பெரம்பலூர்,டிச.22- ”தொடர் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது,” என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூரில் அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் பெருமளவில் சிக்கி, கடந்த 3 நாட்களாக தவித்துக் கொண்டிருந்தனர்.சொந்த ஊருக்கு செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கி உள்ளது.
ஏற்கெனவே, கனமழையின் போது, திருநெல்வேலி- திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சாலை துண்டிப்பின் காரணமாக, பாதி வழியில் அவதிப்பட்டனர்.
அவர்களையும், திருச்செந்தூருக்கு அழைத்துச் செல்லும் பணியும் போக்குவரத்துத் துறை சார்பில் கட்டணமில்லாமல் மேற்கொள்ளப்பட்டது.
அதுபோல, சிறீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவித்த பயணியரையும் மீட்டு, பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங் களில், 95 சதவீதம் போக்குவரத்து சேவை நடை பெறுகிறது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாததால், போக்குவரத்து சேவையை சில பகுதிகளில் வழங்க முடியாத நிலை உள்ளது.
அப்பகுதிகளில், வெள்ளநீர் வடிந்த உடன் பேருந்து களை இயக்கும் வகையில், போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், தொடர் மழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகள் நீரில் மூழ்கி உள்ளன; பல பேருந்துகள் சேதமடைந் துள்ளன. ஆய்வுப் பணி முடிந்தவுடன் சேதத்தின் மதிப்பு தெரிய வரும்.
மேலும், அரசுப் பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
– இவ்வாறு அவர் தெரிவித்தார்.