கேள்வி 1 : இன்றைய இளம் தலைமுறையினர், மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாக உருவாகின்றனரே – இதைத் தடுக்க என்ன வழி?
– இ.அர்த்தனாரிகுமரன், செங்கல்பட்டு
பதில் 1 : நான்கு வழிகள்.
1. கடுமையான சட்டம் மூலம் தண்டனை – மாணவர்களாக இருந்தால் படிப்பு, வேலைவாய்ப்புக்குத் தகுதியின்மை என்பது.
2. மாணவர்கள் மத்தியில் இவற்றின் தீமை குறித்தான பரவலான பிரச்சாரம்.
3. மது விற்பனைக் கூடங்களை ஊருக்கு ஒதுக்குப் புறத்தே – குடியிருப்புகளைத் தாண்டி மட்டுமே அனுமதித்தல்.
4. கஞ்சா போன்றவை – வெளிநாட்டு மாஃபியா கூட்டத்திற்கு இறக்குமதி ஆவதை ஒன்றிய அரசு தடுக்கத் தவறக் கூடாது.
—
கேள்வி 2 : அதிகம் ஊழல் செய்வது அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?
– த.பிரபாகரன், ஈரோடு
பதில் 2 : பட்டிமன்றம் நடத்தாமலே பதில் இதோ: இரண்டு தரப்பினருமே தனியாகவும், கூட்டாகவும் ஊழல் செய்யும் அவலம்!
—
கேள்வி 3 : கர்ப்பூரி தாக்குருக்கு “பாரத ரத்னா விருது” கொடுத்தால் பீகார் மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள் என்று யோசனை கூறியவர்கள், தந்தை பெரியாருக்கு “பாரத ரத்னா விருது” கொடுங்கள் – தமிழ்நாட்டு மக்கள் தாமரைக்கு வாக்களிப்பார்கள் என்று கூறியிருப்பார்களா?
– மா.விநாயகமூர்த்தி, மதுரை
பதில் 3 : ‘கடவுள்’ இராமனை எப்படி தேர்தல் வாக்கு வங்கிக்கான மூலதனமாக்கினார்களோ, அதுபோலவே – பீகாரில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புக் குறைவு என்று கண்டறிந்ததால், கர்ப்பூரி தாக்குரை “பாரத ரத்னா”வாக்கியுள்ளனர். உள்நோக்கத்தோடு என்றாலும் எவ்வளவு தூரம் அவரது சமூக வாக்குகள் – ஒடுக்கப்பட்டோர் வாக்குகள் கிடைக்கும், அவரது ஆட்சியை கவிழ்த்தவர்களுக்கு? இப்போது அவர் “பாரத ரத்னா”வாகி உயர கை கொடுப்பார் என்ற சிந்தனையின் மேலீடே அது!
பெரியாரை அப்படிக் கூறினாலும், அது தங்களுக்கு இலாபமாகாது என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அதை விரும்பாது – அனுமதிக்காது!
கேள்வி 4 : ஏப்ரல் மாதம் தேர்தல் என்று அனைத்து முக்கிய ஊடகங்களும் செய்தி வெளியிட்ட பிறகு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்கிறதே, வதந்திகளை முக்கிய ஊடகங்களே பரப்பினால் உண்மைத்தன்மை கேள்விக்குறி ஆகாதா?
– வீ.பிரபாகரன், வேளச்சேரி
பதில் 4 : இப்போது இப்படி ‘கப்சா’களைத் தயாரிப்பதற்கு தனிப் பயிற்சி நிலையங்களாகவே ஒன்றிய அமைச்சர்களே முன்னிற்கிறபோது சில ஊடகங்களின் பங்கு இருக்காதா என்ன? நிச்சயம் உண்மை புதைக்கப்படுவது ஒரு தொடர் அன்றாட நிகழ்வு. “சத்தியமேவஜெயதே!”
—
கேள்வி 5 : இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை ஒன்றிய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே? இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன லாபம்?
– ச.வெற்றிவேந்தன், காஞ்சி
பதில் 5 : இலங்கையையும் ஹிந்துத்துவ இலங்கையாக்கிட முயலும் முயற்சிக்கு ஒருவேளை பலன் தரலாம்; மற்றபடி எந்த ஆக்கபூர்வ லாபமும் – பயனும் ஏற்படாது. பெரிய நம்பிக்கைக்கு இடம் கிடையாது!
—
கேள்வி 6 : ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, தற்போது ஒரே கடவுள் என்றாகி விட்டது. அடுத்து என்ன?
– மு.அனிச்சமலர், திண்டுக்கல்
பதில் 6 : ஒற்றை ஆட்சி – மாநிலங்களை அழித்துவிட்டு சர்வாதிகார “ராஜ” ஆட்சி! இராமாயணத்தில் இராம ராஜ்ஜியம் என்பதே சர்வாதிகார அரசு என்பதுதானே! – கதைப்படி!
—
கேள்வி 7 : சுதந்திரத்திற்காக காந்தியார் ஒன்றுமே செய்யவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளாரே?
– க.கருப்பசாமி, புதுக்கோட்டை
பதில் 7 : இந்த 24 கேரட் தேசபக்தரின் தினசரி கப்சா தயாரிப்பில் இது லேட்டஸ்ட். மறுப்பு பேசி செய்தித் தலைப்பாக உலா வரும் உத்தி. எனவே, பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டாம். கத்திக் கொண்டே இருக்கட்டும்!
—
கேள்வி 8 : இந்திய தீபகற்பத்தில் பெண் தெய்வ வழிபாடுதானே பிரதானம். இதில் இராமன் எங்கிருந்து வந்தான்?
– ரா.சாக்கியமுனி, தஞ்சை
பதில் 8 : முதலில் வேதத்தில் ‘இராமன்’ உண்டா என்று கேளுங்கள். பதில் பெறுங்கள்.
—
கேள்வி 9 : ‘விடுதலை’யால் விளைந்த மறைமுகப் பயன்கள் ஏராளம் உண்டு. நேரடி பயன்கள் ஒன்றிரண்டைச் சொல்லுங்களேன்?
– இரா.அன்பரசன், மேலூர்
பதில் 9 : ஏராளம் உண்டு. கட்டுரைகளாகவே எழுதுவோம் – விரைவில்.
பாரதிதாசன், பாரதியார் ஆகியோரது பெயர்களில் இரண்டு பல்கலைக்கழகங்கள். இது பற்றிய சிந்தனை, எப்படி அறிவிப்பானது? – விடுதலையின் பங்களிப்பு எப்படி? மூலாதாரம் என்ன? என்பன உள்பட பல உண்டு.
—
கேள்வி 10 : தந்தை பெரியாருக்கு இந்த ஆட்சி காணிக்கை என்று அறிஞர் அண்ணா சொன்னது எப்போது?
– பி.கேசவமூர்த்தி, விளாங்குப்பம்
பதில் 10 : அறிஞர் அண்ணா 1967இல் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, அப்போதைய சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் தாம்பரம் முனு.ஆதி அவர்கள், முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பினார்.
“தியாகி மான்யம், 5 ஏக்கர் தருகிறதே அரசு; தந்தை பெரியார் சுதந்திரப் பேராட்டத்தில் பல முறை சிறைக்குச் சென்று பாடுபட்டவர். அவருக்குத் “தியாகி மானியம் தர அரசு உத்தேசித்துள்ளதா?” என்று கேள்வி கேட்டார்.
உடனே முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா எழுந்து, “தியாகி மானியம் அல்ல, எங்கள் அரசே – அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்படும் காணிக்கை” என்று சொன்னார் பலத்த கைத்தட்டலுக்கிடையே.
அப்போது சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தந்தை பெரியார்.
இந்தச் செய்தியை அய்யாவிடம் நேரில் சென்று நான் கூறியபோது, மகிழ்ச்சியுடன் “எனக்கு வலி குறைந்தது” என்று கூறினார். அந்தச் செய்தியை ‘விடுதலை’ ஆசிரியர் என்ற முறையில் அய்யாவின் அனுமதியோடு ஒரு பெட்டிச் செய்தியாக்கி ‘விடுதலை’யில் வெளியிட்டோம். முதல் அமைச்சரும் அதைப் பார்த்து மிகவும் அகமகிழ்ந்தார் – உற்சாகமானார் என்பது அருகில் இருந்தவர்கள் எமக்குத் தெரிவித்த தகவல், போதுமா?
(சுயமரியாதை திருமணச் சட்டம் நிறைவேற்றத்தின்போது அல்ல, இந்த பதில்)