மன்னை சித்து
இந்திய ஒன்றியத்தின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என நீட்டி முழங்கும் ஒன்றிய மோ(ச)டி அரசு தேர்தலை மட்டும் 7 கட்டங்களாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19இல் அரங்கேற இருக்கிறது. உலக அரங்கில் பழைமையும் தொன்மையும் மிக்க நாடு, ஜனநாயகத்தின் மீது நூறு விழுக்காடு நம்பிக்கை கொண்ட நாடு, மதச்சார்பற்ற நாடு,என்பன போன்ற அடையாளங்களை இந்தியா பெற்றிருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகாலபா.ஜ.க. மோ(ச)டி ஆட்சியில் இவை எல்லாம் தவிடு பொடியாகி விட்டன. உலகநாடுகள் இந்தியாவை வேறு கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன. இது உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
முதலில் காந்தியார் மேல் தான் கை வைத்தார்கள். காந்தியாரை கடுமையாக விமர்சித்து முரண்பட்டவர் தந்தை பெரியார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியர்கள் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தந்தை பெரியார் தான் இந்த நாட்டுக்கு காந்தி நாடு என பெயர் வைக்க வேண்டும் என்றார். ஆம், காந்தியார் இந்தியாவின் அடையாளம் – ராட்டைக்கு முன் காந்தியார் உட்கார்ந்திருக்கும் படம் பிரபலம். ஆனால், மோடி வந்ததும் ராட்டைக்கு முன் மோடி அமர்ந்திருக்கும் படங்கள் வலம் வந்தன. எளிமையின்,தேசத்தின் குறியீடான ராட்டை முன் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் விலையில் சொக்காய் போட்ட மோடியின் படம் நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்பின் நல்ல மாதிரிகளை உருவாக்கினார். அவர் உருவாக்கிய பல நிறுவனங்கள், திட்டக்குழு உட்பட்ட பலவற்றையும் மோடி அரசு காலி செய்து விட்டது .நேரு பெயரில் அமைந்த அருங்காட்சியகத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. பதிலாக இந்திய நாட்டில் வகுப்புவாத விதையைத் தூவிய படேலுக்கு பிரமாண்ட சிலை வைத்து விழாக்கள் எடுத்தார்கள்.
பண மதிப்பிழப்பு – 2000 ரூபாய் அறிமுகம் கபட நாடகங்களாக அரங்கேற்றப்பட்டன. கள்ளப் பணத்தைக் கண்டு பிடிக்கலாம் என்றார்கள். அச்சடித்த 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே குவிந்துள்ளன என்பது கள்ளத்தனமாகவே இன்னமும் உள்ளது.
ரூபாய் 400 இல் இருந்த சமையல் எரிவாயு இன்று ரூபாய் 1100. எளிய ,நடுத்தர மக்களுக்குப் பெரும் பாதிப்பு. வேலை வாய்ப்புகள் இல்லை. தேர்தலில் நிற்கப் பணம் இல்லை. அதனால் போட்டியிடவில்லை என்கின்றார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கார்ப்பரேட், வணிக, தரகு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பத்திரமாக வாங்கிய ரூபாய் 8500 கோடி எங்கே போனது? யாரிடம் உள்ளது?.
கரோனா காலத்தில் மக்களை அச்சுறுத்தி ஊரடங்கு போட்டார்கள். விளக்கேற்றச் சொன்னார்கள் – மணி அடிக்கச் சொன்னார்கள். நாட்டு மக்கள் விளக்கேற்றி, மணி அடித்த போதும் பல நூறு கோடிகளை பகாசுர மருந்து நிறுவனங்கள் மோடியின் பி.ஜே.பி. கட்சிக்கு தேர்தல் பத்திரமாக வழங்கியுள்ளது. இன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனியும் மோடி ஏமாற்ற முடியாது .வேண்டாம் மோடி ,வேண்டவே வேண்டாம் மீண்டும் மோ(ச)டி.
இந்திய ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனங்கள் அய்.டி.யும், இ.டி.யும் இன்று அவை மோடி ,அமித்ஷா, நட்டா கூட்டத்தின் ஏவல்களாக ஆகி விட்டன மாநிலக் கட்சிகளை, எதிர்க் கட்சிகளை அதன் தலைவர்களை மிரட்டவும் ,சிதைக்கவும் செய்கின்றன .எல்லாம் அத்துமீறல்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். எனவே, அவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள் – வேண்டாம் மோடி ,வேண்டவே வேண்டாம் மீண்டும் மோ(ச)டி.
காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு வருமான வரித்துறை அபராதம் போடுகிறது. கணக்கை முடக்குகிறது. அதுவும் தேர்தல் தருணத்தில். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்பதை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நிரூபித்து விட்டது. நாட்டு மக்கள் இன்னும் ஒரு ‘எமர்ஜென்சி’யை சந்திக்க தயாராக இல்லை. எனவே, முடிவெடுத்து விட்டார்கள் வேண்டாம் மோடி, மீண்டும் வேண்டவே வேண்டாம் மோ(ச)டி.
சட்டம், நீதி, மரபுகள் எதைப் பற்றியும் மோடி அரசுக்கு அக்கறை இல்லை. திட்டமிட்ட அரசப் பயங்கரவாதத்தை, பாசிசத்தை நோக்கி நடக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்லது செய்வதாக நாடகம் வேறு .ஆர்.எஸ்.எஸ். முகவர் ஆர்.என் ரவி என்ற மேனாள் காவல் அதிகாரியை ஆளுநராக்கி இணை அரசாங்கம் நடத்துகிறது. இதனால், தமிழ்நாட்டு மக்கள் பெரும் துயரத்தை அடைகிறார்கள். இதுபோன்று பாஜக ஆளாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசு களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளாக ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத் துவதால் மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் வேண்டாம் மோடி, மீண்டும் வேண்டவே வேண்டாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை காவியாக்க முயன்றார்கள் – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று பழைய பல்லவியைப் பாடி பார்த்தார்கள். ஜாதி, சமய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த அய்யா வைகுண்டரை ஸநாதனி என்றார்கள். தமிழ் தனித்த தொன்மையான திராவிட மொழி என்ன நிரூபித்த கால்டுவெல் மீது சேறுவாரி இறைக்கிறார்கள்.
செம்மொழியான தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு ஈடாக நிதி வழங்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக்கவில்லை. தேசிய புதிய கல்விக் கொள்கையால் மாநில மொழிகள் பாதிக்கப்படும் நிலை. ஜி.எஸ்.டி.யில் கூட உரிய பங்கு தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை. சென்னை , தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சரே பலமுறை கேட்டும் நிதி தரவில்லை. ஏமாற்றம், நயவஞ்சகம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் எல்லாரும் ஒருமித்த குரலோடு ஒலிக்கும் குரல் வேண்டாம் மோடி, மீண்டும் வேண்டவே வேண்டாம் மோ(ச)டி.
இந்தியாவுக்கு எதிரானது பி.ஜே.பி, இந்திய மக்களைப் பிளவுபடுத்துவது பி.ஜே.பி. தமிழ், தமிழர் நலனுக்கு எதிரானது பி.ஜே.பி. மாநில உரிமைகளுக்கு எதிரானது பி.ஜே.பி.
இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி மோடி அரசை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தல் களம் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் முழு மூச்சில் இறங்கியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடாத இயக்கம், அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் இயக்கம், யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பத்தில் கவனம் கொண்டு திராவிடர் கழகம் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது .
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது 91 வயதிலும் 19 வயது இளைஞரை போல் தேர்தல் பிரச்சாரப் பெரும் பயணத்தை நாளை ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். மொத்தம் 15 நாள்கள். நாள் ஒன்றுக்கு 2 கூட்டங்கள் என மொத்தம் 30 கூட்டங்கள். எப்படி முடிகிறது இவரால் என தமிழ்நாடு தலைவர்கள் அல்ல, இந்திய அளவிலான தலைவர் களே வியக்கின்றனர்.
“என்னுடைய உடல் நலம் எப்படியிருந்தாலும் சுற்றுப்பயணம் போகாமல் இருக்க முடியாது. இந்தக் காலக்கட்டத்தில் உடல் நலத்தைக் காரணம் காட்டி நான் ஓய்வெடுக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. தந்தை பெரியார் 94 வயதிலும் மூத்திரச் சட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். அதை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என சுட்டிக்காட்டி பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார்.
முத்தமிழறிஞர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தோழர் இரா .முத்தரசன், சி.பி.எம். செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் பல் வேறு கட்டங்களில் நேரிடையாகவும் கூட்டங்களில் பேசும் போதும் தமிழர் தலைவரின் வயது, உடல் நலனை கருத்தில் கொண்டு சுற்றுப் பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என கூறிய போதும் தன்னால் சுற்றுப்பயணம் செய்யாமல் இருக்க முடியாது என்பதை தெரிவித்ததை நாம் எல்லோரும் அறிவோம்.
மண்டல் ஆணைய அறிக்கையை நிறைவேற்ற, காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண , ஈழத் தமிழர்களை பாதுக்காக்க, மாநில உரிமைகளுக்காக , மதவாத எதிர்ப்பு ,ஜாதி ஒழிப்பு , மனுதர்ம எதிர்ப்பு , ஹிந்தி எதிர்ப்பு என பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக , வடக்கிலிருந்து தெற்காக பல ஆயிரம் கி.மீ.பிரச்சாரப் பெரும் பயணம் மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி கண்டவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் .
கடந்த ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சியின் ராஜகோபாலச்சாரியார் ( ராஜாஜி) கொண்டு வந்து படுதோல்வி அடைந்த குலக்கல்வித் திட்டத்தின் மறு உருவமான விஸ்வகர்மா திட்டத்தினை எதிர்த்து தனது 91 ஆவது வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பெரும் நகரம் முதல் சிறிய கிராம் வரை பிரச்சாரப் பெரும் பயணம் மேற்கொண்டு திட்டத்தின் ஆபத்தினை மக்களுக்கு கொண்டு சென்று எச்சரிக்கை ஊட்டியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
இன்னும் சில மாதங்களில் 92 ஆவது வயதை தொட இருக்கும் அந்த தலைவர் தான் இன்று சமூக நீதியையும் – மதச்சார்பின்மையும் – ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் மதவாத பிஜேபி கூட்டணியை வீழ்த்திட இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம் என முழுக்கத்தை முன் வைத்து தொடங்கும் பிச்சாரப் பெரும் பயணம் வெற்றி பெறட்டும்
தமிழர் தலைவரின் பிரச்சாரம் பாஜக ஆட்சியை வீழ்த்த தொடக்கப் புள்ளியாக அமையட்டும்… வாக்குப் பதிவு நாள் விடியல் நாளாக இருக்கட்டும்… வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ஆம் தேதி பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும் …
ஓங்கி குரல் கொடுப்போம்
வேண்டாம் மோடி.. மீண்டும் வேண்டவே வேண்டம் மோ(ச)டி ஆட்சி.
வெல்லட்டும் தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் – மலரட்டும் இந்தியா கூட்டணி ஆட்சி .