புதுடில்லி, செப் 20 நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று (19.9.2023) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வழிகாட்டி பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் என அய்க்கிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ரஜிப் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பீகார் வழி காட்டுகிறது என்பதை இந்த மசோதா நிரூபித்துள்ளது. பீகார், 2006-இல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நாட்டிலேயே முதல் மாநிலமாக மாறியது. 2005 நவம்பரில் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே நிதிஷ்குமார் துணிச்சலான இந்நடவடிக்கையை எடுத்தார் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட ஒரே மாநிலம் பீகார். கல்வித்துறையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இப்போது 2 லட்சம் பெண் ஆசிரியர்கள் உள்ளனர். காவல் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக மேம்பட்டுள்ளது. 29,175 காவலர்களுடன், பீகாரில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காவல்துறை உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.