ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, நவராத்திரி காலங்களில் இறைச்சி உணவு உண்பது குறித்து கடுமையான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள்மீது வைத்துள்ளார் பிரதமர் மோடி.“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் பெரும்பான்மையான இந்திய மக்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படுவதில்லை. அவர்கள் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் சில தலைவர்கள் ‘சாவன்’ மாதத்தில் மட்டன் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அதனை வீடியோ எடுத்துப் பதிவிட்டு இந்திய மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
அவர்களுடைய நோக்கம் முகலாயர்களுடையதைச் சார்ந்தது. அவர்கள் இந்த நாட்டில் உள்ள மன்னர்களை தோற்கடித்ததில் திருப்தி அடையாமல், கோயில்களையும் அழித்தவர்கள்.
I-N-D-I-A கூட்டணித் தலைவர்களும் முகலாயர்களின் மனநிலையில் வீடியோக்களை பதிவிட்டு இந்திய மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்து அவர்களின் வாக்குவங்கியை உறுதி செய்ய நினைக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் 9ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது. ”அந்த வீடியோவில், “நான் நாள் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறேன். மதிய உணவு சாப்பிட இந்த 15 நிமிடம்தான் கிடைத்தது. அதனால், இன்று மீன் மற்றும் ரொட்டியை மதிய உணவாகச் சாப்பிடுகிறேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த மதிய உணவு இதுதான்” என்று பதிவிட்டிருந்தார் தேஜஸ்வி.
ஆனால், வசந்த நவராத்திரி காலத்தில் இறைச்சி உணவு சாப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். சர்ச்சையானதால், அதற்கு விளக்கம் அளித்திருந்தார் தேஜஸ்வி. ”நவராத்திரி தொடங் குவதற்கு ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 8ஆம் தேதி அந்த வீடியோ எடுக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக ஏப்ரல் 9ஆம் தேதி பதிவிட்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.
உணவு என்பது ஒவ்வொரு தனிநபருடைய உரிமை சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில், தேர்தல் பரப்புரையில் இந்த விடயத்தை பிரதமர் கையாள்வது எத்தகைய கேலிக் கூத்து! இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு; குறிப்பிட்ட சில மாதங்களில் எல்லோரும் இறைச்சி உணவைத் தவிர்ப்பதில்லை. குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள்தான் அப்படிச் செய்வார்கள். சிலர் வாரத்தில் சனிக்கிழமைகளில் இறைச்சி உணவு உண்பதில்லை, சிலர் வெள்ளிக்கிழமைகளில் உண்பதில்லை.
இறைச்சி உணவுகளிலேயே சிலர் மாட்டுக்கறி உண்பதில்லை, சிலர் பன்றிக்கறி உண்பதில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் – தனி மனிதருக்கும் ஒவ்வோர் உணவு முறை இருக்கிறது. சைவ உணவுகளிலேயே சிலர் மண்ணிற்குக் கீழே விளைந்த உணவுகளை உண்பதில்லை. இப்படி கோடிக்கணக்கான நம்பிக்கைகளை கொண்ட நாடுதான் இந்தியா. அப்படி இருக்கையில், இதை வைத்து அரசியல் செய்வது தவறான முன்னுதாரணமாகவே மாறும். வேறு சரக்கு இல்லை! வங்காளத்தில் பார்ப்பனர்கள் மீன் சாப்பிடுவது குறித்து பிஜேபி பேசுமா?
இறைச்சி உணவு என்பது ஏதோ தவிர்க்க வேண்டிய ஒன்று என்பது போல் பிரதமரின் பேச்சு உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இறைச்சி உணவு உண்பவர்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இறைச்சி உணவு உண்பவர்கள்.
மாட்டுக்கறி என்பது இருப்பதிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவு. உடல் உழைப்பாளிகளுக்கு மிகவும் தேவையானது. 25 கோடி மக்கள் இரவு உணவின்றி வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு தூங்கச் செல்கிறார்களே, 125 நாடுகளில் பசியில் 111ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறதே – இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய பிரதமர் யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்று மூக்கை நுழைப்பது அவர் ஆட்சியின் தோல்வியைத்தான் காட்டுகிறது!
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்ட பாட்டம்? மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
ஒரு அரசியல் தலைவர் இறைச்சி உணவு உண்பதை வீடியோ எடுத்து பதிவிட்டாலே இந்தியர்களின் மனது புண்பட்டுவிடும் என்று பிரதமர் சொல்வது என்ன வகையான வாதம்? தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் – அந்தோ பரிதாபம்.