இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து இன்னொரு மதக் கோயிலைக் கட்டுவதுதான் ஹிந்துத்துவாவா என்ற கேள்விக்கு விடை இல்லை.
அதோடு நின்று விட்டதா? ராமன் கோயில் திறப்பு நாளன்று சங்கிகளின் வன்முறைத் தாண்டவம் தலை விரித்தாடியது எத்தகைய வன்கொடுமை!
கேட்டால் அவர்கள் சொல்லலாம். ‘எங்கள் ராமனே உங்களின் சம்பூகனை வாளால் வெட்டிக் கொல்லவில்லையா?’ என்று கேட்டாலும் கேட்பார்கள்.
அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் நடந்த ராமன் பேரணியில் இஸ்லாமியர் பகுதிகளில் மோசமான சொற்களை கூச்சலிட்டுக் கூறிக்கொண்டு, காவிக் கொடியைக் காட்டி மிரட்டியவாறு அவர்களின் வாழிடங்களில் எல்லாம் கற்களை வீசினர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இஸ்லாமியர் வீடுகளை காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர்!
அயோத்தி ராமன் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இந்து அமைப்பினரால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆயுதங்கள் ஏந்தி ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், மும்பை அருகே உள்ள மீரா ரோடு பகுதியில் “சிறீராம் ஷோபா யாத்திரை” என்ற பெயரில் ராமன் ஊர்வலம் நடைபெற்றது..
கார்கள், பைக்குகளில் காவிக் கொடியைக் கட்டியபடி பலரும் பேரணியில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். அப் போது இஸ்லாமியர் பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டனர். கற்களைக் கொண்டு தாக்கினர். இதனால் பாதுகாப்பிற்காக மற்றொரு பிரிவினர் அவர்கள் வீசிய கற்களை மீண்டும் வீசத் துவங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த மோதலில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. பேரணியாக சென்றவர்கள் சிறுபான்மையினரைத் தாக்கி அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “மோதலில் ஈடுபட்ட 15 பேருடைய வீடுகள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்ததால் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன” என்றனர். முன்னதாக மும்பையில் இரு பிரிவினர் இடையேயான இந்த மோதல் தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதன் காரணமாக மோதல்கள் மேலும் வெடித்தன!
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்ற பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இதே பாணியைப் பின்பற்றி மகாராட்டிராவில் ஆளும் சிவசேனா – பாஜக கூட்டணி அரசும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்களுக்கு சொந்தமான இடங்களை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது.
அதே போல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு அதே இடத்தில் ராமன் கோயில் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெறுவதையொட்டி அதனைக் கண்டிக்கும் வகையில் புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ‘பாப்ரியை நினைவு கொள்வோம், அரசமைப்புச் சட்டம் கொல்லப்பட்டது’ என்று பதாகைகளை வைத்துள்ளனர்.
அங்கு புகுந்த காவிக்கும்பல் ‘ஜெய்சிறீராம்’ என்று முழக்க மிட்டபடி, பதாகைகளைத் தீவைத்து எரித்தும், மாணவர்களைத் தாக்கியும் வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளது. தாக்கப்பட்ட மாணவர்களில் 4பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, வன்முறை வெறியாட்டம் போட்ட காவிக்கும்பலை அப்புறப்படுத்தவோ பாதுகாப்புக்கான காவலர் எவரும் முனைப்புக் காட்டவில்லை என்று மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கல்வி நிறுவனத்துக்குள் சுமார் 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் பிற்பகல் 1.30 மணியளவில் நுழைந்து வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் மான்காப் நோக்வோகம் நுழைவாயிலை நோக்கிச் சென்றபோது, “ஜெய்சிறீராம்” என்று கத்திக்கொண்டே நுழைந்த காவிக்கும்பல் மாணவர் சங்கத் தலைவரைத் தாக்கியபோதும் பாதுகாப்புக்கான காவலர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.
காவிக் கும்பலின் வன்முறைகுறித்து பாதுகாப்புக்கான காவலர்களிடம் கேள்வி எழுப்பிய மாணவர் சங்க பொதுச்செயலாளர் சயந்தனும் அக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் நேற்றுமுன்தினம் (23.1.2024) அரங்கேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 21.1.2024 அன்றும் கல்வி நிறுவனத்துக்கு வெளியே கூடிய கும்பல் மேலும் அதிகமானவர்களுடன் வருவதாக எச்சரித்து சென்றது என்கின்றனர் மாணவர்கள். அந்த எச்சரிக்கை குறித்து கல்வி நிறுவனத்துக்கான காவல் அதிகாரி சஞ்சய் ஜாதவ் மற்றும் பதிவாளர் பிரதீக் ஜெயின் ஆகியோரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் தரப்பில் கூறும்போது, “அப்பாவி மாணவர் கள் மீது குண்டர்கள் தாக்குதலை நடத்தியபோது, கல்வி நிறுவனத்தில் பணியிலிருந்த பாதுகாப்புக்கான காவலர்கள் மற்றும் பணியாளர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்தனர். வன்முறைகளால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது. மாணவர் களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையுடன் ஜனநாயக உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை மாணவர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.” என்றனர்.
இந்தக் கல்வி நிறுவனத்துக்குத் தலைவராக ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ளவர் திரைக்கலைஞர் மாதவன். இதுவரை அவர் இந்த வன்முறைகுறித்து மூச்சு விடவில்லை.
அயோத்தியில் ராமன் கோயில் விழா நடத்தப்பட்ட அடுத்த நாளிலேயே இவ்வளவு வன்முறைகளும் காவிக்கும்ப லால் அரங்கேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பட்டப்பகலில் மசூதி இடிக்கப்பட்டு ராமன் கோயில் எழுப்பப்பட்டு விட்டது. இடித்தவர்கள் யாரும் தண்டிக்கப்பட வில்லை.
சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு மக்கள் மதத்தின் பெயரால் மோதிக் கொள்ளும் நிலையை ஆட்சி அதி காரத்தில் உள்ளவர்களே தூண்டலாமா?
வன்முறையற்ற சமுதாயத்தை அமைக்க அரசு முன் வரட்டும்! வன்முறை இரு முனையிலும் கூர்மை உடைய ஆபத்தான கத்தி!!