ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் முனுசாமி நாயுடுவிற்குப் பின் சென்னை மாகாண முதன்மை அமைச்சராக (First Minister) 5.11.1932 முதல் 4.4.41936 வரையிலும் பின்னர் 24.8.1936 முதல் 1.4.1937 வரையிலும் முதலமைச்சராக இருந்தவர். தந்தை பெரியாரிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தவர்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (S.I.L.F.)யும், அச்சங்கம் வெளியிட்ட ஏடுகளையும், கட்டித் காத்திட தந்தை பெரியாருடன் இணைந்து அரும்பாடுபட்டவர். இவரும் தந்தை பெரியாரும் இணைந்து சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் இந்திய அரசுத் துறைகளின் எல்லா அலுவலகங்களிலும் சென்னை மாகாண அரசு அளிப்பதுபோல், வேலைகளில் வகுப்புவாரியாக இடஒதுக்கீடு தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்து சர்.ஏ.இராமசாமி முதலியாரை தூது அனுப்பி 1935இல் இந்திய அரசினர், “பார்ப்பனர், ஆதிதிராவிடர் மற்றும் பார்ப்பனரல்லாதாருக்கான தனித்தனி இடஒதுக்கீடு ஆணை” ஒன்றைப் பிறப்பிக்கச் செய்தவர்.
1933இல் வேளாண்மை சாகுபடி குத்தகைக்காரர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார். ஆதிதிராவிடர்கள் குழுவில் நியமிக்கப்பட ஆவன செய்தவர். கட்சி நலன் கருதி பெரும் பொருள் செலவு செய்து பணியாற்றியவர். தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்றவர். 1967இல், “நீதிகட்சிப் பொன்விழா மலரை” ஜஸ்டிஸ் கே.பரமசிவம் வெளியிட்டதை முன்னிட்டு நடந்த விழாவில் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவுடன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். நீதிக்கட்சியின் சிறந்த புரவலராக விளங்கியவர். பொப்பிலி அரசர் முதன்மை அமைச்சராக விளங்கியபோது அவருடைய உதவியாளராக பேரறிஞர் அண்ணா அவர்கள் பணியாற்றினார்.
பொப்பிலி அரசர் அரசியல் நிர்ணய சபையிலும் இடம் பெற்றிருந்தவர். 1967ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆந்திர பல்கலைக்கழகத்திற்கு இணை வேந்தாக இருந்தவர். சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார்.
பொப்பிலி அரசர் பற்றி தந்தை பெரியார்
பொப்பிலி ராஜா அவர்கள் ஒரு சர்வாதிகாரியாக இருந்தவர். ஸ்டாலினைப் போலவும், கமால் பாட்ஷாவைப் போலவும் அனேக முற்போக்கான – அவசியமான காரியங்களை செய்ய வேண்டும் என்று ஆசையாயிருந்தவர் என்று 1937ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்களால் பாராட்டுப் பெற்றவர்.
– கேஜி