புதுடில்லி, மார்ச் 14- கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடந்த மாதம் 15ஆம் தேதி வரை 22, 217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
தேர்தல் பத்திரங்களை அளித்தது
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்டதேர்தல் பத்திரங் கள் செல்லாது என்று கடந்த மாதம் 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற அரசி யல் கட்சிகள் உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தர விட்டது.
ஆனால், இந்தகால அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி கடந்த 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் பத்திர விவரங்களை 12ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தர விட்டது. அதன்படி நேற்று முன்தினம்
(12-3-2024) தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி அளித்தது.
பிரமாணப் பத்திரம்
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிந்ததை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கி நேற்று (13.3.2024) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா பெயரில் அப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீதிமன்ற உத்தரவுப்படி, 12ஆம் தேதி வங்கி அலுவல் நேரம் முடிவதற்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத் திடம் சமர்ப்பித்துள்ளோம்.
ஒவ்வொரு தேர்தல் பத்திரமும் வாங்கப் பட்ட தேதி. வாங்கியவர்களின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்பு. அந்த பத்திரங்கள் பணமாக்கப் பட்ட தேதி. நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங் களின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பணமாக்கப்பட்ட பத்திரங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப் ல் 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 15ஆம் தேதிவரை மொத்தம் 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங் கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற் றில் 22 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட் டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.