சென்னை, பிப்.18 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 4ஆ-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட் டத்தில் ஈடுபட்டவர் களை 23-ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 12-ஆம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற் றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
மாணவர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஆகிய துறைகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தனியாக மாற்றுத் திறனாளிகள் துறை மட்டும் முடிவெடுக்க முடியாது. எனவே வரும் 23-ஆம் தேதி இந்த துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
உடனே முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று வேலை உடனே பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டுமென கேட்டுள்ளனர். அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.