தேனி, மார்ச் 25- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்த பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. துணையாக இருந்தது என்று தேனி பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனை ஆதரித்து தேனி பங்களாமேடு, பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.3.2024) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது-
கொளுத்தும் வெயிலில் இவ்வளவு எழுச்சி யோடு நீங்கள் எல்லாம் கூடியிருக்கிறீர்கள் என்றால் தங்க,தமிழ்செல்வனை மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கப் போகிறீர்கள் என்பது தெளிவாகிறது.
அவரை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் நான் மாதம் 2 முறை இங்கு வந்து தங்கி, இந்தத் தொகுதிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.
தமிழ்நாடு உரிமைகள் பறிப்பு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளில் வெற்றி பெற் றோம். தேனி தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை அதற்கு ஈடுகட்டும் வகையில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி தொகுதியில் வெற்றி வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் வாங்கக்கூடாது
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார்? தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார்? பா.ஜனதா ஆட்சி ஏதாவது செய்ததா?அடிமையாக அதிமுகவை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எல்லா உரிமைகளையும் பறித்து விட்டார்கள்.
குலக்கல்வி திட்டம்
2019 இல் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். அந்த ஒரே கல்லையும் நான் தூக்கி வந்துட்டேன். இப்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு ரூபாய்கூட ஒதுக்கீடு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை இந்த கல்லை நான் திருப்பித்தர மாட்டேன்.
இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமே. ‘‘மாநில உரி மைகளை மீட்க தலைவரின் குரல்” என்பதுதான். நம்முடைய மொழி உரிமையை பறித்து விட்டார்கள். குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அப்பா, அம்மா செருப்பு தைத் தால், பையனும் செருப்பு தைக்க வேண்டும் என்பதுதான் குலக்கல்வி திட்டம் அதைத்தான் எதிர்த்து இருக்கிறோம்.
இதேபோல், புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்த திட்டம் வந்தால் 8 ஆம் வகுப்பு குழந்தைக்கு பொதுத் தேர்வு. 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு பொதுத்தேர்வு, யோசித்துப் பாருங்கள். 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு பொதுத் தேர்வு தேவையா? நம்ம வீட்டு பசங்க படிக்கக்கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் தான் கொண்டு வருகிறார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதா இருந்தவரை ‘நீட்’ தேர்வை தமிழ்நாட்டில் நுழையவிடவில்லை அடிமை அ.தி.மு.க. கூட்டம் பாரதீய ஜனதாவுக்குப் பயந்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தது. இந்தத் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா உள்பட 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
சி.ஏ.ஜி.அறிக்கை
பாரதீய ஜனதா அரசு 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வரவு -செலவு கணக்கு அறிக்கை அளித்தது. அந்த பணம் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இறந்து போன ஆயிரம் பேருக்கு ஒரே கைப்பேசி எண்ணிலிருந்து மருத்துவ காப்பீடு கொடுத்துள்ளனர். இதையெல்லாம் தட்டிக் கேட்கவேண்டும். பெண்கள் படிக்க வேண்டும். கல்லூரிக்குச் செல்ல வேண்டும். வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய தலைவர் பல்வேறு திட்டங் களை தொடங்கி இருக்கிறார். அதற்கு சிறந்த உதாரணம் புதுமைப்பெண் திட்டம். இந்தத் திட்டத்தை தொடங்கிய பிறகு அதிகமான மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள்.
இப்போது தம்முடைய தலைவர் தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு சமையல் எரிவாயு உருளையின் விலைரூ.480 ஆக இருந்தது. இன்றைக்கு ரூ.1100-க்கு மேல் சென்று விட்டது. தேர்தல் வந்ததால் சமையல் எரிவாயு உருளையின் விலையில் ரூ.100 குறைத்து மோடி நாடகம் ஆடுகிறார். நம்முடைய தலைவர் தேர்தல் வாக்குறுதியில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ரூ500-க்கு சமையல் எரிவாயு உருளை கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல் பெட்ரோல் ஒரு விட்டர்
ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் கொடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.
வருகிற ஜூன் 3ஆம் தேதியன்று கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, கலைஞரின் பிறந்த நாளுக்கு நாம் உவகையுடன் கொடுக்கப்போகும் பிறந்தநாள் பரிசு என்ன? 40-க்கு 40 வெற்றி பெற்று அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
-இவ்வாறு அவர் பேசினார்.
புத்தகத்துடன் சிறுமி பங்களாமேடு பிரச்சாரத்தின் போது ஒரு சிறுமி உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுப்பதற்காக ஒரு புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து புத்தகத்தை அவர் பெற்றுக் கொண்டார்.