– தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப் போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர்களுமாய் இருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என்பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமூகம் என்பதையும் பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளுகிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச் சமூகம்,தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.
மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு
பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப் பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவது மாகும்.
ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கை களாகும். இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும். ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.
அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப்பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியாதென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான ‘பூச்சாண்டி’ பிடித்துக் கொள்வான் என்றும், ‘பேய்’, ‘பூதம்’ பிடித்துக் கொள்ளும் என்றும், ‘துண்டித்தக்காரன்’ பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய் சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப் பட்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.
அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன்றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை களாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும். அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறிவுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார். பகவான் சொன்னார், முனிவர் சொன்னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப்பிடியாய் பிடித்து சிறிது கூட காலத் திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக் குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று.
அன்றியும் திருந்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று. ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச்சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக் கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச் சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சவுகரியமுடையது என்று சொல்லப் படுவதாயின் அது எந்த மதமாயினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறி வுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு
அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண் டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும், இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களையெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறை வேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத் திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.
சமயக் கொள்கைகள்
காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுய அறிவற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளைக் கவனிக்காமல் கீழ் நிலையிலேயே இருந்துகொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாகஇருப்பதைக் காண்கின்றோம். ஆனால், ஆண்களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன் இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாத படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஆகவே, மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதேயொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கொள்கை களை அடியோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புறுத்தாததேயாகும்.
எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான் பிரதான மான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக்கொள்கைகளைப் பார்க்க முடியாமால் போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னா லும் லட்சியம் செய்யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என் பவைகள் எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுவிட்டதாலும் வெறும் வேஷத்தை போடு கின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலைவிதி, கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப் பிறக்க லாம் என்பவைகளையும், சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப்பட்ட நல்ல கொள்கை யுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும், பிரத்தியட்ச அனுபவத்தையும் பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர் களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும் பாட்டிக்கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.
கற்பனைக் கதைகள்
உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி அறிவு சவுகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் வரட்டுமென்று கருதி அந்த ஊருக்குப் போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும் என்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம் கிடைக்குமென்று எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார், ஆகாயக் கப்பல் ஆகியவைகள் ஏற் படுத்தப்பட்டு மலிந்த பிறகு கூட நடந்து யாத்திரை போக வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இது போலவேதான் அநேக விஷயங்களை சமயத்தின் பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாக அழிக்க வேண்டும், அதோடு போலிக்கற்பனை நிபந் தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம், புண்ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தனஙகளும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக் கின்றதென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும் படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடியாக சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒன்றுபடாததாக இருந்து வரு கின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்ற மடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
(சென்னை – பச்சையப்பன் கலாசாலையில் சமூக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 25.01.1931