பாவங்களைப் போக்க தர்ப்பண பூஜையாம்

Viduthalai
3 Min Read

கூறுகிறார் ம.பி. பாஜக முதலமைச்சர் சிவராஜ்சிங்

போபால், அக்.13- பாவங்களைப் போக்கவே  தர்ப்பண பூஜை செய்யப்படுகிறது என்று மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் கூறியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சம் என்ற 15 நாட்கள் ஒரு குடும்பத்தினரின் முன்னோர்கள் வழிபாடு என்ற பெயரில் நதிக்கரைகளுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு சிரார்த்த தர்ப்பண பூஜை நிறைவேற்றப்படுகிறதாம்.

தர்ப்பணம், பூஜைகள் என்றாலே பார்ப்பனர்களுக்குக் கொண்டாட்டம்தான்.  விதைக்காமல் அறுவை செய்பவர்களாயிற்றே!

அவ்வகையில் ம.பி. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் சிரார்த்த பூஜித்தாராம். அப்படி அவர் செய்யும் பூஜை படத்தை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்திருந்தது.

இதுதான் இந்தியா: பட்டினி குறியீட்டில் 111 ஆவது இடம்

புதுடில்லி, அக்.13 ஒவ்வொரு நாட்டிலும் பட்டினி அளவு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிந்து, உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 125 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டு நேற்று (12.10.2023) பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது, பட்டினி அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது. 125 நாடுகள் பட்டியலில் இந்தியா 111 ஆவது இடத்தில் உள்ளது. 

கடந்த ஆண்டு, இந்தியா 107 ஆவது இடத்தில் இருந்தது. அதே சமயத்தில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102 ஆவது இடம்), வங்காளதேசம் (81), நேபாளம் (69), இலங்கை (60) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

அதுபோல், குழந்தைகள் தங்கள் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறார்களா என்பதை கணக்கிட்டதில், இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

“தமிழ்நாட்டின் மீது

எத்தனை வகையான வஞ்சகம்” 

ஒன்றிய பாஜக அரசுமீது  சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

மதுரை, அக்.13 தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய அய்ந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பின்படி, 5.25 கோடி வாக்காளர்களையும், 200 தொகுதிகளையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற இருந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 11.10.2023 அன்று வெளியிட்டது. நவம்பர் 23 ஆம் தேதி அதிகத் திருமணங்கள் நடைபெறும் முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் தேதி மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,

“தேவ் உதானி ஏகாதசிக்காக ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்ட ஸ்டேட் வங்கி தேர்வை மாற்றச்சொல்லி கடைசி வரை போராடினோம். ஆனால் மமதையோடு மாற்ற மறுத்தது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதுதான் எத்தனை வகையான வஞ்சகம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *