வி.சி.வில்வம்
மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 30.12.2023 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைவேம்பு கிராமத்திற்குச் சென்றோம்!
“பளிச்சென்ற” வீடு!
ஊட்டி அடிவாரம் என்பதால் அதன் சாயல்கள் அதிகமாகவே காணப்பட்டன. அந்தக் குளிர், பச்சை பசேலென்ற மரங்கள், வளைந்தும், நெளிந்தும் காணப்பட்ட வழிகள், கிராமப் பகுதியாக இருந்தாலும் அழகிய சாலைகள் என ரசிக்கும்படி இருந்தது.
ஒரு திருப்பத்தில் வாகனம் திரும்புகிறது. முன்பின் அறியாத அந்தக் கிராமத்தில், அந்தச் சாலையில் ஒரு வீடு மட்டும் பளிச்சென்று தெரிகிறது. “ஆம்! அதுதான் நாம் போக வேண்டிய வீடு என்றார்கள்”. வீட்டின் முன்புறம் வெள்ளை அடித்து, கழகக் கொடிகளை ரசித்து வரைந்திருக்கிறார்கள். உட்புறச் சுவரைப் பார்த்தால் முழுக்கவும் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.
ஆனால் அது விகாரமாகத் தெரியவில்லை; மாறாக வித்தியாசமாகத் தெரிந்தது. ஆம்! அந்தக் கருப்புச் சுவரில், வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை முழுவதுமாகப் பார்க்கிற போது, அந்த வீடே ஓவியமாகக் காட்சியளித்தது!
கை குலுக்குவதே சமத்துவம்!
இதற்கிடையில் அந்தத் தெருவில் வாகனம் நுழைந்த போது, சற்று உயரமாக, அதே அளவு கம்பு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். தூரத்திலேயே வாகனத்தின் கொடியைக் கண்டு, அனைவரையும் வாங்க, வாங்க என வரவேற்றார். இறங்கியதும் சிலர் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். ஏன்… தேவையில்லாமல் இரண்டு கைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? கைகுலுக்க ஒற்றைக் கை போதும், ஆசிரியர் என்ன சொல்லி இருக்கிறார்? கைகூப்புவதை விட, கைகுலுக்குவதே சமத்துவம் என்று சொல்லி இருக்கிறார் எனத் தொடக்கத்திலே அதிரடி கொடுத்தார்!
அதேபோல தூரத்தில் வந்த வாகனத்தைச் சரியாகக் கண்டுபிடித்ததன் மூலம் அவரின் பார்வை துல்லியமாக இருக்கிறது! பேசத் தொடங்கிய பின் கவனித்ததில் அவரின் காதுகள் பிழை இல்லாமல் கேட்கின்றன! வயதானவர் என் நாம் தவறாக நினைத்துக் கொண்டு நிதானமாகப் பேசினால், அவரின் சிந்தனைகள் இன்னும் இளமையோடும், கூர்மையோடும் காணப்படுகின்றன!
மன தைரியம்!
எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாகச் சென்றது உரையாடல்! வயது 23 எனச் சொல்வதைப் போல, உற்சாகமாய் சொல்கிறார் வயது 83 என்று! ஆம்! இருக்காதா பின்னே! கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலைக் குன்றி, ஆபத்தின் வாயில் வரை சென்று வந்துள்ளார். மாவட்டக் கழகத் தோழர்கள் எல்லாம் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றுள்ளனர். உடல் அளவில் துன்பம் இருந்தாலும், சிந்தனை அளவில் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதைவிட பெரும் உற்சாகம் என்ன தெரியுமா? படுத்த படுக்கையாய் இருந்த அந்த இரண்டு மாதக் காலத்தில் தான், முகநூல், வாட்சப் போன்றவற்றைக் கற்று, தோழர்களுக்கு எல்லாம் காணொலிகள், செய்திகளை அனுப்பி வந்தாராம்! கடுமையாய் பாதிக்கப்படும் ஒரு மனிதர், கூடுதலாய் கடவுளை வேண்டுவார். இவரோ மேலும், மேலும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்! மன தைரியம் இல்லை என்போர், அதை அதிகப்படுத்த இவருடன் ஒரு வாரம் தங்கி வரலாம்!
முரட்டுக் கொள்கைவாதி!
ஆம் தோழர்களே! நாம் பேசிக் கொண்டிருப்பது அய்யா சாலைவேம்பு சுப்பய்யன் அவர்களைக் குறித்து! தன் பெயரை அவர் அப்படித்தான் எழுதுகிறார். “அண்மையில் ஆசிரியர் அவர்களை எப்போது சந்தித்தீர்கள்?”, என்ற போது, காரமடை கூட்டத்திற்கு அய்யா வந்தார்கள். அப்போது பார்த்தேன். அதற்கு முன் அய்யாவுடன் தொலைப்பேசியில் பேசினேன் என்றார். என்னைப் பார்த்து “முரட்டுக் கொள்கைவாதி” என ஆசிரியர் கூறுவார். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்கிறார்.
“அப்படி என்ன முரட்டுத்தனமாக நடந்து கொள்வீர்கள்?”, எனக் கேட்ட போது, அதை… ஏன் கேட்கிறீர்கள் என வந்தமர்ந்தார் அவரின் வாழ்விணையர் சாவித்திரி அவர்கள். எங்களுக்கு 1969 இல் திருமணம் நடந்தது. சாலைவேம்பு கிராமத்தில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் பக்தர்கள் சிலர் தீச்சட்டி ஏந்தி சென்றனர். எனது இணையர் சுப்பய்யன் உள்ளிட்ட நான்கைந்து தோழர்கள் இவர்களும் தீச்சட்டி ஏந்திச் செல்ல, கிராமமே கலவரமாக மாறியது. ஊர் கூட்டம் போட்டு எங்கள் குடும்பத்தையே 6 மாதம் தள்ளி வைத்துவிட்டார்கள். தவிர நாங்கள் வைத்திருக்கும் மளிகை மற்றும் தேநீர் கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள் என்றார்.
எனக்குத் தலைவர் ஆசிரியர்!
இதேபோன்று இரண்டு, மூன்று முறை நடந்தது. ஒருமுறை கலவரக்காரர்கள் காலை 9 முதல் மாலை வரை வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். உள்ளே எங்களை வைத்து, வெளியில் பூட்டி விட்டார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டிற்குள் வரலாம், எங்களைத் தாக்கலாம் எனும் போது, பதிலடி கொடுக்க நாங்களும் தயார் நிலையிலே இருந்தோம் என்கிறார் சாவித்திரி அம்மாள். இவர் தற்சமயம் திராவிடர் கழகத்தில் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
“எனக்குத் தலைவர் ஆசிரியர் அய்யாதான். அவர் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்”, என்கிறார் சுப்பய்யன். பெரியார் என்ன சொன்னாலும் செய்வதற்குத் தோழர்கள் தயாராய் இருப்பார்கள் எனப் படித்திருக்கிறோம். ஆசிரியர் வரலாற்றிலும் வழிநெடுக அதைக் காண முடிகிறது!
பகுத்தறிவு என்ன செய்யும்?
இந்த உரையாடலில் மிகப் பெரிய வியப்பு என்னவென்றால், பள்ளிக்கூடமே போகாத சுப்பய்யன் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இளைஞராக இருந்தபோது மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பெரியார் கூட்டத்தைச் சென்று பார்த்துள்ளார். அன்றைய தினமே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த சேலம் கிருஷ்ணசாமி என்பவரிடம் விடுதலை சந்தா கட்டியுள்ளார். இது 1970 காலகட்டம். அன்றிலிருந்து இன்று வரை நாள் தவறாமல் விடுதலை வாசிக்கிறார்; தொடர்ந்தும் வாங்குகிறார்.
“அய்யா, உங்களுக்குத் தான் வாசிக்கத் தெரியாதே என்ன படிப்பீர்கள்?”, என நாம் மடக்கிக் கேட்பது போல கேள்வி தொடுக்கிறோம். ஆனால் ஒரு பகுத்தறிவுவாதி எப்படியெல்லாம் சிந்திப்பார்கள், எப்படியெல்லாம் வாழ்வார்கள் என்பதற்குப் பெரியார் பெருந்தொண்டர்கள் பெரும் சாட்சி!
“விடுதலை” தான் பாடப் புத்தகம்!
சாலைவேம்பு சுப்பய்யன் கூறுகிறார். “ஆமாம்! எனக்குப் படிக்கத் தெரியாது. எனக்குப் படித்துக் காட்டுவதற்காகவே ஒருவரை வேலைக்கு வைத்திருந்தேன். அவர் பெயர் கருப்பசாமி. அவருக்குச் சரியான வருமானம் இல்லை. எனவே மூன்று வேளை உணவு கொடுத்து, என்னிடமே வைத்துக் கொண்டேன் என்கிறார். பிற்பாடு அவர் அடிக்கடி விடுமுறை எடுக்கத் தொடங்கினார். எனக்கோ விடுதலை பார்க்காமல் இருக்க முடியாது.
இந்நிலையில் வைராக்கியமாய் ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை அறிந்து, எழுத்துக் கூட்டி முயன்று, முழுமையாக வாசிக்கும் நிலையை எட்டினேன். ஆக இன்றைக்கு எனக்கு எழுதத் தெரியாது, ஆனால் வாசிக்கத் தெரியும். காரணம் விடுதலை என ஒரு சரித்திர சம்பவத்தைச் சாதாரணமாய் சொல்லிவிட்டுப் போகிறார் சுப்பய்யன் அவர்கள்!
எங்கள் கடையில் ஒரே குவளை தான்!
“நாங்கள் மளிகைக் கடை, தேநீர் கடை திறந்து 53 ஆண்டுகள் ஆகப் போகிறது. திருமணம் முடித்த கையோடு தொடங்கப்பட்டது. நாங்கள் இருவரும் தான் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார் சாவித்திரி அம்மாள். எங்கள் கடையில் எல்லோரும் சமம் தான். இரட்டை குவளை முறை தீவிரமாய் இருந்த அந்தக் காலத்திலேயே நாங்கள் அதைப் பின்பற்றியதில்லை. எல்லோருக்கும் ஒரு குவளை தான் என்பதாலே பெரும்பாலான மக்கள் எங்களைத் தவிர்த்தார்கள் என்கிறார் சாவித்திரி அம்மாள்!”
“உங்கள் குழந்தைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்களா?”, என ஒரு கேள்வி கேட்டோம். “அட போப்பா… எங்களுக்குக் குழந்தையே கிடையாது”, என்கிறார் சுப்பய்யன் அவர்கள். குழந்தைகள் இல்லாததாலே இந்தக் கிராமத்தில் இவ்வளவு எதிர்ப்புகளையும், கலவரங்களையும் தாண்டி, நாங்கள் தைரியமாய் வாழ்கிறோம் என்கிறார். ஒருவேளை குழந்தைகள் இருந்திருந்தால் பாசத்தில், பயத்தில் ஊரை விட்டுப் போயிருப்போம் இல்லையேல் பாதியிலேயே கொள்கையை விட்டிருப்போம் என்கிறார். எனவே குழந்தைகள் இல்லாதது கூட எங்களுக்கோர் நல்ல வாய்ப்புதான் என்கிறார் 83 வயது நிரம்பிய இன்றைய தலைமுறை!
சட்டசபையில் நான் எடுத்த படம்!
இளம் வயதில் வேறென்ன விசயங்களைத் தீவிரமாய் செய்தீர்கள் என நினைவலைகளைச் சற்றுக் கிளறினோம். யோசித்துப் பார்த்து ஒரு செய்தியைக் கூறினார். அவர் ஊருக்குப் பக்கத்தில் காரமடையில் “கபாலம்” கொடுப்பது என்கிற மூடநம்பிக்கைகள் பெரியளவில் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது ஒரு சாமியார் தன் வாயில் வாழைப்பழத்தை வைத்துக் கொள்வார். குழந்தைகள் இல்லாத மகளிர் தம் வாயால் அந்தப் பழத்தை எடுத்து சாப்பிட வேண்டும். இது மக்கள் ஆதரவோடு நடைபெற்ற காலகட்டம். எந்தப் பத்திரிகையாளர்களும் ஒளிப்படம் எடுக்கக் கூட தயாரில்லை. அப்போது தான் நமது சுப்பய்யன் அவர்கள் துணிச்சலோடு படம் எடுத்துள்ளார். அது “உண்மை” இதழில் அட்டைப்படமாக வந்துள்ளது.
அப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த உண்மை இதழை எடுத்துக் காட்டி மூடநம்பிக்கைகள் குறித்துப் பேசினாராம். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என்கிறார் சுப்பய்யன் அவர்கள்.
அதிகாலை 5 மணிக்குப் பிரச்சாரம்!
அதிகாலை நேரத்தில் கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பாடல் போடுவார்களே, அதேபோல தம் வீட்டு மாடியில் ஒலிபெருக்கிக் கட்டி பெரியார் பாடல்களை ஒலிபரப்பு செய்வாராம். காவல்துறை, வட்டாட்சியர் வரை வந்து வேண்டி விரும்பிக் கேட்டுப் பாடல்களை நிறுத்தி வைத்தார்களாம். இதென்ன பிரமாதம், இதைவிட வேறொன்றும் இருந்ததாம். சாலைவேம்பு கிராமத்திற்குப் பேச்சாளர்கள் செல்லும் போது, இரவு அவர்கள் வீட்டிலேயே தங்குவார்களாம். அவர்களை அந்த அதிகாலை நேரத்தில் எழுப்பி ஒலிபெருக்கியில் பேச சொல்வாராம்.
மற்றொரு முக்கியமான நிகழ்வொன்றை, தம் நினைவுகளில் இருந்து எடுத்துக் கூறினார் சுப்பய்யன் அவர்கள். டில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யத் திறப்பு விழாவிற்கு சுப்பய்யன் அவர்களும் சென்றுள்ளார். அப்போது அந்தக் கட்டடத்தை உருவாக்கிய “மேஸ்திரிக்கு” பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தாராம். இது ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டில் நடந்ததாம். இந்த நிகழ்வும் மறக்க முடியாதது என்று கூறி, அந்த ஒளிப் படத்தையும் எடுத்துக் காட்டினார்.
சாலையில் ஓரமாக நின்று…
எப்போதும் கையில் ஒரு பை இருக்குமாம். அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கும். அதில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் என ஒருவர் விடாமல் விற்பனை செய்வாராம். சிலருக்கு நூல்களைப் பரிசாகவும் வழங்குவாராம். காரமடை சாலையில் ஒரு ஓரமாக நின்று கொண்டே போவோர், வருவோரை பெயர் சொல்லி அழைத்து, பெரும் நன்கொடை பெற்று விடுவாராம்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக இயக்கத்தில் இருந்து ஒரு நூல் வந்துள்ளது. அதையும் காரமடை கடைத் தெருவில் நின்று கொண்டே விற்று முடிப்பாராம். ஒருவரை அழைத்து ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு எத்தனை கன அடி நீர் என்று கேட்பாராம். அவர்கள் தெரியாது என்றவுடன், இந்தப் புத்தகத்தில் அந்த விவரம் உள்ளது. வாங்கிப் படியுங்கள் என அவருக்கும் விற்பனை செய்து விடுவாராம்.
அயோக்கியனா? யோக்கியனா?
சென்ற மாதம் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்வை சாவித்திரி அம்மா பகிர்ந்து கொண்டார்கள். கால்நடை மருத்துவர் ஒருவர் இவர்களின் கடைக்கு வந்துள்ளார். கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் எனச் சுவரில் ‘சாக்பீஸ்’ மூலம் எழுதப்பட்டுள்ளது. அவர் யாருக்கும் தெரியாமல் அயோக்கியன் என்பதில் உள்ள ‘அ’ என்கிற எழுத்தைக் கையால் அழித்துவிட்டாராம்.
அப்படியென்றால் “கடவுளைப் பரப்பியவன் யோக்கியன்”, என்று வருகிறது. இதை சாவித்திரி அம்மாள் பார்த்து விட்டு, எப்படி நீங்கள் அழிக்கலாம் எனச் சத்தம் போட்டுள்ளார். இதையறிந்த சுப்பய்யன் அவர்களும் கடுமையாகப் பேசியுள்ளார். “விளையாட்டுத் தனமாகச் செய்துவிட்டேன்”, என்று கூறி, இறுதியில் மன்னிப்புக் கேட்டுச் சென்றாராம் கால்நடை மருத்துவர்.
கொள்கை முழக்கம்!
சுப்பய்யன் அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர்கள் பட்டியல் நீளமானது. இவர் மட்டுமின்றி சாவித்திரி அவர்களும் மலைவாழ் மக்கள் வரை சென்று கூட பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இப்படியான முரட்டுக் கொள்கையாளர் தம் கிராமத்திற்குப் பயணிகள் நிழற்கொடை கட்டிக் கொடுத்துள்ளார். அதை ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வைத்துத் திறக்க சொல்லியுள்ளார். அதேபோல சாலைவேம்பு அரசுப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் முழுக்க இவர் ஏற்பாடு. மேட்டுப்பாளையம் மாவட்டக் கழக நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது நன்கொடை கேட்டுச் சென்றால் கொடுக்க மாட்டாராம். அனைத்துச் செலவுகளையும் செய்யுங்கள், எவ்வளவு பற்றாக்குறை வருகிறதோ கேளுங்கள் தருகிறேன் என்பாராம்.
பெரியார்-1000 போட்டித் தேர்வுக்கு நிரந்தரமாக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து, அது வைப்புத் தொகையாக இருக்கிறதாம். அதன் வட்டிதான் இன்றளவும் செலவுக்குப் பயன்படுகிறது. தவிர வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கான பரிசுத் தொகை ரூ. 10 ஆயிரமும் இவரே கொடுப்பாராம்.
கடை முழுக்க கொள்கை முழக்கங்கள்! வேட்டி கரையில் கூட ‘கடவுள் இல்லை’ என்கிற வாசகம் ‘எம்பிராடிங்’ மூலம் நெய்யப்பட்டுள்ளது. வேட்டி செலவை விட எம்பிராடிங் அதிகம் வரும் போல! மேட்டுப்பாளையத்தில் இவரைத் தெரியாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இருக்க முடியாது என்கிறார்கள்.
நானும் களத்தில் இறங்கிவிடுவேன்!
“கொள்கையில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள். உங்களுக்கும் திருமணம் ஆகி 54 ஆண்டுகள் ஆகிறதே, சுப்பய்யன் அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”, சாவித்திரி அம்மாவிடம் கேட்டோம்.
“கொஞ்சம் வேகமாகத் தான் பேசுவார். அவ்வப்போது நானும் அமைதிப்படுத்துவேன். வேறு சில நேரங்களில் மற்றவர்கள் வீட்டுக்காரரிடம் வம்பிழுப்பார்கள். சிறிது நேரம் பொறுமையாக இருப்பேன். சூழல் மாறினால் நானும் களத்தில் இறங்கிவிடுவேன், பயப்பட மாட்டேன் என்கிறார் சிரித்துக் கொண்டே!
அந்த இரவு நேரத்தில் சுவையான தேநீர் முடித்துக் கிளம்பினோம்! பயணத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.வேலுச்சாமி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், காரமடை ஒன்றிய செயலாளர் அ.மு.ராஜா உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர்.