வீடுகள், பொருள்கள், வாகனங்கள் முதலியவற்றில் அடிக்கப்படும் வண்ணப் பூச்சுகள் சில வகையான ஒளிகளை மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றை பிரதிபலித்து விடுகின்றன. இதனால் இவை விரைவில் நிறம் மங்கி விடுகின்றன.
நீண்ட காலத்திற்குத் தன்மை மாறாத வண்ணப் பூச்சுகளை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ஜப்பானைச் சேர்ந்த கோப் பல்கலை விஞ்ஞானிகள் ஒரு புது வகையான நானோ வண்ணப்பூச்சை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதைப் பிற வண்ண பூச்சுகளைப் போல அடர்த்தி யாக பூச வேண்டியது இல்லை. வெறும் 100 – 200 நானோ மீட்டர் அடர்த்திக்கு பூசினால் போதும், நீண்ட காலம் உழைக்கும். அடர்த்தி குறைவதனால் ௧ சதுர மீட்டருக்கு வெறும் அரை கிராம் எடையுள்ள பூச்சே போதுமானதாக இருக்கும். இதனால் இது பல்வேறு துறைகளில் பயன்படும்.
விமானங்களில் சராசரியாகப் பல்வேறு பாகங் களுக்குப் பூசப்படுகின்ற வண்ணப் பூச்சுகளின் மொத்த எடை 272 – 544 கிலோ கிராம். வழக்கமான வண்ணப் பூச்சுகளுக்கு பதிலாக நானோ பூச்சுகளைப் பயன்படுத்தினால் விமானத்தின் எடையை 10 சதவீதம் வரை குறைக்க முடியும். இதன் வாயிலாக விமானத்தின் எரிபொருள் தேவையும் குறையும்.
சாதாரண வண்ணப் பூச்சு சீக்கிரமாக அழிந்துவிடும், அதனால் மீண்டும் மீண்டும் பூச வேண்டிய தேவை ஏற்படும், இதற்கும் அதிக செலவு ஆகும். ஆனால், நானோ பூச்சுகள் அவ்வளவு சீக்கிரமாக அழியாது என்பதால் வண்ணப் பூச்சுக்கு ஆகும் செலவும் குறைகிறது.