சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கட்சி, கவுரவ காரியதரிசி எழுதுவதாவது:-
சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட கட்சியின் தேர்தல் போர்டு கூட்ட மொன்று நேற்று காலை 9:00 மணிக்கு திவான்பகதூர் ஆர்.சீனிவாசன் எம்.எல்.சி., தலைமையில் ராயப்பேட்டை நெ.41. லாயிட்ஸ் ரோட் கட்டடத்தில் கூடியது.
உப கமிட்டியாரால் தயாரிக்கப்பட்ட கட்சியின் நகல் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது. கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேறின.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதியாக விளங்குகிற சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கட்சியின் அபேட்சகர்களுக்குப் போட்டியாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென ஏற்படுத்தப் பட்டிருக்கும் தனித்தொகுதிகளில் காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்தி வைக்க திரு. சத்திய மூர்த்தி முயற்சிப்பதால் அக்காரியத்தில் தலையிட்டுத் தடுக்க வேண்டி மகாத்மா காந்தியை இக்கட்சி வேண்டிக் கொள்வதாகவும், கட்சித் தலைவர் திரு. ஆர். சீனிவாசன் அவசியமானால் திரு. காந்தியுடன் கலந்து பேசுவாரென்றும், இது விஷயமாக தந்தியொன்று திரு.காந்திக்கு அனுப் பப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
வரப்போகும் தேர்தல்களில் இக்கட்சி சார்பாக நிற்கும் அபேட்சகர்களுக்கு சிகப்பு நிற ஓட்டுப் பெட்டிகள் அளிக்கப்பட வேண்டுமென்றும், அது சாத்தியப்படாவிட்டால் பச்சை நிற ஓட்டுப் பெட்டிகளாவது அளிக்கப்பட வேண்டு மென்றும் சர்க்காரை வேண்டிக் கொள்கிறது.
தனித் தொகுதிகளுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கியெடுக்க தேர்தல் போர்டின் அடுத்த கூட்டம் நவம்பர் 22ஆம் தேதி மாலை 3:00 மணிக்குக் கூடும்.
வந்தனோபசாரத்துடன் கூட்டம் கலைவுற்றது.
– ‘விடுதலை’ – 18.11.1936
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கட்சி தேர்தல் போர்டு கூட்டம்
Leave a Comment