தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற மரபு மீறல்: ஆளுநர்மீது நடவடிக்கை தேவையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
இந்த (தமிழ்நாடு) சட்டமன்றத் தொடரின் தொடக்க நாளன்று (12-2-2024) ஆளுநர் உரையைப் படிக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட அரசமைப்புச் சட்ட நெறி, அவையின் மாண்பு, மரபு மீறிய செயலை நாடே கண்டித்துக் குரல் எழுப்பியது.
அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற மரபு மீறிய ஆளுநரின் செயல் முதலானவை அவைக் குறிப் பிலிருந்தும் நீக்கப்பட்டன.
கத்துக்குட்டி உறுப்பினர்கூட செய்யத் துணியாத கீழ்த்தரமான செயல்!
அதைப்பற்றி ஆளுநர் ரவி, தனது நிலைப்பாடுபற்றி தமிழில் ஒரு காட்சிப் பதிவை தயாரித்து – ஆணவத்தின் அலங்கோலத்தை நியாயப்படுத்தியும் சமூக வலை தளங்களில் பரவவிட்டுள்ளது. அவைக்குத் தொடர் புடைய ஒரு கத்துக்குட்டி உறுப்பினர்கூட செய்யத் துணியாத கீழ்த்தரமான செயல் -ஆளுநர் பதவிவகிக்கும் ஒருவர் செயல்.
இது அவையின் உரிமை மீறல், அவமதிப்புச் செயல் என்பதால், உரிமை மீறல் விதிப்படி அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், பேரவைத் தலைவருக்கு மனு கொடுத்துள்ளது சட்டப்படியும், மரபு அவையின் மாண்புப் படியும் தேவையான ஒன்றாகும்.
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; அவர் வகிக்கும் பொறுப்பு எதுவானாலும், நீதிமன்றங்கள் வேண்டு மானால் விலக்கு அளிக்கலாம்; அதே உரிமை சட்ட மன்றங்களுக்கு இல்லை என்பதால், விதிப்படி கமிட்டி கூடி, அந்த நபரை வரவழைத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பது தான் நடைமுறையாகும்.
இந்தக் குரல் ஓங்கி, அனைத்துக் கட்சி மற்றும் சட்டம் புரிந்தோர், ஜனநாயகப் பாதுகாப்பு உணர்வாளர்களால் வற்புறுத்தப்பட வேண்டும்.
வேடிக்கைப் பார்க்கவேண்டிய
அவசியம் இல்லை
ஆளுநர் என்ற பதவியில் ஒருவர் இருந்து, இத்தகைய சட்டமன்ற உரிமை மீறிய செயலைச் செய்தால், அவைத் தலைவர் அதை வேடிக்கைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
சட்டமன்ற உரிமைகளின் மாண்புகளின் மரியாதை குறைக்கப்படக் கூடாது!
இது அசாதாரணமான நிலை என்றால், அசாதாரண பரிகாரமும் அதற்குத் தேடப்படத்தான் வேண்டும்.
ஜனநாயக மாண்புக்குரிய
தக்க பாதுகாப்பு
இன்னுங்கேட்டால், மற்றவர்களைவிட பெரிய பதவியில் உள்ளவர்கள்தான் முதல் வரிசையில் அதனை மதித்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்; இப்போது நடவடிக்கை எடுக்காமல் மவுனமானால், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி, சட்டமன்ற மரியாதையைப் பறித்துவிடக் கூடும்.
எனவே, இதனை உடனடியாக செய்வது ஜனநாயக மாண்புக்குரிய தக்க பாதுகாப்பு ஆகும்.
சட்டப்பேரவைத் தலைவர் சீரிய முடிவு
எடுப்பாராக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14-2-2024