திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் விழா நடத்துவதற்கு நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலர் இந்த விழா நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று மாவட்ட நீதிபதியிடம் முறையிட்டிருந்தனர். அதன் பேரில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, திடீரென அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட நீதிபதியின் உத்தரவினை வழங்கினர். அந்த உத்தரவில் அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகளை நீதிமன்ற வளாகத்தில் நடத்தக் கூடாது என உத்தர விடப்பட்டிருந்தது.
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அப்படி என்றால், நீதிமன்றத்தில் ஆன்மிகம் சார்ந்த எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்குரைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் பார் கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழக்குரைஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சசிக்குமார், துணைத் தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், கங்கை செல்வன், வீரபாண்டியன், காரல் விக்டர் வீராசாமி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவினை நீதிமன்றத்திற்கு வெளியே திருமண மண்டபத்தில் நடத்துவது என்றும், பார்கவுன்சில் நிர்வாகிகளிடம் முறை யிடாமல் நேரிடையாக மாவட்ட நீதிபதியிடம் சென்று தடைவாங்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் – தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் ஓர் அரசியல் தலைவரல்ல; அறிஞர் அண்ணா மேனாள் முதலமைச்சர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்தத் தலைவர்கள் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது எப்படி சட்ட விரோதமாகும்?
தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் துள்ளதே!
முதலமைச்சர் உள்பட, அரசு செயலாளர்களும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் உறுதி மொழி எடுத்து வருகின்றனரே -அது குற்றம் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றம் கருதுகிறதா?
அப்படியானால் மாவட்ட நீதிமன்றத்தில் அந்த உறுதிமொழி எடுக்கப்படவில்லையென்றால், அதுபற்றி விளக்கம் கேட்க வேண்டியது அரசுக்கு அவசியமாகி விட்டது.
அரசு அலுவலக வளாகத்தில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களோ நிகழ்ச்சிகளோ இருக்கக் கூடாது என்று அரசின் ஆணை உள்ளது. இதனை அய்யா, அண்ணா விழாவை ஏற்பாடு செய்தவர்கள் கேட்டுள்ளனர்.
சட்டப்படி, நீதிப்படி அரசின் ஆணைகளை உள் வாங்கி நடக்க வேண்டிய ஓரிடத்தில் இப்படி ஓர் அவலம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
நடப்பது ‘திராவிட மாடல்’ அரசு – இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மனுவை ஏற்று, நாம் போற்றும் மக்கள் தலைவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடக் கூடாது என்று மறுப்பது எந்த வகையிலும் நியாயமாகப்படவில்லை. பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிகழ்ச்சியை இவ்வாண்டு தடுத்தது ஏன்? நீதிமன்றம் பிரச்சினைக்குரியதாக ஆகலாமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.