பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு!
ஆனால், தார்மீக உரிமை உண்டா?
திருச்சி – துறையூர் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின்
மாற்றாந்தாய் மனப்பான்மையை அம்பலப்படுத்தினார் தலைவர் ஆசிரியர்!
துறையூர், ஏப். 15 பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? பிரதமர் மோடியின் மாற்றாந்தாய் மனப்பான்மையை அம் பலப்படுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெரம்பலூர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு தழுவிய அளவில் சூறாவளியாய் சுற்றிச் சுழன்றுவரும் பயணத்தின் 13 ஆம் நாளான நேற்று (14.04.2024) மாலை 5.30 மணியளவில் தொடங்கி பெரம்பலூர், திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் உரையாற்றினார். முதல் கூட்டம் பெரம்பலூர் தொகுதி துறையூர் பாலக்கரை – கனரா வங்கி அருகில், துறையூர் கழக மாவட்டம் ஏற்பாட்டில், தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்து வாகனத்திலிருந்தபடியே ஆசிரியர் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ச,மணிவண்ணன் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.மகாமுனி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் தொடக்க உரையாற்றினார்.
பெரம்பலூரில் தமிழர் தலைவர்!
பெரம்பலூர் – திருச்சி சாலை, உப்பிலியாபுரம் சாலை, கிழக்கு ரத வீதி, உள்ளூர் சாலை என அதுவொரு நான்கு சாலைகள் சந்திப்பு! முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் வருகை தந்தார். அங்கே கூடியிருந்த பொதுமக்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் ஆசிரியரைக் காண முண்டியடித்துக் கொண்டு முன் னேறினர். சுற்றுப்பயணத்தில் ஒரு மாறுதல் போல் ஆசிரி யர் தனது வாகனத்தில் இருந்துகொண்டே பேசும்படி தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் இருந்த வாகனத்தை ஒரு தீபகற்பம் போல் மூன்று திசைகளிலும் மக்கள் சூழ்ந்து நின்று கவனிக்கத் தொடங்கினர். ஆசிரியரும் இடம், வலம் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பி பேசினார். மக்களில் சிலர் ஆசிரியரின் வய தைக் குறித்து தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர் பேசப்போவதை மக்கள் பலரும் தங்களின் கைபேசியில் பதிவு செய்ய தயார் நிலையில் இருந்தனர். ஆசிரியர் பேசுவதற்கு முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்வித்தார்.கூட்டணிக்கட்சிகளின் கொடிகள்,பதாகை கள் பிடித்தபடி மக்கள் ஆசிரியர் உரையை எதிர் கொண்டனர்.
துறையூர் திராவிடர் இயக்கத்தின் கோட்டை!
ஆசிரியர் தனது உரையில், ‘‘துறையூர் எப்போதுமே திராவிடர் இயக்கத்தின் கோட்டை என்று சொல்லத்தக்க வண்ணம் இருக்கும். ‘‘இந்தக் கோட்டையில் யாரும் ஓட்டு போட முடியுமே தவிர ஓட்டை போட முடியாது” என்கிற அளவுக்கு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இருக்கக்கூடிய பகுதி” என்று மக்கள் பெருமிதம் பெறக்கூடிய வகையில் தமது உரையில் தொடங்கினார். மேலும் அவர், “பா.ஜ.க. இரண்டு முறை ஆட்சியில் இருந்துவிட்டது. மறுபடியும் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்திட்டம் என்ன? கொள்கை என்ன? என்பதை நாம் கவனிக்க வேண்டும். மற்ற தேர்தல்களைப் போல் இதை நாம் பார்க்கக் கூடாது. காரணம் இது வேட்பாளர்களுக்கிடையில் நடக்கிற போராட்டம் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கிடையே நடக்கும் போராட்டம்” என்று சொல்லிவிட்டு, மக்கள் மனங்களில் இந்த தகவலை அழுத்தமாக பதிய வைக்க ”கோவையில் இளந்தலைவர் ராகுல் காந்தி பெரியார், ஆர்.எஸ்.எஸ். இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சொன்னாரல்லவா?” என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து இரண்டு தத்துவங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அணிகள் இரண்டு. ஒன்று சொன்னதை செய்கின்ற அணி! தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணி! இன்னொன்று சொன்னதற்கு நேர் எதிராக தொல்லைகளைச் செய்து, மக்களை வாழ விடாத அணி! பா.ஜ.க. தலைமையிலான அணி!” என்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் உண்மை நிலையை ஆழ மாகப் புரியவைத்தார்.
நமக்கு உண்மை பேசுகின்ற பிரதமர் வேண்டும்!
தொடர்ந்து தி.மு.க. அரசு செய்த சாதனைகளை மக்களோடு சம்பந்தப்படுத்தி, மக்களின் வாழ்க்கையில் அந்த சாதனைகள் என்னென்ன மாற்றங்களை; முன் னேற்றங்களை செய்திருக்கிறது என்பதைச் சொல்லி, தி.மு.க. அரசின் சாதனைகளை உலக அளவில் பல்வேறு நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால், பா.ஜ.க. அரசை அய்ரோப்பிய நாடுகள் கண்டிக்கின்றன என்று இரண்டு அணிகளையும் ஒப்பிட்டு, ஒப்பிட்டுப் பேசினார். பா.ஜ.க. 2014, 2019 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருவதற்காக கொடுத்த உத்தரவாதங்களான வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, விவசாயிகள் வாழ்வாதாரம், மகளிர் நலன் என எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களோடு எடுத்துரைத்தார். தி.மு.க. அரசு 7,000 கோடி விவசாயிகள் கடனை ரத்து செய்ததையும், தி.மு.க. அங்கம் பெற்ற காங்கிரஸ் அரசு இந்தியா முழுமைக்கும் ரூ.70,000 கோடிக்கு விவசாயிகளின் கடனை ரத்து செய்ததையும் சுட்டிக்காட்டினார். மக்கள் அது உண்மைதான் என்பதை அங்கீகரித்துப் பலமாகக் கைதட்டினர். தொடர்ந்து மற்றொரு அணியான பா.ஜ.க.வால் டில்லியில் இப்போது விவசாயிகள் போராடிக்கொண்டிருப்பதையும் நினைவூட் டினார். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் இந்த தேர்தல்! ஜூன் 5ஆம் தேதி இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்” என்று அழுத்தம் திருத்தமாக ஆசிரியர் சொல்லி முடித்ததும், ஒட்டுமொத்த மக்களும் உணர்வுப்பூர்வமாக பலமாகக் கைதட்டினர். இந்த உணர்வும், பலத்த கைதட்டலும் மக்கள் இதைத்தான் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதை பிரதிபலிப்பது போன்று இருந்தது.
மேலும் ஆசிரியர் அவர்கள், பிரதமர் மோடி இரட்டை நாக்கு உள்ளவர் என்பதை ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு நடவடிக்கைகளை தரவுகளுடன் எடுத்துரைத்தார். கூடுதலாக மோடியைப் போல் பொய் சொல்கிற ஒரு பிரதமரை இந்தியா இதுவரைப் பெற்றதில்லை என்று கூறினார். மக்கள் அதை ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் விதமாக தலையசைத்தனர். இறுதியாக வேட்பாளர் அருண் நேருவைப் பற்றி சுருக்கமாகக் கூறி, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டு, விடை பெற்றுக் கொண்டார்.
திருச்சியில் தமிழர் தலைவர்!
இரண்டாவது கூட்டமான திருச்சி தொகுதியின் ம.தி.மு.க. வேட்பாளரான துரை. வைகோவை ஆதரித்துப் பேசுவதற்காக பயணப்பட்டு, 8.30 மணிக்கெல்லாம் கூட்டம் நடைபெறும் இடமான கலைஞர் கருணாநிதி நகருக்கு (பேருந்து நிலையம் அருகில்) வந்து சேர்ந்தார். ஆசிரியர் வந்ததும் பேசிக்கொண்டிருந்த பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், ஆசிரியரை வரவேற்கும் விதமாக அவரின் சிறப்புகளைச் சொல்லி, ”அப்படிப்பட்டவர் உங்களிடம் துரை.வைகோ விற்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறார். அவரது உரையை முழுமையாகக் கேட்டு முடிவெடுங்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்து கொண்டார். திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமை ஏற்றார். மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து வேட்பாளருக்கு வாக்குகளைச் சேகரித்துப் பேசினர். நிறைவாக ஆசிரியர் பேசினார்.
தொடக்கத்தில், “நான் இங்கே வந்ததும், என்ன கறுத்துப் போய்விட்டீர்கள்? என்று அமைச்சரை விசாரித்தேன். அவர் கறுத்துப் போகவில்லை. கருத்தாகிப் போயிருக்கிறார்” என்பது அவரது பேச்சி லிருந்து தெரிகிறது” என்று எடுத்த எடுப்பிலேயே மேடையிருப்பவர்களையும், மக்களையும் ஒரு சேர சிரிக்க வைத்துவிட்டார். தொடர்ந்து மேடை அமைந்திருக்கும் இடத்தின் பெயரை மக்களிடமே கேட்டு, ’கலைஞர் கருணாநிதி நகர்’ என்று பதில் பெற்று, “இனிமேல் கே.கே.நகர் என்று சொல்லாதீர்கள். கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்லுங்கள்” என்று ஒரு பண்பாட்டு படையெடுப்பைத் தடுப்பதற்கான வேண்டுகோளை மக்கள் முன் வைத்தார். ஜூன் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். அந்த முடிவுகளை ஜூன் 3ஆம் தேதி நூற்றாண்டு நிறைவு காணும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு வெற்றிப் பரிசாக வழங்கவேண்டும்” என்று கேட்டு, பதிலாக பலமான கைதட்டல்களைப் பெற்றார். தொடர்ந்த அவர், “யாரெல்லாம் 400 என்று சொல்கிறார்களோ அவர்களெல்லாம் 420 என்று புரிந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னதும் புரிந்துகொண்ட மக்களிடமிருந்து சிரிப்பு வெடித்துக் கிளம்பிவிட்டது. இம்முறை அவர் நேரிடையாகவே, “பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் தமிழ்நாட்டிலேயே கூட குடியிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இதயங்களில் குடியேற முடியாது” என்றார். மக்கள் மத்தியில் உற்சாகம் பீறிட்டது கைதட் டல்கள் வழியே. மோடி நடத்திய ரோடு ஷோ பற்றி சொல்லும் போது, “நடந்த இடம் தியாகராயர் நகர், பார்ப்பனரல்லாத இயக்கத்தின் தோற்றுநர்களில் ஒருவர்! தொடங்கிய இடம் பனகல் பூங்கா! 100 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெண் களுக்கு வாக்குரிமை கொடுக்காத காலத்திலேயே தமிழ் நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த பிரீமியர்; திராவிடர் இயக்கத்தின் தலைவர்!” என்று சொல்லி மோடியின் கனவு பலிக்காது என்று குறிப்பிட்டார். ”மோடி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! தார்மீக உரிமை உண்டா?” என்றொரு ஆழமான கேள்வியை எழுப்பினார். “பிரதமர் மோடிக்கு இரண்டு பேர் சிம்மசொப்பனமாக இருக்கின்றனர். ஒருவர் நமது திராவிட நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! இன்னொருவர் இளம் தலைவர் ராகுல் காந்தி!” என்று ஆசிரியர் முடித்தாரோ, இல்லையோ மக்கள் அந்தக் கருத்தை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
கோயபல்சையும் மிஞ்சிய மோடி!
தொடர்ந்து மோடியை அம்பலப்படுத்த, “கோணிப் புளுகன் கோயபல்சையும் மிஞ்சிவிட்டார் மோடி” என்று சொல்லிவிட்டு அதற்கான ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினார். மோடியின் கேரண்ட் டீ… தண்ணீரில் தான் எழுதி வைக்கவேண்டும்” என்றார். தி.மு.க.வின் உறுதிமொழியை கற்பாறையில் எழுதி வைக்கலாம்” என்றார். இறுதியில், “நமக்கு உண்மை பேசுகிற பிரதமர் வேண்டும்! உணர்வுப்பூர்வமாக இந்தியா வின் 140 மக்களும் என் குடும்பம் என்று கருதுகிற பிரதமர் வேண்டும்! அந்தப் பிரதமர் நிச்சயமாக மோடி இல்லை! ஜூன் 5ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அப்படிப்பட்ட ஒரு பிரதமர் நமது கிடைப்பார். அதற்காக நீங்கள் உங்கள் வெற்றி வேட்பாளர் துரை.வைகோ அவர்களுக்குத் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பலத்த தொடர் கையொ லிகளுக்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.
கூட்டம் முடிந்ததும் ஆசிரியர் கையால் ஒரு பெண் புத்தககங்கள் வாங்க விரும்பினார். ஆசிரியர் கொடுத்தார். அந்தப் பெண் உணர்ச்சி மிகுதியில் ஆசிரி யரின் காலைத் தொட்டு வணங்க முற்பட ஆசிரியர் உடனடியாகத் தடுத்து, “அப்படிச் செய்யக்கூடாது” என்று அன்புடன் கடிந்துகொண்டார். அமைச்சர் உள்ளிட்ட அனைவரிடமும் ஆசிரியர் விடை பெற்றுக் கொண்டார். அங்கிருந்து திருச்சி பெரியார் மாளிகைக்கு வந்து உணவை முடித்துக் கொண்டு, மறுபடியும் அங்கிருந்து தஞ்சை புறப்பட்டுச் சென்று, நள்ளிரவுக்கு மேல் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியில் முகாம் அமைத்துக்கொண்டார்.
முதல் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர்கள்!
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க.நகரச் செயலாளர், நகர் மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, ம.தி.மு.க. ரத்தினம், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர் மற்றும் இயக்கத் தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசிரியர் பேசியதை கவனித்துக் கேட்டனர். நிறைவாக மாவட்டச் செயலாளர் தினேஷ்பாபு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இரண்டாம் கூட்டத்தில் முன்னிலை ஏற்றவர்கள்!
தி.மு.க. மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தி.மு.க. பகுதிச் செயலாளர் மணிவேல், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியதேவன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க. முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இந்திய கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்