அய்யா வைகுண்டரும் ஆளுநர் புரட்டும்!

viduthalai
4 Min Read

செத்த மாட்டுக் கொழுப்பையும், இறந்தவர்களின் ஆடையை ஏலம் எடுத்தும் பயன்படுத்தக் கூறியது ஆரிய இந்துத்துவம்!
அதனை எதிர்த்து அனைவருக்கும் எண்ணெய் கொடுத்து தோளில் துண்டும், தலைப்பாகையும் கட்டி நிமிர்ந்து செல் என்றவர் அய்யா வைகுண்டர்!
ஸநாதன தர்மத்துக்கு எதிராக சமர் நடத்தியவர். அவரை ஸநாதன தர்மத்தைப் பாதுகாத்தவர் எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்

அய்யா வைகுண்டரின் 192-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்த செய்தி: “விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர்! ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும், ஸநாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது “அகிலத்திரட்டு அம்மானை” புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும்!” இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.

மேலும் “அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் ஸநாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; ஸநாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” எனவும், ஆளுநர் ரவி பேசியிருந்தார். இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஏற்கனவே “ஸநாதன தர்மத்தைப் பாதுகாத்தவர் அய்யா வைகுண்டர்” எனப் பேசியது பெரும் சர்ச்சையானது. தேர்தல் காலத்தில், அதுவும் மக்களவைத் தேர்தல் காலத்தில் அய்யா வைகுண்டரைப் புகழ்வது போல பேசுவதாக நினைத்துக் கொண்டு இப்படியான முரண்பட்ட பேச்சுகள் முன்வைக்கப்படுகின்றன.அய்யா வைகுண்டர் ஸநாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர். அய்யாவை வணங்கும் இடங்கள் ஸநாதனம் சொல்கிற கோவில்கள் எனவும் அழைக்கப்படுவது இல்லை. அய்யாவை வணங்கும் இடங்கள் பதிகள்தான்! இந்த ‘பதி’களில் ஒரு கண்ணாடிதான் இருக்கும். அதாவது “நீ வணங்கும் இறைவன் என்பவன் உனக்குள்தான் இருக்கிறான்” என்பது அவரின் சித்தாந்தம்! அதனால்தான் அய்யாவின் பதிகளில் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ஸநாதனத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு நிராகரித்தவரே அய்யா வைகுண்டர்!

வைகுண்டர் காலம் ஸநாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட காலம் என்கிறாரே ஆளுநர் ஆர்.என்.ரவி.. உண்மைதானா? உண்மையில் ஸநாதனத்தைத் தூக்கிப் பிடிக்க ஸநாதனத்தின் பெயரால் மண்ணின் பூர்வ குடிகள் மீது மனிதகுல விரோதமான அடக்குமுறைகள் ஏவப்பட்ட காலம் அது!

“பெண்கள் மார்பு சேலை அணிய தடை, பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கவும் தடை, பெண்கள் நகைகள் அணியவும் தடை, ஆண்கள் தலைப்பாகைக் கட்டத் தடை, ஆண்கள் மீசை வளர்க்கத் தடை, ஆண்கள் வளைந்த கைப்பிடி குடை பயன்படுத்தத் தடை, தாழ்த்தப்பட்ட மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்கத்தடை, வீடுகளில் கதவுகள் வைக்கத்தடை (முள்மரம் கொண்ட தட்டிகளை மட்டுமே வைக்கவேண்டும்), எண்ணெய் வாங்கத்தடை (இறந்த மாடுகளின் கொழுப்பை மட்டுமே விளக்கு ஏற்றவும், இதர உபயோகத்திற்கும் பயன்படுத்தினார்கள், இறந்த மனிதர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளை “வண்ணான்”கள் கழற்றி ஏலம் விடும் போது அதை வாங்கி மட்டுமே பயன்படுத்தவேண்டும், பொதுக்கிணறு, குளம் குட்டைகளில் நீர் எடுக்கக் கூடாது”

இப்படித்தான் ஸநாதன தர்மத்தின் பேரால் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்- வன்கொடுமைகள் அய்யா வைகுண்டர் காலத்தில் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் ஆளுநர் ரவி சொல்வது போலவே ஸநாதன தர்மத்தின் பேராலான இக்கொடுமைகளை அய்யா வைகுண்டர் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்பதற்கு வரலாற்றில் ஏராள சான்றுகள் உண்டு. ஸநாதன தர்மத்தின் பெயரால் மேலே இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க “அய்யாவழி” என ஸநாதனத்துக்கு எதிரான சமயத்தையே உருவாக்கியவர் அய்யா வைகுண்டர். அவரை இப்போது இந்துத்துவ அமைப்பினர் காவி வண்ணம் பூசிப் பார்க்கிறார்கள் (புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஆக்கவில்லையா?).

இடுப்பில் துண்டும், தலையில், தலைப்பாகையும் கட்டக் கூடாது என்றது ஸநாதனம். ஆனால் அய்யா வைகுண்டரோ துண்டை தலைப்பாகையாகக் கட்டு என கட்டளையிட்ட போராளி! அய்யா வழியில் இன்றும் தலைப்பாகை அணிவது இதற்குத்தான். ஒவ்வொரு அய்யா வழி பதியிலும் ஜாதி- மதம்- ஆண்- பெண் என ஒரு வேறுபாடும் இல்லை. ஸநாதனம் கற்பித்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் காலந்தோறும் தகர்க்கும் வகையில் வலிமையான அய்யா வழி எனும் சமயத்தைத் தந்தவர் வைகுண்டர். அவர் கூறிய வழிபாட்டு முறை முழுக்க முழுக்க தமிழிலேயே உள்ளது, ஆளுநர் ரவி அய்யா வைகுண்டரின் “அகிலத் திரட்டின்” ஒரு பாடலையாவது படித்திருப்பாரா? ஸநாதனம் வலியுறுத்துகிற அத்தனை வகையான ஆதிக்கத்தையும் அடித்து நொறுக்குகிற ஆகப் பெருங் கலகக் குரல் வைகுண்டரின் “அகிலத் திரட்டு!”

“ஏடு தந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன் பட்டங்களும், பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே..” என வைகுண்டர் வலியுறுத்துவது சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன ஸநாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்ட மாருத முழக்கம்!
இதனைத் தலை கீழாகப் புரட்டும் கூட்டத்தின் வாழையடி வாழையாக வந்தவராக தமிழ்நாட்டின் ஆளுநராக அவதரித் திருக்கிறாரோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *