கேள்வி 1: ‘இந்தியா’ கூட்டணி உடைகிறதா? உடைக்கப்படுகிறதா?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1 : இரண்டும் இல்லை; தூய்மை யாக்கப்படுகிறது! “கட்டுச் சோற்றில் பெருச்சாளிகள் வெளியேறியது” தூய்மை தானே!
—
கேள்வி 2: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் தமிழ்நாட்டிற்குப் பயன் தருமா?
– கி.வெங்கடேசன், கள்ளக்குறிச்சி
பதில் 2 : நிச்சயமாக. அவர் என்ன சுற்றுலாவா சென்றுள்ளார்? பயனுறு ஆக்க மாநில வளர்ச்சி – வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான பணியை செய்யவே அவர் சென்றுள்ளார்!
—
கேள்வி 3: கோவில் கட்டடப் பணிகள் தொடர, அயோத்தியில் இராமன் கோயில் மூடப்படும் என்ற அறிவிப்பு எதைக் காட்டுகிறது?
– லோ.சொர்ணா, வேலூர்
பதில் 3 : 1. சங்கராச்சாரியார்கள் கூறியது உண்மையே என்பதற்கு இது சாட்சிய அறிவிப்பு!
2. தேர்தல் வித்தை – அது அயோத்தி இராமன் என்பதைவிட, தேர்தல் இராமன் என்பதும் நிரூபணம் ஆகிவிட்டத!
—
கேள்வி 4: அரியானா மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தல் முறைகேடு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் தொடருமா?
– நா.கந்தன், தென்காசி
பதில் 4 : அதுதானே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் புதிய பார்முலா. “தோற்றாலும் வெற்றி பெற்றாலும் அமைப்புகள் எங்கள் வசமே” என்ற ஜனநாயக ஒழிப்பு ஃபார்முலா! எதுவும் நடக்கும் இந்த ஆட்சியில்!
—
கேள்வி 5: ‘இந்தியா’ கூட்டணிக்கு முகம் தேவை என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறாரே?
– கே.அசோக், மதுரை
பதில் 5 : அதைவிட முக்கியம் ‘இந்தியா’ கூட்டணிக்கு ‘அகம்’தான் முக்கியம். ‘முகம்’ முக்கியமில்லை.
—
கேள்வி 6: இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ‘திடீரென்று’ கூட்டணி மாறியது ஏன்?
– செ.ரமேஷ், அரும்பாக்கம்
பதில் 6 : கடைந்தெடுத்த சுயநலம் – தான் எதிர்பார்த்தது நடக்காததால் “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்பதுபோல.
—
கேள்வி 7: அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வருவது உண்மையா? அல்லது மக்களைக் குழப்புகின்ற வேலையா?
– ம.மணி, திண்டிவனம்
பதில் 7 : “தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வரும்போதுதான் தெரியும்” என்பதன் வெளிச்சம்!
—
கேள்வி 8: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் சாலையில் நின்று பூ மழை பொழிவதற்கு ஆட்களைப் பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக அவாளின் ‘இனமலரே’ செய்தி வெளியிட்டுள்ளதே?
– கு.ஜெகன், கும்மிடிப்பூண்டி
பதில் 8 : உண்மை ஒரு நாள் வெளியே வரும்! அதில் பொய்யும் புரட்டும் தெளிவாகும்!
—
கேள்வி 9: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு பாமர மக்களை பாதிக்கும் அல்லவா?
– சு.சுரேஷ், திருவண்ணாமலை
பதில் 9 : ஆம்! அதற்குக் காரணமான ஒன்றிய அரசு குறித்து தேர்தல் துவங்கும்நிலையில் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரமும், தெருப் பிரச்சாரமும் செய்ய வேண்டும்!
—
கேள்வி 10: ‘இந்தியா’ கூட்டணியை உடைந்துவிடாமல் பாதுகாக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும், வடநாட்டு தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
– மு.அப்பு, உதகை
பதில் 10 : தமிழ்நாட்டு கூட்டணி கொள்கைக் கூட்டணி. வடநாட்டு கூட்டணி அப்படியில்லாத பதவிக் கூட்டணியாக இருப்பதால்தான் இந்த நிலை!