிட்டதா அல்லது தற்செயலானதா?
– கு.கவுதம், திருச்சி
பதில் 7 : ஆராயப்பட வேண்டியது; செய்தியாளர்களிடம், பேராவூரணி பேட்டியில் (15.4.2024) கேட்ட கேள்விக்குத் தெளிவாகப் பதில் கூறியுள்ளேன். காண்க!
—
கேள்வி 8: 18 வயது நிறைந்த இன்றைய இளைஞர்கள் அளிக்கும் வாக்குகள்தான் இந்திய நாட்டின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கிறது என்பது உண்மையா?
– தீ.திருமேனி, தேனி
பதில் 8 : ஒரு பகுதி மட்டுமே உண்மை. மற்ற எல்லா வயதினர் – மகளிர், விவசாயிகள், வணிகர்கள், உழைப்பாளிகள் இணைந்தே ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும்பான்மையை உருவாக்குகிறது என்பதே அரசியல் உண்மையாகும்.
—
கேள்வி 9: ‘‘சொன்னதை செய்திருக்கிறது, சொல்லாததையும் செய்திருக்கிறது” என்று நீங்கள் சொல்லுகின்ற தி.மு.க. அரசு, ஒரு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண முறையைக் கொண்டு வருவோம் என்று சொன்ன வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லையே, ஏன்?
– செ.செல்வம், செங்கல்பட்டு
பதில் 9 : இத்தேர்தல் முடியட்டும்; பிறகு அதைச் செய்வார்கள். நிதி நெருக்கடி மற்றொரு புறம் இருக்கும் நிலை. மெல்ல மெல்ல, ஆனால், அதைச் செய்வார்கள் உறுதியாக!
—
கேள்வி 10: ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகும் ஆட்சிபற்றி தங்கள் கருத்து என்ன?
– கி.ரமேஷ், பெரியவெண்மணி
பதில் 10 : 100க்கு 99.99% இந்தியா கூட்டணி ஆட்சிதான் என்பது நாளும் பிரதமர் மோடிக்குப் பெருகி வரும் கோபம்; மற்றொருபுறம் பயம், மற்றொரு புறம் புதிய புதிய வித்தை மாற்றங்களும் சாட்சி!
அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் முந்தைய 26 இடங்களும் அக்கட்சிக்குக் கிடைக்காது என்ற நிலை பளிச்சென்று தெரிகிறதே!
ஊழல்கள் – அதிகார துஷ்பிரயோகம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்குகளில் நீதிபதிகள் மூலம் வெளிவரும் ஆணைகள் வழியே மக்கள் மன்றத்திற்குப் புரியும்படி ஆகிவருகிறது நாளும். எனவே, ஜூன் 5 புதியதோர் இந்தியா கூட்டணி ஆட்சி வருவது உறுதி!
பொதுவானவர்களே இத்தகவல்களைப் பற்றி தெளிவாகக் கூறுகின்றனரே!
தலைமைத் தேர்தல் அதிகாரி (ஓய்வு) எஸ்.ஒய்.குரோஷி, பிரபல அரசியல் பொருளாதார வல்லுநர் பரகல பிரபாகர் முதலிய பலரும் கூறுகின்றனரே!