“நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பூஜை, சடங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, அரசமைப்பு சட்டத்திற்கு தலைவணங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.
கடந்த 3ஆம் தேதி மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் புதிய நீதிமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த நீதிபதி ஓகா இவ்வாறு பேசியுள்ளார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘ஜனநாயகம்’ எனும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது மதச் சடங்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதிமன்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு பூஜைகள், சடங்குகள் செய்வதை விட, அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையின் நகலுக்குப் பணிந்து நிகழ்வுகளைத் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து விரிவாக பேசிய அவர், “சில நேரங்களில் நீதிபதிகள் விரும்பத்தகாத விடயங்களைச் சொல்லுவார்கள். நானும் கொஞ்சம் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீதிமன்றங்களில் நிகழ்ச்சிகளின் போது பூஜை-அர்ச்சனையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு பதிலாக, அரசமைப்பின் முகப்புப் படத்தை வைத்து வணங்க வேண்டும். அரசமைப்பு 75 ஆண்டுகள் நிறைவடைந் துள்ள நிலையில், அதன் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த புதிய நடைமுறையை நாம் தொடங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “டாக்டர் அம்பேத்கர், மதச்சார்பின்மையைக் குறிப்பிடும் ஒரு சிறந்த அரசமைப்பை நமக்கு வழங்கியுள்ளார். நமது நீதிமன்ற அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம், ஆனால் அது நமது அரசமைப்பால் நடத்தப் படுகிறது. நான் கருநாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிமன்ற வளாகங்களில் இதுபோன்ற மதப் பழக்க வழக்கங்களைக் குறைக்க முயன்றேன். ஆனால் அவற்றை முழுமையாகத் தடுக்க முடியவில்லை” என்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.
சமீப நாட்களாக மத செயல்பாடுகள் அரசியல் முழக்கங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்கள் மீது அதிகார அத்துமீறல் செய்யப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நீதிபதி அபய் எஸ் ஓகாவின் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில அகராதியில் ‘செக்குலர்’ என்பதற்கு – அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. “ஒரு சொல் எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியில் கூறப்பட்டுள்ள பொருளைத்தான் ஏற்க வேண்டும்” என்றார் தந்தை பெரியார்.
அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘செக்குலர்’ என்பதற்கு மதத்திற்கும் – அரசுக்கும் தொடர்பில்லாதது என்பதே சரியானதாகும்.
ஆனால் நாட்டில் நடப்பது என்ன? நீதிமன்ற வளாகத்துக் குள்ளேயே வழிபாட்டுச் சின்னங்களும், கோயில்களும் குவிந்து கிடப்பது சட்ட விரோதம் அல்லவா!
மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு – நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்களின் வளாகங்களில் ஹிந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பிற மதத்தினரைப் புண்படுத்துவதாகும் என்பதே அந்த வழக்கின் சாரம்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இபுராகிம் கலிபுல்லா, கே.பி. கே.வாசுகி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது. “அரசு அலுவலகங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அரசு வளாகங்களில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” என்று இரு நீதிபதிகளும் வலியுறுத்தியுள்ளனர். (‘தினத்தந்தி’ 18.3.2010).
இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகாவும் கூறியுள்ளார்.
வேலியே பயிரை மேயலாமா? மாநில, ஒன்றிய அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.