பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக தொழு நோய் ஒழிப்பு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

திருச்சி, பிப்.8- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக தொழு நோய் ஒழிப்பு நாள் சிறப்புக் கருத்தரங்கம் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் 06.02.2024 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் பெரியார் நலவாழ்வுச் சங்கத்தின் செயலர் பேராசிரியர் க.அ.ச.முகமது ஷபீஃக் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி மாவட்ட தொழு நோய் பிரிவு மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் அ.சாந்தி சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் உடலில் சிவந்த, வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை கால்களில் மதமதப்பு, புருவங்களில் முடி உதிர்தல், முகம் அல்லது காது மடல்களில் வீக்கம், தோல் முழுவதும் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு ஆகியவை தொழு நோயின் அறிகுறிகள் என்றும், உடலில் நோய்க் கிருமிகள் தாக்கப்பட்டு 7 முதல் 10 ஆண்டுகள் தமக்கான வளர்ச்சி நிலையை உடலில் தக்க வைத்து அதன் பிறகு தான் இந்நோய்க்கான அறிகுறிகள் வெளியில் தெரிய வருவதாகவும், இத் தொழுநோயினை ஆரம்ப நிலைகளில் கண்டறிந்தால் நூறு சதவிகிதம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றும் உரையாற்றினார்.

மேலும் நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். காசநோயைப் போன்று இந்நோயும் இருமல், தும்மல் போன்றவற்றால் காற்றின் மூலம் பரவக் கூடிய நோய் என்பதால் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலளவில் ஏற்படும் பாதிப்புக்களை விட, தனிமைப் படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தான் அதிகம். எனவே இந்நோயாளிகளை வெறுத்து ஒதுக்காமல் அவர்களுக்கான இயல்பான வாழ்க்கை முறையை உருவாக்கித் தருவது நமது ஒவ்வொருவரின் கடமை என்றும் எடுத்துரைத்தார். மேலும் இந் நோய்க்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான மருத்துவ சிகிச்சைகளும், மருந்து மாத்திரைகளும் எளிதில் கிடைப்பதாகவும், இதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சென்று சரியான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து 2027க்குள் தொழு நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் உரையாற்றினார். தொழு நோய்க்கான மருந்துகள் குறித்தும், அவை எடுத்துக் கொள்ளும் முறைகள் குறித்தும் ஒளிப்படக் காட்சி மூலம் விளக்கி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவப் பணிகளின் நலக் கல்வியாளர் முகமது இஸ்மாயில் மாணவர்களிடத்தில் கேள்விகள் கேட்டு சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, தொழு நோய் பிரிவு முதுநிலை மேற்பார்வையாளர்சுவாமிநாதன் மற்றும் தொழு நோய் தடுப்புக் குழுவினர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் எஸ்.பிரியதர்ஷினி நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழு நோய் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *