குமரன்தாஸ்
சமீபத்தில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுபவீ அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார், இது வழக்கமானதும் தொடர்ந்து பலராலும், ஒரே ஒரு கிராமத்திலே, ஜென்டில்மேன்…. போன்ற பல திரைப்படங்களிலும் எழுப்பப்பட்டு வருகின்றதுமான ஒரு கேள்விதான்! “ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்களே பள்ளியில் மாணவர்களிடம் ஜாதியைக்கேட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை ஆதரிப்பது ஏன்?” என்ற கேள்வி தான் அது. (இதே போன்ற தொரு கேள்வியை சென்னை இலக்கியத் திருவிழாவில் பிப்ரவரி 27 / 2024 அன்று கலந்துகொண்டு பேசிய போது தன்னை நோக்கி மாணவி ஒருவர் கேட்டதாக எழுத்தாளர் சுகுணா திவாகரும் பதிவு செய்துள்ளார்)
காரைக்குடி கல்லூரியில் கலந் துரையாடல் முடிந்த பின் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலின் போதும் ஒரு மாணவி “எங்களை விட கீழே இருப்பவர்கள் எங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை இட ஒதுக்கீடு மூலம் அபகரித்து விட்டனர் ” என்று குறைபட்டுக் கொண்டார். ஆனால் அம்மாணவிக்கு தமிழ்நாட்டில் மொத்த இட ஒதுக்கீடு எவ்வளவு? தங்களுக்கு அதில் வழங்கப்படும் இடங்கள் எவ்வளவு? அவருடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் அவருக்கும் கீழே உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு வழங்கப்படும் இடங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் எதுவும் அவருக்குத் தெரியாது என்ற உண்மை அவரோடு உரையாடியபோது நமக்குத் தெரிந்தது. மாணவர்களை விடுங்கள் படித்து அரசு வேலையில் இருப்போர் இதுபோல் பேசும்போது என்ன செய்வது?
ஆம், தோழர் திருமாவளவன் பணி உயர்விலும் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பேசியதை தமக்கும் சேர்த்துதான் அவர் கோரிக்கை வைக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் தமக்கு எதிரான கோரிக்கை அது எனக்கருதி எதிர்க்கும் இடைநிலை ஜாதி அரசு ஊழியரை என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்? இதில் இன்னும் பெரிய சோகம் என்னவென்றால் மேலே நாம் குறிப்பிட்ட மாணவியும், அந்த அரசு ஊழியரும் மிகப்பிற்படுத்தப்பட்ட (விஙிசி) வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதும் அவ்வரசு ஊழியர் வருவாய்த்துறையில் பணியாற்றுபவர் என்பதும்தான்!
ஆக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து ஒரு நூறாண்டு ஆகும் தருவாயில் இது போன்ற இட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல் இட ஒதுக்கீடு மூலம் பலனை அனுபவித்து வரக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியிலேயே பரவலாக ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருவது மிகவும் அருவருக்கத்தக்கதும் வேதனைக்குரியதுமாகும். இதற்கான பழியை நாம் அனைவரும் ஏற்கவேண்டும்.
ஏனென்றால் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பார்ப்பனர்கள் கோபப்படுவதில் அவதூறு பரப்புவதில் ஓர் அர்த்தமுள்ளது.அவர்கள் நாம் படித்துவிடக்கூடாது! முன்னேறி விடக்கூடாது, தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று பல நூறாண்டுகளாக தடுத்தவர்கள், ஆனால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த காலத்தில் 1920இல் பார்ப்பனரல்லாத அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து படிப்படியாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வளர்ந்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன் முதலில் 69 சதவீதமாக இட ஒதுக்கீடு உயர்ந்தது தமிழ்நாட்டில் தான். அதனாலேயே பார்ப் பனர்களின் எதிர்ப்பும் பல்வேறு வகையில் வெளிப்பட்டது. ஆனால் இன்றளவும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில் போதாமைகளும் அதிகார வர்க்கத்தின் இடையூறுகளும் நீடித்தே வருகிறது.
மேலும் ஒன்றிய அரசுப்பணியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களது எண்ணிக்கைக்கும் மிகக் குறைவாக 27சதவீதம் மட்டுமே வழங்கப்படும் நிலையும் அதையும் கூட முறையாக நடைமுறைப்படுத்தாத அவல நிலையும் நீடிக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களின் இடங்களை எல்லாம் உயர்ஜாதியினர் அபகரித்தல் தொடர்கிறது.
இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும், வஞ்சிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று பேசும் நிலைக்கும் வந்து சேர்ந்துள்ளனர். ஆக இட ஒதுக்கீடு, சமூகநீதி என்ற விடயத்திலும் பார்ப்பனியம் வெற்றி பெற்றுள்ளதையே இது காட்டுகிறது. மற்றொரு புறம் இட ஒதுக்கீட்டை காலம் காலமாக கேலி செய்தும் எதிர்த்தும் வந்த பார்ப்பனர்கள் ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் (ணிகீஷி) 10% இடங்களை அபகரிக்கவும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், பார்ப்பனரல்லாத மக்களை அவர்களுக்கு எதிராக அவர்களையே பல்வேறு அரங்கு களில் பேசவைத்த பார்ப்பனர்கள் சமூகநீதி விடயத்திலும் எதிராகப் பேசவைத்து தங்கள் நலனை நிலை நாட்டிக் கொள்கின்றனர். அதாவது பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் எதிரிகளாக்கி மோதவிட்டு தமது நலனைக் காத்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் தொகைக்கும் குறைவான (50+18+1=69) இடங்களைக் கொடுத்து விட்டு பொது என்கிற பெயரில் தமது (3%) மக்கள் தொகையைப்போல பத்து மடங்கு அதிகமாக 31 சதவீதம் இடத்தை அபகரித்துக் கொண்டதுடன் இட ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப் படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
இவ்வாறு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களே அவர்களது பிள்ளைகளே பேசுகின்ற யதார்த்த நிலையானது நமது சமூகநீதி தொடர்பான பிரச்சாரம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதாகவே உள்ளது.
இந்நிலை தொடருமானால் பார்ப் பனியப் பாசிசத்தால் சமூகநீதி குழி தோண்டிப் புதைக்கப்படுவதற்கு நமது பார்ப்பனரல்லாத மக்களே மண்ணை வெட்டிப் போடுபவர்களாக மாறும் நாள் தூரமில்லையோ என்று அச்சமாக உள்ளது.
ஏன் இவ்வாறு பார்ப்பனரல்லாத ஜாதியினர் மத்தியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான குரல் வளர்ந்து வருகிறது? என்பதும் இவ்விடயத்தில் பார்ப்பனர்களின் எதிர்ப் பிரச்சாரம் மட்டுமே முழுக் காரணம் என்றும் சொல்லிவிட இயலுமா? என்பதும் ஆய்வுக்குரியவையாகும்.
“தீண்டாமை ஓர் குற்றம்” என்ற வாசகங்கள் பள்ளிப் பாடநூல்களில் அச்சிடப்பட்டு அதனைத் தொடர்ந்து பார்த்தும் வாசித்தும் வரும் குழந்தைகள் மனதில் அவை பதிந்து விடுவதனால் நீண்ட கால நோக்கில் அவை நன்மை பயக்கிறது.
அதைப்போல இட ஒதுக்கீடு தொடர் பான நியாயத்தை, வரலாற்றுச்செய்திகளை எளிய வடிவில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் புகுத்திக் கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறே புதிதாக பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கான பவானி சாகர் (45 நாள்) பயிற்சிக்காலத்திலும் இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றியும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக இனிவரும் காலத்தில் இட ஒதுக்கீடு பற்றிய தெளிவு பார்ப்பனரல்லாதார் மத்தியில் ஏற்பட வழிபிறக்கும்.

		
		
		
		
		
		
		
		
		
ஆறாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையான பாடத்திட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய பாடங்கள் கட்டாயம் சேர்த்திட வேண்டும். சமூகநீதி எனும் ஒரு தனித்தாள் சமூகறிவியல் தேர்வில் வைத்திட வேண்டும்.