ஈரோடு, பிப்.19- தமிழ்நாடு அரசையும், அமைச்சர் களையும் ஒன்றிய அரசு நாள்தோறும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
2019இல் மக்களவைத் தேர்தல்நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அடிக்கல் நாட்டிய அளவிலேயே அந்ததிட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர நிதி கேட்டால், கடன் கேட்டுள்ளோம் என்கின்றனர்.
பா.ஜ.க. ஆட்சியில் 5 மாநில விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்டு போராடி வருகின்றனர். இதற்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை.
மாநில முதலமைச்சர்களே, டில்லிக்குச் சென்று போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், தமிழ்நாடு அரசையும், அமைச்சர்களையும் ஒன்றிய அரசு நாள்தோறும் அச்சுறுத்துகிறது.
ஆளுநர் என்பது மரியாதைக்குரிய பதவி. ஆனால், ஆளுநர்களை வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் செய்துகொண்டிருக்கும் நிலை மாற வேண்டுமெனில், மத்தியில் ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். தென் மாநிலங்களில் பா.ஜ.க. 10 இடங்களில்தான் வெற்றி பெறும்.
மற்ற இடங்களில் மாநிலக் கட்சிகள்தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.