- அன்னையே நீவிர் மறையவில்லை – வாழுகிறீர்கள்! வாழுகிறீர்கள்!!
- எங்கள் இரத்தத்தில் உறைந்தும், நிறைந்தும் வாழுகிறீர்கள்!
இன்று (10-3-2024) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களது 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
எளிமை, ஒப்பற்ற தன்னல மறுப்பு, எவராலும் எட்டவே முடியாத சகிப்புத் தன்மையின் உயரம், எல்லையற்ற அடக்கம், தொல்லை தராத துயர் துடைக்கும் தொண்டறப் பணி – இவற்றை ஓர் உருவ மாக்கினால், அந்தப் பெருஉருவம் தான் எமது அன்னையார் அவர்கள்.
தனக்கென வாழா பெரியார்க்குரியார் அவர்!
பெரியார்க்குரியார் என்றால், மக்களுக்கு நெறியாளர் என்பதே முழுப் பொருள்!
களங்கள்தாம் எத்தனை! எத்தனை!!
வாழ்ந்த வயதோ ஓர் அரை நூற்றாண்டுதான். ஆனால், அவரது தொண்டும், உழைப்பும், போராட்ட வரலாறும் பல நூற்றாண்டு மடமையை, மானமின் மையை, அறியாமையை, அடிமைத்தனத்தை எதிர்த்து முறியடிக்க, இறுதி மூச்சடங்கும்வரை களங்கண்டே வாழ்ந்த எங்கள் களங்கமிலா கள மாடியும், அந்தக் களத்தில் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனைகளை செய்தும் ,அடக்கமென்ற ஆடையை எப்போதும் அணிகலனாய் அணிந்த அரிய தலைவர் அவர்!
95 ஆண்டுகாலம் தந்தை பெரியாரை வாழ வைத்தவர்!
பாசத்தோடும், பரிவோடும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் வாரி எடுத்துப் பெறாத பெற்ற தாயாக வளர்த்து, அவர்தம் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத் திடவும், உலகப் பெரியாரின் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு பாதுகாத்து, அவர் 95 ஆண்டு கால தொண் டறத்தை மக்களுக்குச் செய்திட முக்கிய கரணியாக விருந்த ஒப்பற்ற தொண்டறத் தாய்!
தூற்றியவர்கள்கூட பிறகு போற்றிப் பெருமைப் படுத்திய எடுத்துக்காட்டான பொதுத் தொண்டின் புதுப் பாடம் அவர்!
தனது உடைமைகளையெல்லாம் மக்களுக்கே தந்து, கல்வித் தாயாகவும், கருணைத் தாயாகவும், வீரத்தாயாகவும், விவேகத் தலைவியாகவும் எமக்குப் போராட்டப் பாசறை பயிற்சி தந்த முன்னோடியாக புறநானூற்றுத் தாயையும், வீரத்தில் விஞ்சியவர் எம் அம்மா!
உங்கள் பெயர், எங்களது ஊக்க மருந்து!
உங்கள் தொண்டு, எங்களது கலங்கரை வெளிச்சம்!
உங்கள் சகிப்புத்தன்மை – எங்களது பொது வாழ்வில் பாடம்!
உங்களது கொடை உள்ளம் – எங்களுக்கு நிரந்தர வழிகாட்டி!
உங்களது வீரம் – எங்கள் போராட்ட குணத்தின் சாதனை!
எனவே, அன்னையே நீவிர் மறையவில்லை – வாழுகிறீர்கள்! வாழுகிறீர்கள்!!
எங்கள் இரத்தத்தில் உறைந்தும், நிறைந்தும் வாழுகிறீர்கள்!
பழிகளை எல்லாம் சுமந்து தொண்டாற்றிய அன்னை!
அடக்கத்தோடு ஆர்ப்பரிக்காத அமைதி வழித் தொண்டை எங்களுக்கு முதல் பாட மாக்கிய எங்கள் அன்னையின் அருட்கொடை யான இந்த இயக்கம், அய்யாவுக்குப் பின், செழித்தோங்க, உங்கள்மீது உலகம் வீசிய பழியும், வசையும் சிறந்த உரங்களாகி எம்மை என்றும் வழிநடத்திச் செல்வது உறுதி அம்மா!
உங்கள் ஆணையைப் புதுப்பித்துக் கொள்கிறோம்!
உங்கள் ஆணைப்படி எவ்வித சபலத் திற்கும் ஆளாகாமல், பெரியார் பணிக்காக எங்கள் சூளுரையை இந்நாளில் புதுப்பித்து வாழ்த்துகிறோம்!
வாழ்க! வாழ்க எம் அன்னை – தந்தை!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
10.3.2024