தேவதாசி முறை: முடிந்து போனதா? இன்றும் தொடர்கிறதா?

viduthalai
4 Min Read

பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாக பரவலாக நம்பப்பட்ட ஒரு வழக்கம் இன்னமும்கூட நடந்துகொண்டிருக்கிறது.
கடவுள் பெயரைச் சொல்லி பெண்குழந்தைகளின் வாழ்வை சுரண்டும் இந்த ‘மாத்தம்மா’ நடைமுறையைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் யார்? இதில் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனைபேர்? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடத் தொடங்கும்போது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.

மகாராட்டிரா – தெலங்கான மாநில எல்லைகளில் மற்றும் ஆந்திராவின் சில மாவட்டங்களில் மாத்தம்மா தேவி கோவிலுக்கு ”பெண் குழந்தைகளை விடுவது” நடைமுறையில் உள்ளது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு மாநிலங்களில் இருந்து அறிக்கை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

சடங்கின் ஒரு பகுதியாக, அச்சிறுமிகள் மணப் பெண்ணாக உடையணிந்து விழா முடிந்தவுடன், அவர்களின் ஆடைகள் அய்ந்து சிறுவர்களால் அகற்றப் படுகின்றன, கிட்டத்தட்ட நிர்வாணமாக அங்கேயே விடப்படுகின்றனர். பின்னர் அச்சிறுமிகள் மாத்தம்மா கோவில்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு பொது சொத்து என்று கருதப்பட்டு பாலியல் சுரண்டலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முடியவில்லை “மாத்தம்மா” நடைமுறை

சித்தூர் மாவட்டத்தின் கிராமங்களில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும், திருப்பதி நகரின் மய்யத்திலும் மாத்தம்மா கோவில்களைக் காணமுடியும். சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில், இதில் அதிகமாக பெரும்பாலும் புட்டூர், நகரி, நாகலாபுரம், பிச்சாத்தூர், கே.வி.பி.புரம் மற்றும் சிறீகாளஹஸ்தி, எர்பேடு, தொட்டம்பேடு, பி.என். கந்திரிகா, நாராயணவனம். ஆகிய இடங்களில் இவ்வழக்கம் உள்ளது. மேற்கு மண்டலங்களான பாயிரெட்டிபள்ளி மற்றும் தவனம்பலே மற்றும்பங்காருபாலெம் ஆகிய இடங்களிலும் தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மாத்தம்மா வழக்கம் ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானா பகுதியிலும் சம அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தேவதாசி என அழைக்கப்படும் இவ்வழக்கம் என்றோ வழக்கொழிந்துபோனது. ஆனால் மாத்தம்மா என்ற நடைமுறை பெயரில் இன்றும்தொடர்கிறது. இவர்களின் எண்ணிக்கையை சில அரசு சாரா அமைப்புகளாலும் சில தன்னார்வலர்களாலும் வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் ‘பாசிவி’, கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ‘சானி’, விஜயநகரம் மற்றும் சிறீகாகுளம் – மாவட்டங்களில் ‘பார்வதி’ என்று இவ்வழக்கம் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சமூக அழுத்தங்கள் காரணமாக பெண்கள்மீதான இச்சுரண்டல் முறையை விட்டு வெளியேற முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது.

திருமணம் இல்லாத வாழ்க்கை

கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த மாத்தம்மாவாக நேர்ந்துவிடப்பட்ட – ஒரு பெண் வயது 40, வீட்டு வேலை செய்வதன் நிமித்தம் சிறீகாளஹஸ்தியில் குடியேற தன் கிராமத்தைவிட்டு வெளியேற விரும்பினாலும், அங்குள்ள இளைஞர்கள் வெளியேற அனுமதிக்காததோடு, எஜமானரிடமே தங்கியிருக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.
திருப்பதி மண்டலத்தின் எம்.ஆர்.பள்ளியைச் -சேர்ந்த ஒரு தினக்கூலியான 14 வயது மாத்தமாவின் தந்தை மாத்தையா, தனது மகள் பிறந்ததிலிருந்து இதற்காக நேர்ந்துவிட்டு விடவேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாகக் கூறுகிறார்.

”மாத்தம்மா தெய்வத்திற்கு நாங்கள் அவளை நேர்ந்துவிட்டோம். அப்போது அவளுக்கு வயது 3, அப்போதிலிருந்தே அவள் அங்குதான் – வளர்ந்தாள். திருமணம் இல்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு வகையில் இது வேதனையானதுதான். ஆனால் நாங்கள் தெய்வீக சக்திக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம்” என்கிறார்.
சமூக ஆர்வலர்களோ, இவ்வழக்கத்தினால் பெண்கள் சுரண்டப்படுவதாகவும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொழிலாளர்களாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதில் நிறைய பெண்கள் வயதாகி தனிமையில் இறந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் மாத்தம்மா கோவில்களிலேயே அவர்கள் தினமும் உறங்கவேண்டும். ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள வீடுகளில் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம்தான். ஆந்திர சட்டப்பேரவையில் இப்பிரச்சினையை எழுப்பினர்.
மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம்

புத்தூர் மற்றும் சிறீகாளஹஸ்தி கோட்டங்களைச் சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், இந்த மாத்தம்மா முறை இன்னும் பல மண்டலங்களில் நடைமுறையில்தான் உள்ளது. இருந்தாலும், முறையான தரவு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் கிராமப் பெரியவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லாததால் அறிவியல் ரீதியான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்படவில்லை.இது சமூகத்தின் உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதத்தில், அரசு இயந்திரங்களும் மற்றும் அரசியல் கட்சிகள் பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப் படுவதில்லை. மேலும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட சமூகத்தை சிறுபிரிவு மக்களாகவே பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகின்றனர். அதோடுஅம்மக்களிடம் பெரிய ஓட்டுவங்கியும் இல்லை என்கிறார் மதர்ஸ் கிராமப் புற ஆதரவற்றவர்களுக்கான கல்விக்கழக தலைவர் என்.விஜயகுமார்.

முப்பது ஆண்டுகளாக திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேனாள் ஒன்றிய அமைச்சர் சிந்தா மோகன், “பல நூற்றாண்டுகளாக மாதிகா சமூகத்தினரை சுரண்டுவதற்கான ஒரு சாட்சியமாக மாத்தம்மா முறை உள்ளது. இதனால் இச்சமூகம் பொருளாதார வளர்ச்சி இன்றி நீண்டகாலமாகவே நலிவடைந்த நிலையில் உள்ளது. மறுவாழ்வு என்ற பெயரில் அரசுகளும் சிறு தொகையை வழங்கி நிறுத்திக்கொள்கிறது. இதனால் இந்த பெண்கள் தொடர்ந்துஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது இவர்களை இந்நிலையில் வைத்துள்ள சமூக அமைப்புமுறையைப் போலவே மோசமானது” என்று கூறினார்.

சித்தூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.ராஜசேகர் பாபு, தான், மாத்தம்மாக்களின் வாழ்வுநிலையை ஆராய்ந்துவருவதாகவும், உண்மைகளைக் கண்டறிந்து அரசின் -கவனத்திற்கு எடுத்துச்செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள்படி, மாதிகா சமூகத்தினர் வாழும் கிராமங்கள் பலவற்றிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாத்தம்மாக்கள் உள்ளதாகத் கூறுகின்றன. இவர்களில் 19 வயதிலிருந்து 30 வயதுக்குட்ட நிலையில் 400 பேரூம், 15 வயதுக்கு குறைவான சிறுமிகளாக 350 பேரும் உள்ளனராம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *