பிரதமர் மோடியின் “பரிக்சா பே சர்ச்சா” (தேர்வை எதிர் கொள்வது தொடர்பாக விவாதிப்போம்) என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு கோமாளித்தன நடவடிக்கையின் உச்சக்கட்டமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நள்ளிரவில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அழைத்துவந்து கணபதி ஹோமமும் சரஸ்வதி துதியாகமும் நடத்தி உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுமண்ணூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 13ஆம் தேதி இரவு பள்ளி மேலாளரின் மகன் ருதீஷின் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் பள்ளி இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துவந்து ஆசிரியர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் கணபதி ஹோமம் மற்றும் சரஸ்வதிதுதியாகம் மற்றும் பூஜைகள் நடத்தியுள் ளனர். இதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும், பொதுமக்களும் பள்ளிக்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் பள்ளியில் நடந்த நிகழ்வு குறித்து திருவனந்த புரத்தில் கேரள பொது கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி கூறியதாவது:-
பள்ளியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பூஜை குறித்து விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க பொது கல்வித்துறை இயக்கு நருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மோடி ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்காக “பர்க் சா பே சர்ச்சா” என்ற நிகழ்வை நடத்துகிறார். அதாவது தேர்வெழுதும் மாணவர்களோடு விவாதம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் போது தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் ஆன்மிக உணர்வுகள் குறித்தும் பேசுவார்.
அவர் இப்படி பேசியதை பாஜகவினர் என்ன பொருளில் எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை. நள்ளிரவில் பூஜைகள், தேர்விற்குச் செல்லும் மாணவர்களை மந்திரம் ஓதச் சொல்லுதல், தேங்காய் உடைத்தல் மற்றும் மந்திரங்கள் எழுதுதல் போன்ற வற்றை செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் சாமியார்களை பல்வேறு பள்ளிகள் ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து காலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசீர்வாதம் செய்ய வைக்கும் கூத்தும் நடக்கிறது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு – ஓர் ஆட்சியாக நடைபெறவில்லை.
மாறாக மதம் தொடர்பான ஆன்மிகம் தொடர்பான பூஜை மடமாகத்தான் – நிர்வாணத்தனமாக நடைபெறுகிறது.
மதச்சார்பற்ற தன்மை கொண்டது அரசு என்ற அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக, அந்த அம்சத்தைத் தூக்கிப் போட்டு காலில் மிதித்து, கோமாளித்தனமாக பக்தி வேஷம் கட்டி ஆடுவது – கேலிக்குரியதும் – கவலைக்குரியதுமாகும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வக்கின்றி இதுபோல மக்கள் மத்தியில் மங்கிக் கிடக்கும் பக்தி மூடநம்பிக்கைகளைப் பகடைக் காய்களாக்கி சுரண்டல் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
வறுமைக்கோட்டுக்கும் கீழ் உழலும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தைத் தொட்டு விட்டது. பொருளாதார வீழ்ச்சி படு பள்ளத்தில் குப்புற வீழ்ந்து கிடக்கிறது.
இந்த நிலைகளை மக்களிடமிருந்து மறக்கடிக்க பக்தியைக் கையில் எடுத்துள்ளனர். படிக்கும் பருவத்தில் கல்வியின்மீதான ஆர்வத்தையும், கவனத்தையும் ஊட்டுவதற்குப் பதிலாக, பள்ளிகளில் பூஜைகள் நடத்துவது எலலாம் எத்தகைய பிற்போக்குத்தனம்!
பூஜை செய்தால் தேர்வில் மதிப்பெண்களைப் பெற முடியுமா? கல்விக்காக சரஸ்வதி என்ற கடவுள் உள்ள நாட்டில் கல்வி வளர்ச்சி எந்தக் கால கட்டத்தில் துளிர ஆம்பித்தது? சரஸ்வதி என்ற பெயருடைய பெண்ணேகூட கை நாட்டுப் பேர் வழியாகத்தானே இருந்தார்.
மாணவர்களின் தன்னம்பிக்கையையும் அறிவையும் கூர் தீட்டுவதற்குப் பதிலாக அவர்களை பக்திப் போதையில் மூழ் கடித்து, அவர்களின் எதிர்காலத்தையும் சமுதாயத்தில் முற்போக்குப் பாதையையும், வளர்ச்சியையும் இருட்டறையில் பூட்டி சாகடிக்கும் வேலையை ஓர் அரசு செய்யலாமா?
விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது (51A-h) அதற்கு நேர்மாறாக இளம் பருவத்திலேயே இருபால் மாணவர்களை மவுடீக நெருப்பில் கருக விடலாமா? ஒரு நிமிடம்கூட ஒன்றிய பிஜேபி அரசு ஆட்சியில் தொடர்வது ஆபத்து! ஆபத்து!!
புரட்சி மலரட்டும் – புது உத்வேகம் பிறக்கட்டும்! பிறக்கட்டும்!! இல்லையேல் நாடு தற்கொலையை நோக்கி விரைகிறது என்று பொருள்! வரும் தேர்தலை இந்தக் கண்ணோட்டத்தில் – வெகு மக்கள் கண்ணோட்டம் செலுத்தட்டும்! செலுத்தட்டும்!!