நம்மில் பலர் மற்றவர்களை வென்று தமது ஆளுமையினை அகிலம் அறியச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்!
அது தவறு என்று கூற வேண்டியதில்லை. முறையற்ற முறையில் – கோணல் குறுக்கு வழிகளில் மற்றவர்களது உரிமைகளைப் பறிக்கத் திட்டமிடுவது தான் தவறே ஒழிய, தன்னை உயர்த்திக் கொள்ளுவது என்ற இலக்கு ஒருபோதும் தவறே ஆகாது; இன்னும் கேட்டால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றும் ஆகும்!
மற்றவர்களை நாம் வெல்ல வேண்டும் என்று நினைப்பதற்கு முன், நம்மை நாம் வென்றிருக்கிறோமா? அந்த வெற்றி இடத்தில் நின்றிருக் கிறோமா என்பதை எண்ணிப் பார்த்து நம் வாழ்க்கை முறையை தகவமைத்துக் கொள்ளுதல் தலையாயது ஆகும்!
“தன்னை வெல்வான்
தரணியை வெல்வான்”
என்பது ஓர் அனுபவ தத்துவ மொழியாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் இந்த சொற்றொடரை தனது மேடைப் பேச்சுகளில் பல முறைப் பயன்படுத்தி, மக்களுக்கு விரிவுரை தந்துள்ளார்.
பிறரை வெல்லுவதைவிட தன்னை வெல்லுவது எளிதானது அல்ல; மிகவும் கடினமானது என்பதை – அதை உண்மையான உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்ப வர்களோ, அந்த இலக்கை அடைய முயற்சிப்பவர்களோ உணருவார்கள் – ஒப்புக் கொள்வார்கள்!
பிறரை நாம் வெல்ல பலமுறைகளைக் கடைப்பிடித்து அந்த இலக்கை அடையலாம் – அதிலே சில பொதுவான நேரங்களில் நியாயப் படுத்த முடியாத முறைகளைக்கூடக் கையாள வேண்டிய நிர்ப்பந்தமும் இணையலாம்.
ஆனால் தன்னை வெல்ல முயலும்போது, ஒருவர் அவரையே ஏமாற்றிக் கொள்ள முடியாது அல்லவா?
மனசாட்சி, உளப்பூர்வம் என்பதை எவரே ஏமாற்ற முடியும்? முடியாதல்லவா? எனவேதான் அது சற்று கடினமானது.
முடிவுகள் நீரெழுத்துக்களாகி விடுவது பல நேரங்களில்… பாறை எழுத்து – கல்வெட்டாவ தில்லை.
காரணம் மனதில் உறுதி இல்லாததால்! ‘இலக்கு மட்டுமே எனது குறி’ என்று உழைப்பவர் வெற்றி பெறுவது உறுதி!
இந்த வெற்றியை குலைப்பதற்குரிய முழு எதிரி எது தெரியுமா?
சோம்பல்! சோம்பல்!! சோம்பல்!!!
அன்றாட வாழ்க்கையில்கூட நமது வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி இவற்றை நாம் அடைய வொட்டாது தடுப்பது இந்த சோம்பல்தான் – எளிய முறையில் கூற வேண்டுமானால் நமது சோம் பேறித்தனம்!
தாமஸ் கார்வல் என்ற அறிஞர் “மனிதனின் முதல் எதிரி சோம்பல்தான்” என்று கூறியதைப் பலரும் எடுத்தாள்வதுண்டு.
எல்லாவற்றிற்கும் முன் நமது வள்ளுவப் பேராசன் என்ற பகுத்தறிவின் வற்றாத ஊற்று 10 குறள்களில் ‘மடியின்மை’ என்ற ஓர் அதிகாரமே படைத்து சோம்பலின் தீமையை ‘அக்கு வேறு ஆணிவேறாக’ அலசித் தீர்த்து விட்டார்!
வியப்பாக உள்ளது! அவரது மனதின் ஆழம் எப்படிப்பட்ட செறிந்த அறிவு ஊற்றாக உள்ளது என்பதை எண்ணினால் இன்ப அதிர்ச்சியே ஏற்படுகிறது!!
10 குறள்களிலும் ஒரு குறள் நமது நான்கு எதிரிகளைக் காட்டுகிறது.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (குறள் – 605)
1. காலந்தாழ்த்துதல்
2. மறதி எய்துதல்
3. சோம்பல் அடைதல்
4. அளவுக்கு மிஞ்சிய தூக்கம்
(நாளையும் தொடரும்)