“கடிகாரமும் ஓடத் தவறிடும் – இவர் கால்களோ என்றுமே ஓடிடும்”
“ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்”
திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு தொடர் பயணத்துக்காக வேன் அளிப்பு விழா வரும் 20.10.2023 வெள்ளி மாலை திருச்சி – புத்தூர் நான்கு சாலையில் மிகப் பெரிய விழாவாக நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் நாளும் மக்களைச் சந்திக்க ஓடிக் கொண்டே இருப்பவர் – மக்களிடம் தந்தை பெரியார் கருத்துகளை திராவிட இயக்கச் சித்தாந் தங்களை அடைமழையாகப் பேசிக் கொண்டே இருப்பவர். இதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே!
தலைவர்கள் சொல்லுகிறார்கள், ஆதரவாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள், ‘அய்யா 90 வயதைத் தாண்டி விட்டீர்கள் – இன்னும் இப்படி அலைந்து கொண்டுள்ளீர்களே – கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறார்கள்.
அவரிடம் உடனடியாக தயாராக ஒரு பதில் உண்டு. “தந்தை பெரியார் 95 ஆண்டு வரை உழைத்துக் கொண்டு இருந்தாரே. ஓடி ஓடிப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்க வில்லையா? அவருடைய தொண்டன் அதைப் பின்பற்ற வேண்டாமா? மரம் சும்மா இருந்தாலும், காற்று சும்மா இருக்க விடுகிறதா? நாட்டில் நாள்தோறும் நாள்தோறும் நிகழும் பிரச்சினைகள், அறைகூவல்களைப் பார்த்திருந்தும் நான் படுக்கையில் ஓய்வு எடுக்க முடியுமா?” என்று அவர் பதில் சொல்லி விடுவார் – வேண்டுகோள் விடுத்தவர்களால் அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது?
10 வயதில் ஏறிய மேடை அவரின் கால்கள்! 90 வயதில் 80 ஆண்டுப் பொது வாழ்க்கை என்கிற விகிதாசாரம் இவரையல்லால் வேறு யாருக்குண்டு?
மக்களைச் சந்திப்பதுதான் அவருக்கு மாமருந்து. இவ் வளவுக்கும் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் (1991).
32 ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. இருதய அறு வைச் சிகிச்சை செய்து கொண்டால் மேலும் 10 ஆண்டுகள் வாழலாம் என்று சொல்லப்பட்ட மருத்துவக் கோட்பாட் டையும் முறியடித்து அதைவிட மூன்று மடங்கு வாழ்வதோடு மட்டுமல்லாமல், ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்.
அவர் உடலில் அறுவைச் சிகிச்சை கத்தி படாத இடமில்லை. எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து முன்னேராக சென்று கொண்டே இருக்கிறார்.
தந்தை பெரியாரிடம் வந்தார்கள் – வளர்ந்தார்கள் – சென்றார்கள். ஆனால், என்று தந்தை பெரியாரின் கை விரலைப் பிடித்தாரோ, அன்று முதல் இன்று வரை ஏன் – நாளை வரை – அவர் மொழியில் சொல்ல வேண்டுமானால் “இறுதி மூச்சு அடங்கும் வரை, பெரியார் பணி முடித்துக் கிடப்பதே என் பணி – தமிழ்ச் சமுதாய அடிமை நான்” என்ற உறுதிப்பாட்டின் மீது சவாரி செய்பவர். (கடலூர் 22.11.1981).
இவர்மீது ஈரோட்டுச் சூரியன் வைத்த நம்பிக்கை அசாதாரணமானது.
29 வயதில் கழகத்தின் பொதுச் செயலாளராக தந்தை பெரியாரால் அமர்த்தப்பட்டவர் 31 வயதில் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை தந்தை பெரியார்தம் கட்டளைப்படி ஏற்றுக் கொண்டவர். ஒரு நாளேட்டுக்கு 61 ஆண்டு ஆசிரியர் என்ற ‘கின்னஸ்’ சாதனை இவருக்கே உண்டு!
‘விடுதலை’யை வீரமணியினுடைய “ஏக போக ஆதிக்கத்தில்” ஒப்படைத்து விட்டேன்!” என்ற தந்தை பெரியாரிடம் வாடா மலரைப் பெற்றார் இவர் – என்றால் இதற்கு இணையான விருதோ, புகழோ எதுவாகத்தான் இருக்க முடியும்? ‘விடுதலை’ ஆசிரியர் நாற்காலியில் தோளை அழுத்தி தந்தை பெரியார் அமர வைத்தாரே! இதைவிட கிரீடம் வேறு என்ன வேண்டும்?
“தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம்!” என்றார். உலகின் பல நாடுகளிலும் பன்னாட்டுப் பெரியார் மாநாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் பெரியார் குரல் கேட்கிறது. அகில இந்தியத் தலைவர்களும் பேச ஆரம்பித்து விட்டனர்.
சமூகநீதிக்காக – தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். இந்தக் காரணத்துக்காகவே காங்கிரசை விட்டே வெளியிலும் வந்தார்.
அந்தக் கொடியைத் தாழாமல் உயர்த்திப் பிடிக்கும் உன்னதத் தலைவர் இவர். தந்தை பெரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 49 விழுக்காடு என்றால் இன்றைக்கு 69 விழுக்காடாக அரசமைப்புச் சட்டப் பாது காப்போடு (ஒன்பதாவது அட்டவணை) இந்தியாவிலேயே கலங்கரை விளக்கமாக ஒளி வீசி நிற்பது தமிழ்நாட்டில்தானே! அதற்கான காரண கர்த்தா யார்? என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த ஒன்றே!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் குழுப் பரிந் துரையைச் செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்திய கரம் – உரம் தமிழர் தலை வருடையது.
“சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்” (23.12.1992) என்று சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் சொன்னதை மறக்க முடியுமா!
“வாழ்நாள் சாதனையாளர் விருது” – அமெரிக்காவி லிருந்தும், பல்வேறு அமைப்புகளிலிருந்தும் இவரைத் தேடி வருகிறது.
“தகைசால் தமிழர் விருதை அளித்து வாரி அணைத்தார் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ‘திராவிட மாடல்’ அரசின் தளகர்த்தர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
‘மானமிகு’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார் (திருவை குண்டம் – 12.6.1980) தமிழர் தலைவர்.
“நான் மானமிகு சுயமரியாதைக்காரன்!” என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மார்புப் புடைத்துச் சொல்லும் அளவுக்கு அந்தச் சொல்லின் மதிப்பு உயர்ந்து மிளிர்கிறது.
“தமிழா தமிழனாக இரு!”
“தமிழா இனவுணர்வு கொள்!”
“தமிழா நீ இந்து அல்ல தமிழன்!”
“மதவெறியை மாய்ப்போம்
மனிதநேயம் காப்போம்!”
“நம்மால் முடியாதது யாராலும் முடியாது.
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்ற முழக்கங்களை முத்தாய் உதித்தவர் நமது தகைசால் தமிழர் தலைவர்.
பெரியாரோடு இவர்களின் இலட்சியத் தீ அஸ்தமனமாகி விடும் என்று மனப்பால் குடித்த ஆரியம் – “தாய் எட்டடி பாய்ந்தால் இந்தக் குட்டி பதினாறு அடி அல்லவா பாய்கிறது” என்ற எரிச்சலில் பார்ப்பனர்கள் பழனியிலே மாநாடு கூட்டி மானமிகு வீரமணி அவர்களைப் பாடைக் கட்டித் தூக்கி ஊர்வலமாகச் செல்லவில்லையா?
தந்தை பெரியாருக்குப்பின் அவர் பாட்டையில் எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வெற்றி நடைபோடுகிறது இயக்கம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
ஆனாலும் அவர் உயிருக்குப் பல முறை குறி வைக்கப்பட்டதுண்டு. நாம் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை என்று எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து போன துணிவும், உறுதியும் ஆசிரியரின் தனித்தன்மை. 56 முறை சிறை கைது – சிறைவாசம் (ஓராண்டுக் காலம் ‘மிசா’வில் சிறை)
வயது ஏற ஏற அவர் மிகவும் வேக வேகமாக ஒன்று முடிவதற்குள் அடுத்த ஒன்றைத் தயாராக வைத்திருக்கிறார். அழைக்கிறார் தோழர்களை அவரே முன்னின்று முடுக்கி விடுகிறார்.
எத்தனை எத்தனைத் தொடர் சுற்றுப் பயணங்கள்! தலை சுற்றாத பம்பரம் இவர்.
காவிரி பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு நீட் பிரச்சினை -இப்படி இப்படியாக அவ் வப்போது அவ்வப்போது எழும் பிரச்சினைகளையொட்டி தொடர் பிரச்சாரம்! பிரச்சாரம்!!
இம்மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடர் பிரச்சார சுற்றுப் பயணம் குலத் தொழிற்கல்வி (விஸ்வகர்மா யோஜனா).
இவர் சுற்றும் பயணத்தில் வாகன சக்கரங்கள் களைப் படைகின்றன.
பயண வாகனங்கள் இயந்திரங்கள்கூட தேய்மானத்தால் திணறுகின்றன. “இந்த மனிதரோடு நாம் எப்படிப் போட்டிப் போட முடியும்?” என்று இரு கைகளையும் தூக்கிக் காட்டுகின்றன.
எனவேதான் அடுத்தடுத்து வாகனங்களையும் கழகத் தோழர்கள் சளைக்காமல் அளித்துக் கொண்டுதான் இருக் கின்றனர். (பட்டியல் தனியே காண்க).
வரும் 20ஆம் தேதி மாலை தந்தை பெரியாரின் தலைமை அகமான திருச்சியில் – புத்தூர் நான்கு சாலையில் புதிய வேன் வழங்கும் திருவிழா நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு ஞா. ஆரோக்கியராஜ் தலைமை ஏற்க, தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு. சேகர் வரவேற்புரை வழங்க – மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்கள் புதிய வாகனத்தை வழங்குகிறார்.
அத்தனைக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
அவர்கள் எல்லாம் பங்கேற்கும்போது நாம் மட்டும் வீட்டில் முடங்கிவிட முடியுமா?
நமக்குத் தேராவது – திருவிழாவாவது! பண்டிகையாவது – பாழும் மூடத்தன நிகழ்ச்சிகளாவது!
நமக்கு விழா எல்லாம் கொள்கைத் திருவிழாக்கள்தான்! இலட்சிய நிகழ்ச்சிகள் தான். மாநாடுகள் தான் – மட்டிலா மகிழ்ச்சி அங்கேதானே!
மடை திறந்த வெள்ளமெனத் திரள்வீர் தோழர்களே!
மதவாதம் தலை தூக்கும் கால கட்டத்தில் அவற்றைத் தூள் தூளாக்கிட புயல் வேகத்தில் நமது தலைவர் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட, புத்தம் புதிய வாகனம் (வேன்) வழங்கப்பட உள்ளது.
வாருங்கள் தோழர்களே! வற்றாப் பெரு மகிழ்ச்சி நீர் வீழ்ச்சியில் குளிப்போம் தோழர்களே!
குடும்பத்தோடு வாருங்கள் – உறவினர்களையும் அழைத்து வாருங்கள்; நண்பர்களையும் தோள் மேல் கை போட்டு அணைத்து வாருங்கள்.
இது ஓர் இயக்கத் திருவிழா மட்டுமல்ல – இனத்திற்கான விழா! நம் இனம் வீழாமல் தடுக்கும் எழுச்சி விழா சந்திப்போமா திருச்சியில்?
ஓய்ந்து போகும் வாகனங்களும் – ஓயாத தலைவரும்
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவராகவும், அவரின் அடிச்சுவட்டில் தொடர் பயணத்தை மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு அறிவுப் புரட்சி மேற்கொண்டு வருகிறார். ‘பெரியார் கொள்கைகளைப் பேசாத நாள் பிறவா நாள்’ எனும் கொள்கை உடையவர் நம்முடைய தலைவர் ஆசிரியர். மாதத்திற்கு 20 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்களைச் சந்திக்கிறார், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்கள் நிதி திரட்டி, ஊர்தி வாங்கி அன்பளிப்பாக வழங்கி வருகிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிரச்சார வேகத்துக்கு நாம் இதுவரை அளித்து வந்த வாகனங்கள் ஈடுகொடுக்க முடியாமல் பழுதாகிவிடுகிறது. நாம் செல்ல வேண்டிய பாதைகள், ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கக்கூடிய இக்காலக்கட்டத்தில் சுற்றுப்பயணத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேன் வழங்க உள்ளோம்.
முதன் முதலில் 18.08.1981-ஆம் ஆண்டு தமிழர் தலைவர் அவர்கள் பயன்படுத்த வேன் விசிளி 308 கி திருவாரூரில் முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக 17.09.1987-ஆம் ஆண்டு தமிழர் தலைவர் அவர்கள் பயன்படுத்த வேன் மதுரையில் ஜஸ்டிஸ் திரு. ஏ. வரதராசன் தலைமையில் ஜஸ்டீஸ் திரு. வேணுகோபால் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மூன்றாவதாக 26.02.1994-ஆம் ஆண்டு தமிழர் தலைவர் அவர்கள் பயன்படுத்த அம்பாசிட்டர் கார் ஜிழி 45 ஞி 6060 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி குழுமத்தின் சார்பில் நான்கு துணை வேந்தர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்த கார் பயன்படுத்தப்பட்ட கி.மீ.1,20,000 தலைமை: புலவர் கோ. இமயவரம்பன், கார் அளிப்பு: வள்ளல் ‘வீகேயென்’ கண்ணப்பன்.
நான்காவதாக அயன்புரம் கே.அசோக்குமார் நினைவு ஊர்தி 19.08.1995-ஆம் ஆண்டு டெம்போ டிராவலர் ஜிழி 01 ரி 9596 எண் கொண்ட வாகனம் குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் தஞ்சாவூர் – திலகர் திடலில் வழங்கப்பட்டது. அந்த வாகனம் பயன்படுத்தப்பட்ட தொலைவு கி.மீ. 1,30,000.
அய்ந்தாவதாக தருமபுரி பி.கே. இராமமூர்த்தி நினைவு ஊர்தி 26.11.2000 அன்று டெம்போ டிராவலர் ஜிழி 45 றி 1711 எண் கொண்ட வாகனத்தை ஜி.கே. மூப்பனார் தலைமையில் திருச்சி – வெல்ல மண்டி திடலில் வழங்கப்பட்டது. அந்த வாகனம் பயன்படுத்தப்பட்ட தொலைவு கி.மீ.1,60,000.
ஆறாவது முறையாக 21.06.2007 அன்று டெம்போ டிராவலர் ஜிழி 45 கிரி 0212 எண் கொண்ட வாகனம் அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர். அவர்களால் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வழங்கப்பட்டது. அந்த வாகனம் பயன்படுத்தப்பட்ட தொலைவு கி.மீ. 1,20,000.
ஏழாவது முறையாக 04.02.2017 அன்று டெம்போ டிராவலர் ஜிழி 45 ஙிரி 7007 எண் கொண்ட வாகனம் மதுரையில் திராவிடர் கழக மாணவர் கழக – இளைஞரணி சார்பில் நிதி திரட்டப்பட்டு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களால் வழங்கப்பட்டது. அந்த வாகனம் பயன்படுத்தப்பட்ட தொலைவு கி.மீ. 1,23,000.
இப்போது எட்டாவது முறையாக வரும் 20ஆம் தேதி திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களால் வழங்கப்பட உள்ளது.