‘மதம்’ பிடிக்க வேண்டாம்!

3 Min Read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் இராமன் பிறந்ததாகவும், அதனை திரும்ப இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களைத் தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். மேலும் அது பெரிய கலவரமாக மாறி, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்துவ அமைப் புகள் அதனை இடித்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கே இராமன் இருந்ததாகவும், அதனால் அங்கே இராமன் கோயில் கட்டப்போவதாகவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் கட்ட அனுமதித்து 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த ஆண்டே கரோனா பேரிடரின்போது அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்க் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இராமன் கோயிலின் பணிகளை பாஜக அரசு மேற்கொண்டது. தொடர்ந்து தற்போது இந்தக் கோயில் கிட்டத்தட்ட கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முழுமையாக அல்ல! இதைத் தொடர்ந்து தற்போது இந்தக் கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அதோடு கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4-5 மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இராமன் கோயிலைத் திறந்து ராமனை முன்னிறுத்தி மக்களிடம் ஒரு நிலைப்பாட்டை புகுத்த பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இராமன் கோயில் திறப்பு விழாவின்போது இஸ்லாமியர்களும் ‘ஜெய் சிறீராம்’ என முழக்கிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார். இதற்குத் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாஜக, ஆர்.எஸ்.எஸின் கீழ் இயங்கும் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் (Muslim Rashtriya Manch) தலைவருமான இந்திரேஷ் குமார், ‘ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பர்யம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களில் 99 சதவிகிதம் பேர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக் கெல்லாம் ஒரே மூதாதையர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறே இருப்பார்கள். அவர்கள், தங்களின் மதத்தைத்தான் மாற்றியிருக்கிறார்களே தவிர, நாட்டை அல்ல. நமக்கென்று பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள், கனவு, அடையாளம் போன்றவை இருக்கின்றன. நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக்கும் வெளிநாட்டினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு விழா சமயத்தில், மதரஸாக்கள், தர்காக்கள், மக்தாப்களில் ‘சிறீராம் – ஜெய் ராம் – ஜெய் ஜெய் ராம்’ என்று 11 முறை முழங்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் வழக்கமான தொழுகையை மேற்கொள்ளலாம்”என்றார். இவரது பேச்சு தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

ராமன் கோயில் திறப்பு விழா என்பது பக்திக்கான ஒன்றா கத் தெரியவில்லை. பக்தியின் பெயரால் மத வெறியைக் கிளப்பி, அரசியலில், தேர்தலில் தங்கள் தரப்பைப் பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சூழ்ச்சியே என்பது இதன் மூலம் விளங்க வில்லையா?
மதவெறி மனிதத்துக்கு உகந்ததல்ல – சகோதரத் துவத்துக்குச் சாவு மணி அடிப்பதே!
படித்தவர்கள், பக்குவம் பெற்ற சிந்தனையாளர்கள், அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள், கருதுபவர்கள் பா.ஜ.க.வில் சங்பரிவார் வட்டாரத்தில் யாரும் இல்லையா?
நாடு எங்கே போகிறது? நாகரிக திசையை நோக்கியா – கற்காலத்தை நோக்கியா?
சிந்திக்க ஆசைப்படுங்கள் – இல்லையேல் நாடு நாசமாகப் போய்விடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *