அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக. வீற்றிருந்த பொற்காலம். அந்த நேரத்தில் பள்ளி மாணவனாக இருந்த நான் இளமைப் பருவத்தில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, நடத்தி வந்தேன். அன்றைய காலத்தில் இளைஞர் அணி என்ற இப்போதைய அமைப்பு உருவாக்கப்படவில்லை.
அறிஞர் அண்ணா அவர்கள் 60 வயதை அடைந்து மணிவிழா கொண்டாடுகின்ற காலம்அது. இளைஞர் தி.மு.க.வின் சார்பில் அண்ணாவைஅழைத்து மணி விழாக் கொண்டாடிட திட்டமிட்டு,
அண்ணா அவர்களை சந்திக்க, நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.
அந்த நேரம் அங்கே குழுமியிருந்த என்.வி.என்., நாடாளுமன்ற உறுப்பினர் க.ராஜாராம் மற்றும் சிலர் என்னிடத்தில் என்ன விவரம் என விசாரித்துவிட்டு அண்ணாவுக்கு உடல்நலமில்லை. சந்திக்க இயலாது எனக்கூறி, என்னைத் திருப்பி அனுப்பிவிட்டனர். சுருங்கிய முகத்தோடு வீடு வந்து சேர்ந்தேன். நான் வந்து சென்ற செய்தி அண்ணா அவர்களுக்குத் தெரிந்தவுடன். என்னை அழைத்து வரச்சொல்லி அவரது காரையே கோபாலபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா என்னை அழைத்தார் என்ற செய்தி கேட்டு அவரது பரந்து விரிந்த விசாலமான இதயத்தில் இந்தச் சிறுவனுக்கும் ஓர் இடம் இருக்கிறதே என எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தேன்.
அந்தக் காரில் நான் அண்ணாவின் வீடு சென்று அவரைச் சந்தித்தபோது. ஏன்?வந்து விட்டு பார்க்காமல் சென்றுவிட்டாய்? எனக்கேட்டார். தாங்கள் உடல் நலமில்லாததால் பார்க்க முடியாது எனச் சொல்லிவிட்டனர் – சென்றுவிட்டேன் என்றேன்.
அவர்கள் சொன்னால் நீ சென்று விடுவதா? எனக்கேட்டு மேலும், வந்த விசயம் என்ன?எனக்கேட்டார். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.சார்பில் தங்களுக்கு மணிவிழாக் கொண்டாட வேண்டும். அதற்குத் தாங்கள் நாள் ஒதுக்கித் தரவேண்டும். அதற்காகத்தான் வந்தேன் என்றேன். சரி. தேதி பின்னர் தருகிறேன். போய்விட்டுப் பிறகு வா என்றார். இல்லை. இல்லை.
இப்போதே தேதி கொடுங்கள். மணிவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். என்றேன். என்ன? உன் அப்பனைப் போலவே பிடிவாதமாக இருக்கிறாய் என அன்போடு கேட்டு விட்டு தேதியும் ஒதுக்கித் தந்தார்.
இந்த விழாவில் பங்கேற்று அண்ணாவுக்கு பொன்னாடை போர்த்த வேண்டுமென சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களையும் அழைத்தேன். ஒப்புதல் அளித்தார். விழா ஏற்பாடுகளை இளைஞர் தி.மு.க. சார்பில் தீவிரமாகவும். ஆர்வமாகவும் செய்து கொண்டிருந்தோம்.
நான் சந்தித்து வந்த சில நாட்களுக்குப் பிறகு அண்ணா நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று விட்டதால் அந்த விழாவை நடத்த இயலாமலே போய்விட்டது. என் ஆசை நிராசையாகிவிட்டது.
அந்த விழா நடத்த இயலாமல் போய்விட்டதே என்ற ஏக்கமும் வருத்தமும் இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை – எனினும் ஓராண்டு முழுவதும் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிட நெல்லையில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில், ஆலோசனையை முன்மொழிகின்ற வாய்ப்பைப் பெற்றேன் என்பதை எண்ணிப் பூரிப்பும். பெருமையும் அடைகின்றேன்.
(அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு மலர்)