திருச்சி,மார்ச் 26- பாஜக கூட்டணியில் உள்ள கட்சிக ளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில், மதிமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று (25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக, விசிகபோன்ற கட்சிகளுக்கு இதுவரைதேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மார்ச் 26ஆம் தேதி (இன்று) வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பி.ஜே.பி. மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்
சென்னை,மார்ச் 26- மக்களவைத் தேர்தல் தேதி கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் நடத்தை விதிகளை பா.ஜ.க. மீறியுள்ளதாக டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘போல்சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜக தேர்தல் போனஸ் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்தால் ரூ.5 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123ஆம் பிரிவின்படி குற்றமாகும். வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, யாருக்கும் பரிசுப் பொருளை அளிக்கவோ அல்லது கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பது லஞ்சம் ஆகும்.
இதனை அனைத்துக் கட்சிகளும், வாக்காளர்களும் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு பாஜக மீது நடவடிக்கை எடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகள் மீறல்
மத்திய சென்னை பி.ஜே.பி..வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
சென்னை,மார்ச் 26- சென்னை புளியந்தோப்பில் தேர்தல் விதிமுறை மீறியதாக பாஜக மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.
இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
இந்நிலையில் புளியந்தோப்பு பட்டாளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தில் அந்த கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு அனுமதி பெறப்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக தொகுதி தேர்தல் ஆணைய அதிகாரி வி.மோகன், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக வினோஜ் பி.செல்வம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தலைவர் லலித் பாந்தா முத்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
வடசென்னையிலும் விதி மீறல் பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு
திருவொற்றியூர், மார்ச் 26-மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் வட சென்னைவேட்பாளராக உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பால் கனகராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில், வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் – நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த 23.3.2024 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உரிய அனுமதி வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டத்தில் 200 ஆண்கள், 50 பெண்கள் என 250 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் பறக்கும்படை அதிகாரி செல்வ வெங்க டேஷ், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக பால்கனகராஜ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.