அன்னை மணியம்மையார் வீரத்தின் விளைநிலம் – விவேகத்தினுடைய கருவூலம் – அமைதிப் பூங்கா – ஆவேசப்படவேண்டிய நேரத்தில், ஆவேசப்பட்டு, ஒரு முழுமையான செயல்திறனை உருவாக்கிய ஒரு தலைமை!
அப்படிப்பட்ட தலைமையில் பழகிய நாங்கள், லட்சியத்திற்காக, கொள்கைக்காக எந்த விலையும் கொடுப்போம்; எங்களையும் இழப்போம்!
அன்னையார் நினைவு நாளில் நாங்கள் ஏற்கும் உறுதிமொழி!
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சென்னை, மார்ச் 27 அன்னை மணியம்மையார் வீரத்தின் விளைநிலம்! விவேகத்தினுடைய கருவூலம்! அமைதிப் பூங்கா! ஆவேசப்படவேண்டிய நேரத்தில், ஆவேசப்பட்டு, ஒரு முழுமையான செயல் திறனை உருவாக்கிய ஒரு தலைமை. இப்படிப்பட்ட தலைமையில் பழகிய நாங்கள், லட்சியத்திற்காக, கொள் கைக்காக எந்த விலையும் கொடுப்போம்; எங்களையும் இழப்போம். இதுவே அன்னையார் நினைவு நாளில் நாங்கள் ஏற்கும் உறுதிமொழி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
கடந்த 16-3-2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தொண்டறச் செம்மல் அன்னை மணி யம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் கருத்தரங் கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
25-3-2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
அன்னை மணியம்மையார் அவர்கள் கேட்டார், ‘‘எங்கள் தோழர்களை கைது செய்தது எந்த அடிப்படை யில்?” என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதினார்.
அன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேனாள் முதலமைச்சர் சுகாதியா என்பவர் ஆளுநராக இருந்தார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய கடிதத்தை, அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த பிரமானந்த ரெட்டியார் அவர்களுக்கு அனுப்பினார் ஆளுநர் சுகாதியா.
எங்கள் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள், சிறையில் அடைத்திருக்கிறீர்கள்?
உள்துறை அமைச்சரிடமிருந்து கடிதம் வரு கிறது. ‘‘நான் ராஜ்பவனுக்கு வந்து தங்குகிறேன். அப்பொழுது நீங்கள் என்னை வந்து பாருங்கள்” என்று.
அன்னை மணியம்மையார் அவர்கள், ராஜ்பவ னுக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து, ‘‘எங்களுடைய தோழர்களை கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள்” என்ற தகவலை சொல்கிறார்; அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரமானந்த ரெட்டியிடம் சொல் கிறார்கள்.
அப்போது பிரமானந்த ரெட்டி, ‘‘நான் பச்சை யப்பன் கல்லூரியில்தான் படித்தேன். எனக்குத் தமிழ் தெரியும். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லவேண்டிய தில்லை” என்றார்.
அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘எங்கள் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எதற்காக ‘மிசா’ சட்டத்தில் கைது செய்து சிறையில் வைத் திருக்கிறார்கள்?” என்றார்.
தி.மு.க.விற்கும் – உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள்: பிரமானந்த ரெட்டி!
‘‘தி.மு.க.வை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் அல்லவா, அதனால்தான். இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள், எங்களுக்கும், தி.மு.க.விற்கும் சம்பந்தம் இல்லை என்று ஓர் அறிக்கை கொடுங்கள்; அப்படி நீங்கள் அறிக்கை கொடுத்தால், நாளைக்கே உங்கள் தோழர்களை வெளியே விடச் சொல்கிறோம்” என்றார்.
‘‘நீங்கள் சொல்வதைப்போன்று செய்யமாட்டோம்” -அன்னை மணியம்மையார்!
அவர் சொல்லி முடித்தவுடன், மணியம்மையார் அவர்கள் எழுந்து, ‘‘அய்யா, ரொம்ப நன்றி! எங்கள் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்திருக்கின்ற உறவு என்பது இப்போது நாங்கள் உருவாக்கியது அல்ல. எங்கள் தலைவர் காலத்திலிருந்து இருக்கின்ற உறவு அது. ஆகவே, அதனை விட்டுவிட்டு வாருங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்படி நாங்கள் செய்யமாட்டோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருந்தாலும் சரி, அங்கேயே அவர்கள் இறந்தாலும் சரி, அவர்களுடைய வாழ்க்கையே முடிந்தாலும் சரி; நீங்கள் சொல்வதைப் போன்று செய்யமாட்டோம்; மிக்க நன்றி!” என்று சொல்லி விட்டு, வெளியே வந்துவிட்டார்.
ஆகவே, இந்தத் துணிவு வேறு எந்தத் தலைவருக்கு இருக்கும்?
எங்களுக்குப் பெருமையே அதுதானே!
சிறைச்சாலையில் உள்ள சிறை அதிகாரி எங்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதுபோன்று, எங்கள் மனதில் ஒரு பயத்தை உருவாக்குவதற்காக, அச்சுறுத்துவதற்காக சொல்வார்.
என்னையும், மாறன் போன்றவர்களையும் அந்த சிறை அதிகாரி அழைத்து, எங்களிடம் அணுகூலமாகப் பேசுவதுபோன்று பேசினார்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்கவேண்டும்!
‘‘நாளைக்குக் காலையில் ஓர் அறிவிப்பு வரப் போகிறது. அது என்னவென்றால், உங்கள் கட்சிகளைத் தடை செய்யப் போகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்று தான் இருக்கும். ஆகவே, உங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்கவேண்டும். வெளியில் போகலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். எனக்குக் கிடைத்த தகவலை உங்களிடம் சொல்கிறேன்” என்று எங்களை மூளைச்சலவை செய்வதுபோன்று பேசிவிட்டு, எங்களையெல்லாம் பார்த்தார்.
நாங்கள் எல்லாம் பயப்படுவோம் என்று பார்த்தார் அவர்.
உடனே நான், ‘‘அப்படிங்களா, சொன்னதற்கு மிகவும் நன்றி!” என்றேன்.
அந்த சிறை அதிகாரியின், பெற்றோருக்கு ஈரோட்டில் திருமணம் செய்து வைத்தவர் தந்தை பெரியார்தான். சமூகநீதியால்தான் சிறை அதிகாரியாக வரக்கூடிய வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.
எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராகத்தான் வந்திருக்கின்றோம்; என்ன நடந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை!
மேலும் நான் அவரிடம், ‘‘பங்களாதேஷ் உரு வாவதற்காகப் பாடுபட்ட முஜிபுர் ரகுமானுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தார்கள். அந்தத் தண்டனையை நிறைவேற்றுகிற நாள் நெருங்கி வரும்பொழுதுதான், ‘‘சோனார் பங்களா” – தங்க வங்கம் என்று அவர் சிறையிலிருந்து விடுதலை பெற்று, அவரே அதிபரானார். இதுதான் அரசியல். இரண்டும், இரண்டும் நான்கு என்பது அரசியல் அல்ல. இரண்டும், இரண்டும் பூஜ்ஜியமாகலாம்; இரண்டும், இரண்டும் 14 ஆகலாம்; 16 ஆகலாம்; என்ன நடக்கும் என்று தெரியாது. எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராகத்தான் வந்திருக்கின்றோம்; என்ன நடந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை” என்றேன்.
பிற்காலத்தில் அந்த சிறை அதிகாரி பல விசாரணை களுக்கு ஆளாகி, ‘‘என்னைப்பற்றி விசாரணையில் சாதகமாகச் சொல்லுங்கள்” என்று பரிந்துரைக்கு வந்தார்.
ஆகவே, எங்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இதெல்லாம் மிகச் சாதாரணம். இதை ஒரு பொருட்டாகக் கூட சொல்லமாட்டோம்; ஆனால், நம்முடைய தோழர் கள் பலருக்கு என்ன நடந்தது என்று தெரியவேண்டும். மோடிக்கும் தெரியவேண்டும்; ஏனென்றால், மிசா காலத்தில், மோடியும் சிறையில் இருந்தவர். அதிகார வர்க்கத்திற்கு வரும்பொழுது, பழைய நிகழ்வுகள் மறந்துபோய்விடும். நாங்கள் எப்பொழுதுமே அதிகாரத் திற்குப் போகாதவர்கள் என்பதால், எல்லா நிகழ்வு களையும் மறக்காமல் நினைவில் வைத்து, யாருக்கு, எப்பொழுது நினைவூட்டவேண்டுமோ, அப்பொழுது நினைவூட்டுவோம். அதுதான் எங்களுடைய வாடிக்கை, வழமையாகும்.
ஆகவே தோழர்களே, அன்னை மணியம்மையாரு டைய செயல்திறன் சாதாரணமானதல்ல.
சென்னை காவல்துறை ஆணையராக ஷெனாய் என்பவர் இருந்தார். அவர் கன்னடம் கலந்துதான் தமிழ் பேசுவார். ‘‘என்னாங்கோ” என்றுதான் பேசுவார். கலைஞர் அவர்கள், அதை இமிடேட் செய்து காட்டுவார்.
என்னய்யா, உங்கள் ஷெனாய் வந்தாரே, ‘‘என் னாங்கோ” என்று கேட்டாரா? என்பார்.
பெரியாராக இருந்தால், அவர் எந்த முடிவையும் எடுப்பார்; ஆனால்,
‘‘நான் பெரியார் இல்லையே!”
‘இராவண லீலா’வை அன்னை மணியம் மையார் அவர்கள் நடத்தியபோது, ‘‘என்னாங் கோமா நீங்க, இவ்வளவு நேரம் பேசினோம்; பெரியார் அய்யாவா இருந்தால், இந்நேரம் விட்டிருப்பாரு; நீங்கள் என்னாங்கம்மா இப்படி இருக்கீங்க, கொஞ்சம் யோசிக்கக் கூடாதாம்மா?” என்று சொன்னார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் அமைதி யாக, ‘‘அய்யா நீங்கள் சொல்வது உண்மைதான். பெரியாராக இருந்தால், அவர் எந்த முடிவையும் எடுப்பார். ஆனால், நான் பெரியார் இல்லையே! பெரியார் தொண்டர்கள், பெரியார் என்ன சொன் னாலும் கேட்டுக்கொள்வார்கள்; ஆனால், நான் என்ன சொன்னாலும், அவர்கள் கேட்பார்கள் என்று சொல்ல முடியுமா?” என்று நாசூக்காக, மறுக்க முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக சொன் னார்கள்.
இதுதான் அந்தத் தலைமைக்குச் சிறப்பு.
ஆகவேதான், அன்னை மணியம்மையாரின் ஒவ் வொரு செயலும் சாதாரணமானதல்ல.
சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகியோர் அங்கேயே இறந்தனர். அவர் களை சிறைச் சாலைக்குள்ளேயே புதைத்துவிட்டனர்.
அந்தத் தகவல், மருத்துவமனையில் இருந்த தந்தை பெரியாருக்குக் கிடைத்தவுடன், முதலமைச்சர் காமராஜர் அவர்களையும், உள்துறை அமைச்சராக இருந்த பக்த வத்சலத்தையும் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்குக்கூட உங்களுடையஆட்சியில் மனிதாபிமானம் இல்லையா?
முதலமைச்சர் காமராஜரை சந்தித்து, அன்னையார் அவர்கள் மிகவும் கோபத்துடன் கேட்டார், ‘‘எங்கள் தோழர்கள் போராட்டம் நடத்தி சிறையேகினர். அவர்கள் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத் துவதற்குக்கூட உங்களுடைய ஆட்சியில் மனிதாபி மானம் இல்லையா?” என்று.
உடனே முதலமைச்சர் காமராஜர் அவர்கள், ‘‘அம்மா, அம்மா, பதறாதீங்க; என் கவனத்திற்கு இந்தத் தகவல் வரவில்லை” என்று சொல்லி, அவரே உள்துறை அமைச்சரிடம் சொல்லி, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
சென்னையிலிருந்து அன்னை மணியம்மையார் அவர்கள் திருச்சிக்கு வந்தார். நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் பிளைமவுத் கார்தான் அதற்குப் பயன்பட்டது.
சிறைச்சாலையில் புதைக்கப்பட்டவர்களின் உடல் களைத் தோண்டி எடுத்து, அந்த உடல்களை பெரியார் மாளிகையில் கொண்டு வந்து வைத்தனர். ஏராளமான தோழர்கள் திரண்டு வந்துவிட்டனர்.
அப்பொழுது நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டம் அது.
நேரமாகிவிட்டது, உடல்களை அடக்கம் செய்வதற் கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று, எங்கள் இயக்கத் தலைவராக இருந்த வேதாச்சலத்திற்கு நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர்.
வேதாசலம் அவர்கள் எங்களிடம் வந்து காவல்துறையினர் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்.
‘‘இல்லை, அம்மா வந்த பிறகுதான் எடுப்போம்” என்று சொன்னோம்.
மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படுகின்ற சூழல். அன்றைய திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் சோலை அய்.பி.எஸ்.
காவல்துறை அதிகாரியின் நெருக்கடியும் – அன்னையாரின் உறுதியும்!
அன்னையார் வந்தவுடன், இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாகச் சென்றோம். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஊர்வலம் செல்கிறது. ‘‘அவ்வழியே போகக்கூடாது; வேறு பக்கம்தான் போகவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இல்லையென்றால் தடியடி செய்வோம்” என்று நெருக்கடி கொடுத்தனர்.
உடனே அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘எங்கள் தோழர்களை சிறையில் பிணமாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். பிணமாகக் கொடுத்த பிறகு, அந்த உடல்களை நாங்கள் சுடுகாட்டிற்குக் கொண்டு போவதற்குக்கூட உங்கள் ராஜ்ஜியத்தில் இடமில்லையா? உங்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவீர்களா? இந்த வழியாகத்தான் நாங்கள் போவோம்; என்ன செய்கிறீர்கள் என்று பார்ப் போம்; எல்லோரும் அப்படியே உட்காருங்கள், யாரும் கலையவேண்டாம்” என்று சொன்னார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் அப்படியே உட்கார்ந்து விட்டார்கள்.
அந்தக் காவல்துறை அதிகாரி மிரண்டு போய் விட்டார்; அவர் என்னிடம் வந்து, ‘‘அய்யா மன்னிக்கனும். அம்மாவிடம் சொல்லுங்கள்; இதே வழியாகப் போகலாம்” என்று.
நான் அவரிடம் மெதுவாகச் சொன்னேன், ‘‘ஏன், சார், இதை முன்பே சொல்லியிருக்கலாம் அல்லவா? வம்பை விலைக்கு வாங்கவேண்டுமா?” என்றேன்.
தஞ்சையில் திருவையாறு மஜீத் மறைவின்போது….
அதேபோன்று, தஞ்சையில் திருவையாறு மஜீத் என்ற தோழருடைய இறுதி ஊர்வலம். இரண்டாவது நிகழ்வு அது. நடுரோட்டில் அப்படியே உட்காருங்கள் என்றார் அன்னை மணியம்மையார், அவ்வளவு பேரும் அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.
ஒரு தலைமை என்று சொன்னால், அதுவும் தந்தை பெரியாருக்குப் பிறகு, கொந்தளிப்பான சூழலில், அத் தனை தோழர்கள் திரண்டிருந்த கூட்டத்தில், ‘‘உட் காருங்கள்” என்ற ஒரே வார்த்தையை சொன்னவுடன், அந்த நேரத்தில், அன்னையாருக்கு வந்த ஆவேசம் இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. அந்த வார்த்தையை மக்கள் அப்படியே மதித்தனர்.
காரணம் என்ன?
அப்பழுக்கற்ற தொண்டு – உறுதி!
எனவேதான், அப்படிப்பட்ட தலைமையை நாம் பெற்றிருக்கின்றோம்.
வடக்கே இருந்து வந்தவர்கள், நம்மை மிரட்டுகிறார்கள். ‘‘அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம்; காணாமல் போய்விடுவோம்” என்று சொல்கிறார்கள்.
‘‘காணாமல் போய்விடுவீர்கள்; கணக்குச் சொல்லியாக வேண்டும்” என்கிறார்.
சரிதான், நீங்கள் கணக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும், உச்சநீதிமன்றத்திற்கு.
பிரதமர் மோடி கொடுத்த கேரண்டீயெல்லாம் புளித்துப் போய்விட்டது!
இன்றைக்குத் தொலைக்காட்சியைப் பார்ப்பதையே கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறார்கள் நிறைய பேர். ஏனென்றால், தொலைக்காட்சியில் புதிதாக டீ வியாபாரம் வருகிறது. ‘டீ, டீ, டீ” என்று. என்னவென்றால், ‘‘கேரண்டீடீடீ” என்கிறார். அந்தக் கேரண்டீயெல்லாம் புளித்துப் போய்விட்டது.
ஆகவே, அன்னை மணியம்மையாரை நாம் நினைக்கின்றோம் என்றால்,
வீரத்தின் விளைநிலம்!
விவேகத்தினுடைய கருவூலம்!
அமைதிப் பூங்கா!
ஆவேசப்படவேண்டிய நேரத்தில், ஆவேசப்பட்டு, ஒரு முழுமையான செயல்திறனை உருவாக்கிய ஒரு தலைமை.
இப்படிப்பட்ட தலைமையில் பழகிய நாங்கள், லட்சியத்திற்காக, கொள்கைக்காக எந்த விலையும் கொடுப்போம்; எங்களையும் இழப்போம். இதுவே அன்னையார் நினைவு நாளில் நாங்கள் ஏற்கும் உறுதிமொழி!
ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய புதிய ஆட்சி ஒன்றியத்தில் மலரும்!
எனவே, தோன்றப் போவது புதிய ஆட்சி- பழைய ஆட்சி அல்ல! ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய ஆட்சி என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்!
இன்றைக்குக் காலையில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
‘‘வடக்கே நம்பிய அளவிற்கு உங்களுக்கு ஆதரவு இல்லை” என்று பிரதமர் மோடிக்குத் தகவல் சென்றிருக்கிறது. ஆகவே, தெற்கேயாவது சில வித்தைகளை செய்யலாமா? என்று நினைத்துத்தான் இப்பொழுது சத்தம் போடுகிறார்கள்.
எவ்வளவுதான் நீங்கள் சத்தம் போட்டாலும், தெற்கே என்பது பெரியார் நாடு – பெரியார் மண் – சமூகநீதி மண் – திராவிட மண்.
இங்கே விபீடணர்கள் வேண்டுமானால் இராமாயணக் கதையில்கூட தோன்றியிருக்கலாம்; அனுமார்கள்கூட கீழேயே உட்கார்ந்திருக்கலாம். அது படத்தோடு சரி. அது இனிமேல் செயலுக்கு வராது. அவர்களை அடையாளம் காண வேண்டிய அளவிற்குத்தான் நிலைமை இருக்கின்றது.
வீர நடைபோட்டு வெற்றிக் கொடி நாட்டுவோம்! ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!!
எனவேதான், அவர்கள் தோற்கவேண்டியவர்கள்; தோற்கவேண்டியவர்கள் தோற்பார்கள். வெற்றி பெறவேண்டியவர்கள், அமைதியாக, வீர நடைபோட்டு வெற்றிக் கொடி நாட்டுவோம்! ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்.
அன்னையார் அன்றைக்கு வழிகாட்டினார் –
இன்றைக்கு அவருடைய உணர்வும், துணிவும் நம்மை வழிநடத்துகின்றன. அவருடைய நினைவு நாளில் ஒரு புதிய உறுதிமொழியை ஏற்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
வருக அன்னையார் விரும்பிய புதிய சமூகம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.