சென்னை, பிப். 3- புதுவண்ணை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 57). சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது வீட்டில் தவறி விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், 1.2.2024 அன்று மூளைச் சாவு அடைந்தார்.
இதையடுத்து, தனசேகர் குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் அவரது 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு, அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருந்த அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
உடலுறுப்பு கொடை அளித்த தனசேகருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று (2.2.2024) தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அய்ட்ரீம் மூர்த்தி, கோட்டாட்சியர் இப்ராஹிம், மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
மராட்டியத்தில் துப்பாக்கிச் சூடு
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கைது
மும்பை, பிப். 3- சிவசேனா ஷிண்டே பிரிவு மேனாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக சட்டமன்ற உறுப் பினர் கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை அல்காஸ் நகர் காவல்நிலையத்தில் வெவ்வேறு பிரச்சினைக்களுக்காக இருவரும் புகாரளிக்க வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் கணபதி கெய்க்வாட்டுக்கும் ஷிண்டே பிரிவு சிவசேனா மேனாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே பிரச்சினை இருந்தது தெரிய வந்தது. மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட மேனாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கண்பத்தை கைது செய்தனர்.