புதுடில்லி, அக். 3- உலகக் கோப்பையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக் கென்று தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மாட்டிறைச்சி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அய்சிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறை யாக வாகையர் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டி கள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின் றன. இதற்கு முன்னதாக நடை பெறும் பயிற்சி ஆட்டங்களும் நேற்று (2.10.2023) முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து அணிகளும் இந்தியா வந்திறங்கி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல, பாகிஸ் தான் அணியும் புதன்கிழமை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இந்தியா வந்து சேர்ந்தது. உலகக் கோப்பை போட்டிகள் நிச்சயம் வேறொரு நாட்டில் நடக்கும் என்பதால், அணிகளுக்கு ஏற்ற உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு போட்டி யைத் தலைமையேற்று நடத்தும் நாட்டிடம் உள்ளது. அதேசமயம், சில வீரர்கள் தங்களுக்கு உகந்த உணவுகளை உண்பதற்குத் தனி யாக சமையல்காரர்களை அழைத்து வருவதும் உண்டு. ஏனென்றால், விளையாட்டு வீரர்களுக்கு உணவு என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. இதற்கென மெனக்கெட்டு உணவு வகைகளைத் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெறுவதுண்டு.
இந்த நிலையில் தான் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணியினருக்கும் மாட்டிறைச்சி (பீஃப்) சமைத்து பரிமாறப்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த தொடர் முழுதும் சிக்கனும், மட்டனும், மீனும் தான் வழங்கப்பட உள்ளது. இந்த விதி முறை பாகிஸ்தான் அணியினருக் கும் உண்டு எனவும் தெரிகிறது. கூடுதலாக, பட்டர் சிக்கனும், சிக்கன் பிரியாணியும் தொடர் முடியும் வரை கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயம் மாட்டிறைச்சி எந்த அணியினருக்கும் இருக்காது எனத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகையில், “இந்தியா நடத்தும் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் மாட்டிறைச்சி கிடைக்காத நிலை யில், பாகிஸ்தான் அணியின் உணவு அட்டவணை அவர்களின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மெனுக்கள் தயாராகியுள்ளது. அதில், மட்டன் சாப்ஸ், சுவையான மட்டன் இறைச்சி, பட்டர் சிக்கன் மற்றும் தேவையான புரத ஊக் கத்தை வழங்க வறுத்த மீன் என சுவையான உணவுகள் உள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.