தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானம்

viduthalai
3 Min Read

கடந்த 21ஆம் தேதி திராவிடர் கழகம் பிறந்த தாய் வீடாம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாடு – திராவிட இயக்கத்தில் அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

முத்து முத்தான 25 தீர்மானங்களும் இந்தக் கால கட்டத்தில் கருத்தாழத்துடன் வடிக்கப்பட்டவையாகும்.

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் திராவிட மாடல் அரசில் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் பாராட்டப்பட்டுள்ளன – நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளன என்பவை ஒருபுறம்; மக்களைச் சூழ்ந்துள்ள பாசிச ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் சுட்டிக் காட்டப்பட்டு இருப்பதுடன், அவற்றை எதிர் கொள்ள வேண்டிய ஆவேசத்தின் துடிப்பு தீர்மானங்களில் மின்னித் தெறிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவின் கண்களைக் கொத்தும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது என்ற தீர்மானம் கவனத்துக்கு உரியதாகும்.
தகுதி திறமையை வளர்க்கத்தான் ‘நீட்’ என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு மருத்துவ, சிறப்பு மருத்துவ உயர் கல்வித் தேர்வுக்கு நீட்டில் பூஜ்ஜியம் எடுத்தாலும், அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஓர் அரசு அறிவிக்கிறது என்றால் அதற்கு மக்கள் கொடுக்க வேண்டிய மதிப்பெண் பூஜ்ஜியமாகத்தான் இருக்க முடியும்.

எப்படியோ மருத்துவக் கல்லூரியில் நுழைய விடாமல் தடுத்தாகி விட்டது; அதற்குப் பிறகு நடக்கும் முதுகலை சிறப்புப் படிப்பில் நுழையக் கூடியவர்கள் ‘நம்மளவாள்’ தானே பெரும்பாலும் இருக்கப் போகிறார்கள் என்ற பார்ப்பனத்தனம் இதற்குள் கண்ணி வெடியாகப் பதுங்கி இருக்கிறது என்பது தான் உண்மை.
கல்வி என்பது ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை படைத்த துறையல்ல; ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent) உள்ளது என்ற நிலையில் மாநில அரசைப் பொருட்படுத்தாமல், தானடித்த மூப்பாக நடைபோடும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியை வீழ்த்துவதற்கு – இந்த ‘நீட்’ ஒன்று போதுமே! பெரும் பான்மையான மக்கள் பட்டியலின மக்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும்தானே. இவர்கள் பொங்கி எழ மாட்டார்களா?

‘நீட்’ செயல்பாட்டுக்கு வருமுன் சி.பி.எஸ்.இ.யில் படித்த இருபால் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் (2016இல்) 62 என்றால், நீட் திணிக்கப்பட்ட பின் அடுத்தாண்டு அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220; அதாவது கிட்டதட்ட 18 மடங்குக்கும் மேல் அதிகம்.

‘நீட்’ என்னும் தூண்டிலில் வைக்கப்பட்டுள்ள புழு எதற்காக என்பது தெரிகிறதா? இதனை வீழ்த்த வேண்டும் என்பதில் தொடக்க முதல் குரல் கொடுத்தும் தொடர் பயணங்களை மேற்கொண்டும், களங்கள் பல கண்டும் திராவிடர் கழகம் ஒரு பக்கத்தில் போராடிக் கொண்டு இருக்கிறது. இரட்டைக் குழல் துப்பாக்கியான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், தி.மு.க. இளைஞரணியினர் 50 இலட்சத்துக்கு மேலும் கையொப்பம் பெற்று மக்கள் இயக்கமாக நடத்தி யிருப்பதை வரலாறு என்றும் பேசும்.

காங்கிரசிலிருந்து தந்தை பெரியார் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதே இந்த சமூகநீதியின் அடிப்படையில்தானே!
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் மற்றொரு முக்கிய தீர்மானம் – குலக்கல்வியைப் புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடத்த இருக்கும் போராட்ட அறிவிப் பாகும். தமிழ் நாட்டில் மட்டுமல்ல – அகில இந்திய அளவில் பாசிச பிஜேபி அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம் என்பதும் – தமிழ்நாடு தந்தை பெரியார் மண் – திராவிட தத்துவத்தின் தாய்வீடு என்பதற்கான அடையாளமாகும்.

இந்த வகையில் ‘திராவிட மாடல்’ அரசு என்பது – ஏதோ குறிப்பிட்ட பரப்பளவில் வாழும் மக்களுக்கானது என்பதல்ல – சமூகநீதி எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கங் கெல்லாம் கட்டாயம் தேவைப்படும் தத்துவத்தைக் கொண்ட தாகும் என்பதை நிலை நாட்டும் தீர்மானமாகும். தேசிய கல்விக் கொள்கையைக் குலக்கல்வி என்று அடையாளமிட்டு இருப்பது அப்பட்டமான உண்மையாகும்.

தேசிய கல்விக் கொள்கையோடு விஸ்வகர்மா யோஜனா என்பதையும் இணைத்துப் பார்த்தால் சூட்சமம் சுலபமாகப் புரிந்து விடுமே!
முதல் தலைமுறை, அதிகபட்சம் இரண்டாம் தலை முறை யாகக் கல்விச் சாலைகளில் கால் பதிக்கும் ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்’ வீட்டுப் பிள்ளைகளின் குதிகால் நரம்பை வெட்டும் கோடாரி தான் ஒன்றிய அரசு திணிக்கத் துடிக்கும் கல்வித் திட்டம்.

இவற்றை எல்லாம் விழிப்பாகக் கண்காணித்து, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் கூர் தீட்டி தீர்மானங் களாக வழங்கப்பட்டுள்ளன – வரவேற்கிறோம் – வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *