17 வயதில் கருஞ்சட்டை அணிந்து 90 வயது வரை இயக்க வீரராக புதுக் கோட்டை மாவட்டத் தில் செல்வாக்குள்ள வராக வாழ்ந்த – புதுக் கோட்டை விடுதி மானமிகு பெ. இராவணன் நேற்று (11.2.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
கிளைக் கழக செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராக, மாவட்டக் கழகத் தலைவராக, மண்டலத் தலைவராக – கழகக் காப்பாளராக பல்வேறு பொறுப்புகளை வகித்து இறுதி மூச்சு அடங்கும்வரை சோர்வில்லாது உழைத்தவர் நமது இராவணன் ஆவார்.
இயக்கத் தொண்டு – ஊர் நலப் பொதுத் தொண்டு என்று பாடுபட்டு வந்த பொது மக்களின் அன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரியவர் ஆனவர். புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மன்றத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். 1954 முதல் ஊர் நலச்சங்கத்தின் தலைவரும் ஆவார்.
தந்தை பெரியார் அவர்களைப் பல முறை அழைத்துப் பொதுக் கூட்டங்களை நடத்தியவர். கழகச் சொற்பொழிவாளர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்திக் கொண்டே இருந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் தவறாது பங்கேற்றவர்.
இயற்பெயர் இராமசாமி – அதனை இராவணனாக மாற்றிக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.
குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் வாழ்விணையர் சின்னாத்தாள், மகள்கள் மீனா, நாகமணி, வான்மதி, செல்வா, ஈவெராமணி, முத்துச்செல்வி, மகன் மேகநாதன் ஆகிய அனைவருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் சார்பில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோருடன் மாவட்டக் கழகத் தோழர்களும் இணைந்து நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள். இன்று (12.2.2024) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்படும்!
தோழர் இராவணனின் அளப்பரும் இயக்கத் தொண்டுக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கம்! வீர வணக்கம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.2.2024
குறிப்பு: இராவணனின் மகள், மகன் ஆகி யோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களும், கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களும் தொலைப்பேசி மூலம் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.