கண்ணம்மா சண்முகம்
சட்டக் கல்லூரி மாணவி – ஈரோடு
உலக மகளிர் நாளை கொண்டாடிக் கொண்டி ருக்கும் வேளையில் நாம் பலவற்றை நினைவுகூர வேண்டிய தேவை எழுந்துள்ளது. முதலில் உலக மகளிர் நாள் எப்படி எழுந்தது என்றால்… அமெரிக்கா சிகாகோ நகரத்தின் காரிக் தியேட்டரில் 1908 இல் மே 3 முதல் முறையாக மகளிர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதுவே நகர அளவில் நடந்த பெண்கள் நாளாகும்.
1909 பிப்ரவரி 28 இல் அமெரிக்காவில் பெண்களின் வாக்குரிமைக்காக பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை சோஷலிஸ்ட் பத்திரிகைகள் மகளிர் தினம் என குறிப்பிட்டன. இதுவே தேசிய அளவில் கொண்டாடப்பட்ட மகளிர் நாள் ஆகும்.
1914 முதல் உலகப்போர் தொடங்கியது. நான்கு ஆண்டு கால போரில் ரஷ்யா ஜெர்மனியிடம் தோற்றது. இதன் விளைவாக வேலை நேர அதிகரிப்பு, ஊதியப் பற்றாக்குறை, அடக்குமுறை, விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
1917 இல் மட்டும் தலைநகர் பெட்ரோகிராடில் 889 அரசியல் கைதி பெண்கள் சிறையில் இருந்தனர். குழந்தைகளுக்கு மற்றவர்களுக்கும் ரொட்டித் துண்டு கூடக் கிடைக்காத நிலையினால், பெண் தொழி லாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். அந்த பெண் தொழிலாளர்கள் தொடங்கிய போராட்டம் தான் 1917 மார்ச் 8 ரஷ்யாவில் பெரும் புரட்சியாக அமைந்தது. இதுவே உலக மகளிர் நாள் என்று கொண்டாடப்பட மூல காரணமாக (Real origin) அமைந்தது.
1907இல் ஜனநாயக ஆட்சி என்று சொல்லிய பெரிய நாடுகளில் கூட அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. குறிப்பாக பிரிட்டனில் சொத்து படைத்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லாமல், ஆண்களுக்கு வாக்குரிமை கோரிக்கை எழுப்பிய நிலையில் ஏன்? ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை, பெண்களுக்கும் ஏன்? வாக்குரிமை அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையின் தொடக்கமே மேற்கூறப்பட்ட 1909 இல் நகர அளவில் மகளிர் நாள் நடத்தப்பட காரணம்.
உரிமை என்ற சொல் நமக்கும் நம் முன் சென்றோர்களுக்கும் எடுத்த உடனே கிடைத்த ஒன்று இல்லை. இந்த உலகில் ஆதிக்கம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டங்களும் அதிகம் நடந்துள்ளது.
“தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை”
என்ற தொல்காப்பியத்தில் கூட மனைவிக்கு எந்த ஒரு உரிமையும் கணவன் தான் கொடுக்க வேண்டும், என்றிருந்த சமூக நிலையைக் கூறுகிறது.
“தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே”
என்ற வரியில் கூட பெண் எவ்வளவு சிறப்புகளை உடையவளாக இருந்தாலும் ஆணின் முன் அடங் கியே நடக்க வேண்டும் என்று தொல்காப்பியத்தில் சில வரிகள் உள்ளது. கணவன், மனைவியை விட்டு மற்றவரிடம் சென்றாலும், மனைவி கற்பு நெறியோடு இருக்க வேண்டும், அவனை கடவுளை போல வணங்க வேண்டும் என்ற நிலையே சிலப்பதிகாரத்தில் உள்ளது.
மேற்கூறப்பட்ட இவ்வரிகள் ஆனது மனுநீதியில் சொல்லப்பட்ட
குழந்தைப் பருவம் – வாலிப பருவம் உள்ளிட்ட எந்தப் பருவத்திலும் பெண்கள் தன் விருப்பத்துக்கு ஒரு செயலையும் செய்யக்கூடாது. (5:147)
குழந்தையில் தந்தை – பருவத்தில் கணவன் – கணவன் இறந்த பின்பு மகன்கள் இவர்களை அன்றி பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு இருக்கக் கூடாது. (5:148)
இழி நடத்தை கொண்டவனாக இருந்தாலும் மற்ற பெண்களோடு உறவு வைத்திருப்பவனாக இருந் தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் கற்புடைய பெண் அவனைத் தெய்வத்தை போல பூசிக்க வேண்டும்.(5:154)
ஆக பெண்ணானவள் எல்லாவற்றிலும் அவளின் வாழ்க்கை சூழலானது ஒரு ஆணை சார்ந்ததாகவும் மய்யப்படுத்தியதாகவும் இருக்க வேண்டுமே ஒழிய தனித்துவமாகவும், சமத்துவமாகவும் சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் இருத்தல் கூடாது என்று மேற்கூறப்பட்டவைகள் தெளிவுரை விளக்குகிறது.
இந்த நிலையானது இன்று வரை சமூகத்தில் இருந்து தான் வந்துள்ளது இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் மனுநீதியானது “modern மனு நீதியாகவே” கடைப்பிடிக்கப்படுகிறது.
முழுக்க முழுக்க பெண்ணானவள் ஆணுக்கு பணிவிடை செய்ய மட்டுமே வாழ்நாள் வேலையாக இருக்க வேண்டும் என மனுநீதி கூறுகிறது. அவளின் சிந்தனை ஆணை தாண்டி, பணிவிடையை தாண்டி, தன் இல்லறத்தை தாண்டி செல்வதை மனுநீதி அனுமதிக்கவில்லை என்றாலும் இந்த ஆணாதிக்க சமூகமும் அனுமதிக்கவில்லை.
பெண்ணானவள் இந்தியாவின் சட்டமாக உள்ள மனுநீதிச் சட்டத்திலும் சரி நடைமுறையிலும் சரி சக மனிதனாக இல்லாமல் ஒரு சதையாக பார்க்கும் சமூகம் நம் இந்திய சமூகம்.
இன்றைய காலகட்டங்களில் பெண்கள் மீதும் பெண்களின் உடல் மீதும் நடக்கும் பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
சுற்றுலாப் பயணியாக ஸ்பெயினை சேர்ந்த தம்பதியினர் 66 நாடுகளின் ஊடாக 1,70,000 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய வந்த ஸ்பானிய பெண்ணை ஜார்க் கண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததானது, பெண்கள் நாளை கொண்டாடத் தயாராகும் வேளையிலே, பெண்களுக்கு அவர்களின் கண்ணியம், சுதந்திரம், சமத்துவம், போன்றவற்றின் வழியே பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது. முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று கூறும் (ஹிந்துத்துவம்) ஆப்கான் போன்ற நாடுகளில் கூட அப்பெண் கண்ணியத்துடனும், சமத்துவத்துடனும், சுதந்திரமாகவும் கடந்து அந்த பெண்ணிற்கு இந்தியா தீவிரவாதத்தை விட மிகவும் கொடூரமான ஒன்று என்பதை காட்டியுள்ளது.
சில நாட்களுக்குமுன் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சாக்கடையில் எறியப்பட்டதானது, இது தான் இந்திய பெண்களுக்கும், பெண் பாலினத்தவருக்குமான நிலையாக உள்ளது.
இந்திய நாட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வுக்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது என்றால், இந்தியாவை ஆட்சி செய்யும் இறையாண்மை கொண்ட சட்டம் அரசமைப்பு சட்டமா? இல்லை மனுநீதிச் சட்டமா? என்ற அய்யம் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே தான் உள்ளது.
இப்படியான பாலியல் வன்கொடுமைகளும் இன்னும் பல அத்துமீறல்களும் எழும்பொழுது நமது நாட்டில் மனுநீதிச் சட்டம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
ஏன் இந்தியாவில் சக மனிதனின் உரிமைகள் சாதாரணமாக மீறப்படுகிறது இதற்கு என்ன காரணம்? மனுநீதி, வர்ணாசிரமத்தின் பரிமாணமான ஸநாதனம் தான் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது. இப்படியான இழிவான நிலையானது சமூகத்தை விட்டு முழுவதும் வேரோடு பிடுங்கி எறிய ஒரே வழி – தந்தை பெரியார் நமக்கு கற்பித்த கல்வி என்ற வழியில் – நாம் இப்படியான வேர்களை பிடுங்க வேண்டிய தேவையானது, ஒரு அத்தியாவசியமான தேவையாக இன்றைய சூழ்நிலையில் உள்ளது.
இன்னும் நம் பயணிக்க போகும் காலங்களிலும் இதைவிட கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். ஆக இப்படியான நேரங்களில் நமக்கு வழிகாட்டியாக இருப்பது தந்தை பெரியாரும், அவரின் சிந்தனையும் தான், அவரின் வழியில் செல்வோம். பெண்கள் நாளை ‘சமூக சிக்கல்களை களையும் நாளாக’ கொண்டாடுவோம்.