சென்னை, பிப். 1- தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (31.1.2024) வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 7 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய பாஜக இணை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதல் காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.
தி.மு.க. அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், தோழமை இயக்கங்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியதுடன், 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. 2021இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏவை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டிற்குள் குடியுரிமை திருத்த சட்டம் கால் வைக்க விடமாட்டோம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.