டிசம்பர் 19 முதல் 30 ஆம் தேதிவரை தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரப் பெருமழை நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தந்தை பெரியார் இறுதி முழக்கத்தின் (1973) 50 ஆம் ஆண்டு இது. அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு நாம் கண்ட களங்கள் – அறைகூவல்கள் ஏராளம், ஏராளம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய டிசம்பர் 19 ஆம் தேதிமுதல் 30 ஆம் தேதிவரை தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரப் பெருமழை நடக்கட்டும், நடக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பாசமிகு கழகப் பொறுப்பாளர்களான கொள்கை உறவுகளே,
பகுத்தறிவாளர் கழக மற்றும் பெரியாரிஸ்டுகளாக உள்ள எக்கட்சியினர்களே,
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்
டிசம்பர் 19 (1973)
கட்சி, இயக்கம் தாண்டி தனிப்பட்ட முறையில் பெரியார் தொண்டால் கனிந்த பயன்பெற்று – அதற்காக நன்றி காட்ட மறவாத உடன்பிறப்புகளே!
உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்கள் அனை வரது தகவலுக்கும் அல்லது நினைவிற்கும் முன்வைக்க விரும்புகிறோம்.
வருகின்ற (2023) டிசம்பர் 19 ஆம் தேதிதான் தந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் 50 ஆண்டுகளுக்குமுன் அறப்போர் முழக்கமான தனது இறுதி முழக்கத்தைச் செய்த வரலாற்றுக்குரிய நாளாகும்.
அதன் பிறகு நம் அறிவு ஆசான் நான்கு நாள்கள் கழித்து உடலால் நம்மை விட்டுப் பிரிந்தார்.
டிசம்பர் 24 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் உறுதியேற்பு நாளாக – ‘‘கொள்கை, வேலைத்திட்டம் – இவற்றில் அய்யா தொடங்கி முடிவுறாத களப் பணியில் நாம் ஒவ்வொருவரும் கடமையாற்றவதில் நமது பங் களிப்பு – எவ்வித சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்” என்ற உறுதியெடுத்து, இலட்சியப் பணியை, இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம் – வெற்றி இலக்குகளை அடைந்தோம், அடைகிறோம்!
அறிவு ஆசான் இடிமுழக்கம் போன்ற இறுதி முழக் கத்தை தியாகராயர் நகரில் நிகழ்த்தி, நம்முன்னே உள்ள அறப்போர் களத்தில் நம்மை அர்ப்பணிக்கத் தூண்டி னார்! இவ்வாண்டு (2023) 50 ஆண்டு நிறைவு நாள்!
ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று, சமூகநீதியை அமைதியான முறையில் வென்றெடுத்தோம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
மண்டல் அறிக்கை உயிர் பெற்று, உரம் பெற்று, உலா வருகிறது.
இந்த அரை நூற்றாண்டில் நமது இயக்கம் (திராவிடர் கழகம்) – நம் அறிவாசான் நின்ற களத்தில் நாம் தொடர்ந் தோம் – தொய்வின்றிப் போராடி, ஜாதி – தீண்டாமைக் கருநாகம் கோவில் கருவறைக்குள் ஒளிந்து பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்து, அதனை அங்கிருந்து விரட்டி யடித்து, ஜாதி ஒழிப்பின் மிக முக்கிய கட்ட அறப்போரில் பெரும் அளவு வெற்றி கண்டுள்ளோம்.
விட்ட பணி வென்ற பணியானது. திராவிட முன்னேற் றக் கழக ஆட்சியின் – அண்ணா வழியில் அயராது உழைக்கும் அருமை தி.மு.க. ஆட்சியின் தொடர் செயல்பாடுகள், தனி சட்டமியற்றல், உச்சநீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டம், ஆட்சி அமைத்த பின், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய எடுத்துக்காட் டான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தந்தை பெரியார் விரும்பிய – ஆணையிட்ட லட்சியமான அனைத்து ஜாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்ச கர்கள் ஆணை நியமனங்கள். 2021 ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது!
அய்யா மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் நடத்திய ‘‘இராவண லீலா!”
இதற்கிடையில், அடிபட்டு வெளியேறிய ஆரிய ஜாதி வர்ணாசிரமப் பாம்பு அதன் வாலை ஆட்டி, வாயிலிருந்து நஞ்சைக் கக்கி நம்மீது, ஆட்சிமீது பாய்ச்சிட மும்முரம் காட்டுவதில் குறைவில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
அய்யா மறைவிற்குப் பின், அன்னை மணியம்மை யாரின் ஆற்றல்மிகு தலைமை, நெருக்கடிகாலம் என்ற இருண்ட காலத்திலும் ஒளியேற்றி, நம்பிக்கையை நம்முள் விதைத்து, இயக்கப் பணிகளில் தொடர்ந்து தொய்வில்லை – கொள்கை நேர்மையுடன் தொடர்ந்தது.
அன்னையாரின் ‘இராவண லீலா’ என்ற பண்பாட்டுப் பாதுகாப்புக்கான எதிர்வினைப் போராட்டம் – இந்தி யாவையே திரும்பிப் பார்க்க வைத்து, புதிய எழுச்சியை ஏற்படுத்தியது!
சுயமரியாதை இயக்கப் பொன்விழா அம்மா தலை மையில் தஞ்சையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
இப்படிப் பல பல!
எத்தனை எத்தனை மாநாடுகள் –
நாடு தழுவிய தொடர்ப் பிரச்சாரங்கள் –
அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் –
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் செயல்பாடுகள்-
கல்வி நிறுவன வளர்ச்சிகள் –
நூல்கள் வெளியீடுகள் –
சேலத்தில் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு (27.8.2019)
என்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
‘‘பெரியார் உலகம்” என்ற மிகப்பெரிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்!
நாம் சந்தித்த அறைகூவல்கள் ஏராளம்!
அதன்பிறகு, நம் அனைவரது கூட்டு ஒத்துழைப்புடன் எதிர்கொண்ட அறைகூவல்கள் ஏராளம்!
எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோது, தந்தை பெரியார்தம் உயிர்மூச்சுக் கொள்கையான ‘சமூகநீதியில் பொருளாதார அளவுகோல்’ என்ற ஒரு புதுக் குழப்பம். அதனை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சாரப் பெரும் புயல் வீசி, அவரை மறுபரிசீலனை செய்ய வைத்ததோடு, 31 சத விகிதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு – தமிழ்நாட்டில் 50 சதவிகிதமாகவும் கூடி, புது ஆணை யைப் பெற வைத்தோம்!
68 சதவிகிதம் அப்போது! அய்யா மறையவில்லை என்ற விழிப்புணர்ச்சியை வையத்திற்குப் பறைசாற்றியது அது!
இவை போன்ற பலப் பல சோதனைகள்!
சட்டப் போராட்டம் நடத்தி
அறக்கட்டளையைக் காப்பாற்றினோம்!
வருமான வரித்துறைமூலம் இயக்கத்திற்கு ஆரிய மும், துரோகமும் சேர்ந்து ஏற்படுத்திய இமாலயத் தொல் லையை இல்லாது செய்த சட்டப் போராட்டத்தில் வென்று நிலை நிறுத்தி, இன்றும் வளர்ந்தோங்கி வரும் நிலை.
இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது – தி.க.வும் – தி.மு.க.வும் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கிகள். தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமையவும், அதனை தக்க ஒருங்கிணைப்போடு கொண்டு செல்லவும் நமது அடக்கமும், உறுதியும்மிக்க பணி தொடருகிறது!
1967 இல் திராவிடர் இயக்க ஆட்சியின் தொடர்ச்சி யின் மாட்சியை உலகுக்குக் காட்டத் தொடங்கிய முதல மைச்சர் மானமிகு அறிஞர் அண்ணா, அவ்வாட்சியை அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கே காணிக்கையாக்கி வரலாறு படைத்தார் என்பதும், அதன்மூலம் ‘‘என் வலி குறைந்தது” என்று தந்தை பெரியார், மருத்துவமனை யிலிருந்து சீர்பெற்ற உடல்நலத்தோடு தொடர்ந்ததும், அடுத்து கலைஞரை முதலமைச்சர் பொறுப்பேற்க அன்புக்கட்டளை பிறப்பித்து, அவர் ஆட்சிமூலம் ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கொள்கையை நிறைவேற்ற கால்கோள் இட்டதும், அதனை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்ற திக்கெட்டும் புகழும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது செயல்பாடும், ‘‘எங்களது பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடலே” என்றும், ‘‘ஆசிரியர் எங்கே அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செல்வேன்” என்று பிரகடனப்படுத்தியது – தாய்க்கழகம் என்ற ஆலமரத்தின் பலம், அதன் பழுதுபடாத விழுதுகளாலும் – வேர் மேலும் பலமாகிறது என்பதையே இந்த அரை நூற்றாண்டு அரசியல், பண் பாட்டு, சமூக வெளியில் பளிச்சென்று பாடம் சொல்கிறது!
எப்போராட்டமானாலும் இளைஞர்கள் – முதியவர் கள், ஆண்கள் – பெண்கள் என்ற பேதமின்றி, நூற்றுக் கணக்கில் காரக்கிரகம் செல்ல என்றும் தயார் நிலையில் உள்ளதால், இன எதிரிகளும், கொள்கை மாய்மாலர்களும் குலை நடுங்குகின்றனர்!
கடுகு சிறியதுதான் –
ஆனால், காரம் குறையாது!
வீரம் எப்போதும் நம்மை வெற்றி வாகை சூடச் செய்யும்!
நம்மை வழிநடத்துவது ‘பெரியார் தந்த புத்தி’ – பேராயுதம்!
டிசம்பர் 19 தொடங்கி 30 ஆம் தேதிவரை
தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திடுவீர்!
அதனை விளக்கி, 18.12.2023 தொடங்கி, இம்மாதம் இறுதிவரை, டிசம்பர் 24-யும் உள்ளடக்கி, தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பெருமழை அடைமழையாகப் பொழியவேண்டும்.
தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பட்டியல் தயார் செய்து – மாவட்ட, ஒன்றிய கழகத்தவர்கள் ஏற்பாட்டினை செய்து ‘விடுதலை’க்கு அனுப்புங்கள்!
நன்றி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
திருச்சி
16.12.2023
குறிப்பு: எந்தத் தேதியில், எந்த ஊரில், எந்தப் பேச்சாளர் எனும் பட்டியலை நாளை ‘விடுதலை’யில் காணலாம்!